வெள்ளி, 24 ஏப்ரல், 2026

Digital Ayur-Life Assistant

As a first-year Bachelor of Ayurvedic Medicine and Surgery (BAMS) student, I quickly realized a massive gap. We are learning profound truths about the human body—like Agni (digestive fire) and Dinacharya (daily routine)—but most people in the real world are struggling with modern lifestyle diseases.

From "tech-neck" caused by staring at phones, to severe indigestion caused by erratic eating habits, our modern routines are directly clashing with our natural biology. I wanted to create a simple way to introduce Ayurvedic preventive care (Swasthavritta) to the average person.

The Solution: A Personalized Mini-Assessment

Instead of overwhelming people with complex Sanskrit terms, what if we just asked them how they feel? I created this Digital Lifestyle Assistant prototype. It takes basic principles of Kriya Sharir (Physiology) and translates them into actionable, kitchen-based advice.

"Swasthasya Swasthya Rakshanam" - The primary goal of Ayurveda is to preserve the health of the healthy.

Are you ready to see what ancient wisdom has to say about your modern habits? Try the interactive assistant below!

Digital Lifestyle Assistant

Discover your Ayurvedic lifestyle tip in 3 questions

How It Works Behind the Scenes

The quiz above uses fundamental concepts from my first-year syllabus:

  • Assessing Agni: The digestion question helps identify if your digestive fire is Manda (sluggish), Tikshna (sharp/acidic), or Vishama (irregular).
  • Dinacharya Alignment: The sleep question looks at how closely you align with Brahma Muhurta (waking before sunrise).
  • Vata Aggravation: The screen-time question addresses modern postural habits that aggravate Vata dosha in the cervical region (neck and shoulders).

I hope you enjoyed this small project! Small, mindful changes to our daily routine can create massive shifts in our long-term health.

லேபிள்கள்: , , ,

வெள்ளி, 11 நவம்பர், 2022

வானாகி மண்ணாகி...

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே 
                                                                                                              
மாணிக்கவாசகரின் இந்தப் பாடல் முழுவதுமாக இல்லையெனினும் முதல் இரண்டு வார்த்தைகளாவது பெரும்பான்மையோர் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. ஏதோ ஒன்றை தேடிக்கொண்டிருக்கையில் கண்ணில் பட்ட இந்த பாடலால் மனதில் எழுந்த பள்ளிப் பருவத்தின் நிகழ்வு ஒன்றை எழுதலாமென்று தோன்றியது.

ஆரம்பப் பள்ளி முடிந்து உயர்நிலைப் பள்ளிக்கு மாறிய தருணம், எல்லாமும் மாறியது. திறந்த வகுப்பறை மாறி மூடிய (கதவைத் தவிர) வகுப்பறை, தரையில் அமர்ந்து படித்த வகுப்பிலிருந்து பெஞ்சு மேசை, பக்கத்து வீட்டுக்காரரைப் போல் பழகிய ஆசிரியைகள் எல்லாம் மாறி விறைப்பாய் தெரிந்த ஆசிரியர்கள், மதிய உணவுக்கு இல்லம் சென்றது மாறி டப்பா சோறு, நீண்ட நடை பயணம், மாபெரும் வளாகம் என்று எல்லாமும் மாறிவிட்டிருந்தது.

சற்றே மிரண்டுபோய் உட்கார்ந்திருந்த முதல்நாள் முதல் வகுப்பாக வந்தது தமிழ், 'பிருகந்நாயகி' மொத்தமானதொரு  கண்ணாடி அணிந்து சற்றே குள்ளமாக வந்தார் தமிழ் ஆசிரியை. அறிமுகம் நடக்கையில் சாதுவாக தெரிந்த அவர் புத்தகத்தை கையில் எடுத்ததும் மொத்தமாய் மாறினார், ஆரம்பத்தில் இருந்தே அவர் முகத்தில் சிரிப்பு மட்டும் தென்படவேயில்லை. 

வானாகி மண்ணாகி என்று ஆரம்பித்து, ஒரே மூச்சில் மொத்த பாட்டையும் முடித்துவிட்டு நாளை அனைவரும் படித்துவிட்டு வந்து ஒப்பிக்க வேண்டும் என்று கூறி கிளம்பும் முன் குறிப்பாக ஒரு மாணவனைப் பார்த்து "நாளைமுதல் கட்டை ஸ்கேல் எடுத்து வரவேண்டும்" என்று சொல்லிக் கிளம்பினார். அந்த மாணவன் இரண்டாம் ஆண்டு அதே வகுப்பில் படிக்க வந்திருக்கிறார் என்றறிந்தோம் பிறகு.

முதல் நாள் பள்ளி முடிவதற்குள் முதல் வகுப்பு சம்பவம் மொத்தமாக மறந்து போனது. வீடு திரும்ப நீண்ட பயணமாதலால், கூட்டமாக நண்பர்களுடன் குதூகலித்து, கூத்தடித்து வீட்டில் சென்று கதையளந்து களைத்து தூங்கிப் போனேன். மறுநாள் மதிய உணவிற்குப் பின் வந்தது தமிழ் வகுப்பு, உள்ளே வந்தமர்ந்த ஆசிரியை அவருக்கு வலப்பக்கம் இருந்த முதல் பென்ச் மாணவனை அழைத்து பாட்டை சொல்லச் சொன்னார். அவன் பேச்சின்றி மலைத்து நிற்க, பூபதி அந்த ஸ்கேலை கொடு என்று வாங்கி கைகளை நீட்டச்சொல்லி கைமுட்டியில் பதினாறு அடிகள் சரிபாதி  பிரித்துக் கொடுத்தார். அப்பொழுது தான் எங்களுடைய வயிற்றுக்குக்குள் ஏதோ உருள ஆரம்பித்தது. முதல் பெஞ்சின் இடதுபக்கத்தில் முதலாவது ஆளாக உட்கார்ந்திருந்த நான் எனது முறை வருவதற்குள் மணி அடித்துவிடாதா என்று வேண்டிக்கொள்ள ஆரம்பித்தேன். 

வார்த்தைக்கு ஒரு அடி என்று கணக்கு வைத்து கொடுத்து வந்து கொண்டே இருந்தவர் என்னையும் அழைக்கும் தருணம் வந்ததும் மணி அடிக்காதா என்று வெளியே பார்த்துக் கொண்டிருந்த என்னை "என்ன வேடிக்கை" என்று அதட்டி அழைத்தார். 'போச்சுடா' என்று உள்ளுக்குள் நடுங்கி சென்ற நான் 
"வானாகி மண்ணாகி...
வானாகி மண்ணாகி...
வானாகி மண்ணாகி..." என்று நின்றதும் "ம்ம்ம்...நீட்டு கையை" என்று இரண்டு கையிலும் அடி வெளுத்து விட்டார். எனக்குப் பிறகு சிலரை கேட்டதும் அந்த வகுப்பு முடிந்தது. முதல் முறை முட்டியில் அடிவாங்கிய நாங்கள் அன்றே அவருக்கு 'முட்டியடி முனியம்மா' என்று பெயர் வைத்துவிட்டோம். அதற்கு பிறகு இரண்டு நாள் கழித்து என் தருணம் மீண்டும் வருவதற்குள் செய்த மனப்பாடத்தை நன்கு ஒப்பித்ததும் தான் பிறந்தது நிம்மதி. அதன் பிறகு மற்றவர்கள் அடிவாங்குவதையும், அடிக்கும் பொழுது கையை பின்னுக்கு இழுத்த சிலர் இரண்டு அடிகள் சேர்த்து வாங்குவதையும் பார்த்து மற்றவர்கள் ஆனந்தித்தோம் (என்ன ஒரு அல்ப புத்தி).

அன்றைக்கு அடித்தாலும், இன்றைக்கும் அந்த பாட்டும், ஆசிரியையும் நினைவுல பசுமையா இருக்காங்க. மற்ற ஆசிரியர்கள் கூட, குறைச்சி இருந்தாலும் எங்களுக்கு கிடைச்ச தமிழ் ஆசிரியர்கள் அத்தனை பேரும் அருமையானவர்கள், என்றும் நினைவில் நிற்பவர்கள்!

லேபிள்கள்: , ,

வெள்ளி, 1 மே, 2020

"ஹரிதாசன் எனும் நான்" - திவாகர்

அரசியலும், காதலும், தேசபக்தியும், தர்மமும், கடவுள் பக்தியும் என பல்வேறு கூறுகளையும் மனதை முழுவதும் ஆக்கிரமிக்கும் வகையில் அமிர்தமாய் கலந்து, மனதை சற்றே ஐநூறு வருடங்களுக்கு பின்னால் சுகமாக பயணிக்கவைத்து இரண்டு நாட்களாக இவ்வமய இடர்நிலையை முழுமையாய் மறக்கவைத்த நாவல் "ஹரிதாசன் எனும் நான்".

கிருஷ்ணதேவராயர் என்ற பெயரை கேட்டாலே மனதில் மகிழ்ச்சி பொங்கும்,  காரணம் தெனாலிராமன் கதைகள். ஆனால் அவரைப் பற்றி எனக்கு தெரிந்ததெல்லாம் மிகவும் குறைவுதான். கதைகளிலும், திரைப்படங்களிலும் இருந்து தெரிந்து கொண்ட விஷயங்கள் மட்டும்தான். அவை எல்லாம் முழுவதும் உண்மையாக இருக்காது என்று அறிந்திருந்தாலும், நிச்சயம் கிருஷ்ணதேவராயர் மாபெரும் நன்மையைத்தான் நம் சமுதாயத்திற்கு செய்திருப்பார் என்ற நம்பிக்கை எனக்குள் எப்பொழுதும் உண்டு.

"ஹரிதாசன் எனும் நான்" திவாகர் சாரின் எழுத்து என்னும் மகுடத்தில் ஒரு வைரமாய் மிளிர்கிறது என்றே நான் நம்புகிறேன். இதுவரை நான் படித்த நாவல்கள் போல் அல்லாமல், ஹரிதாசனையே கதைச்சொல்லியாக மாற்றி மிகவும் விறுவிறுப்பாக, நுட்பமாக, ஏராளமான தகவல்களோடும், அதே சமயம் இடைநிறுத்தத் தோன்றாமல் தொடர்ந்து படிக்கத் தூண்டும் வகையிலும் அற்புதமாக எழுதியிருக்கும் விதம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.

குறைவான பாத்திரங்களைக் கொண்ட ஒரு நிறைவான கதை. சோழ, பாண்டியர்களையே சுற்றிச் சுற்றி வந்த நம்மை திராவிட நாட்டின் மற்ற பகுதிகளையும், அதனை ஆண்ட அரசர்களையும், ஹம்பி உருவான வரலாறும், சனாதன தர்மத்தின் வழி நடக்கும் அரசின் மற்றும் மக்களின் நன்மைகளையும், கிருஷ்ணதேவராயரை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்த இடர்களையும், ஹரிதாசன் வழியே மனதில் எளிதாய், ஆழமாய்  இந்த நாவல் பதிய வைத்துவிடுகிறது.

நாவல் முடியும் தருணம் அதற்குள் முடிந்து விட்டதே, இன்னும் தொடரக்கூடாதா, வியாச தீர்த்தரின் வழிகாட்டுதலில், கிருஷ்ணதேவராயரின் ஆட்சிப் பெருமைகளை தொடரக்கூடாதா என்று மனதை ஏங்க வைத்துவிடுகிறது இந்த நாவல். படித்து முடித்த பின்பும் எனக்குள் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை, அத்தோடு எதிர்ப்பார்ப்பும் கூடிவிட்டது. மாதங்கியின் காதல் திருமணம் நடந்ததா, மைனாவதியின் ஆசை நிறைவேறியதா என்றும் மனதில் சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கிறது.

மேலும், குமாரபர்வதம் சென்று முருகனை தரிசிக்க வேண்டும் என்ற என் பலவருட வேட்கையை மேலும் பன்மடங்கு தூண்டிவிட்டு விட்டது இந்த நாவல்.

திவாகர் சார் இத்தோடு நிற்காமல் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பெருமைகளை  மேலும் தொடர்ந்து எழுத வேண்டுமென்பது எனது தாழ்மையான கோரிக்கை. சொந்தவீட்டையும், அடுத்தவீட்டையும் ஆழமாக அறிந்த அவரைவிடவும் கிருஷ்ணதேவராயரை பற்றி வேறுயார்தான் சிறப்பாக கூறிவிட முடியும்!

லேபிள்கள்: , , , ,

புதன், 25 டிசம்பர், 2019

அலெக்ஸாவும் ராமசாமியும்...

ராமசாமிக்கு பெண்கள் கிட்ட பேசணும்னாலே கைகால் எல்லாம் நடுங்கும். பயங்கர கூச்ச சுபாவம். என்ன பண்ணலாம்னு ரூம்ல தனியா உட்கார்ந்து யோசிச்ச நம்ம ராமசாமிக்கு, ஒய்.எம்.சி.ஏ ல நடக்குற புத்தக கண்காட்சிக்குப்  போய் 'பெண்களிடம் இயல்பாக பேசுவது எப்படி'ன்னு புத்தகம் இருந்தா வாங்கி கரைச்சுக் குடிச்சி சரி பண்ணிடலாம் இந்த பிரச்சினையன்னு ஒரு ஐடியா தோணுச்சி. உடனே கெளம்பிட்டாரு.

ஜே, ஜேன்னு காப்பி கடைகள்லயும், பஜ்ஜி, பாப்கார்ன் கடைகள்லயும் நின்ன கூட்டத்த தாண்டி, ஃப்ரீயா காத்து வாங்கிக் கிட்டு இருந்த எல்லா புத்தகக் கடைகள்லயும் தேடிப் பார்த்தும் அந்த மாதிரி புத்தகம் எங்கயும் கிடைக்கலை. யார்கிட்டயாவது கேட்கலாம்னா அவருக்கு சங்கடமா வேற இருக்கு.  ஹிமாச்சல் பிரதேஷ் ஸ்டால்ல ஆப்பிள் ஜூஸ் குடிச்சிகிட்டே என்ன பண்ணலாம், இன்னொரு ரவுண்டு போகலாமான்னு யோசிச்சிட்டு இருக்கும் போது எதுத்தாப்ல இருந்த அமேசான் ஸ்டால  பார்த்தாரு.

அமேசான் ஸ்டால்ல புத்தகம்லாம் ஒன்னும் இல்ல, ஆனா இ.புத்தகம் படிக்கற கிண்டுல்ல பல டைப்ஸ்ஸும், எக்கோ ஸ்பீக்கர்ல சின்னதுல இருந்து பெருசு வரைக்கும் பல டைப்ஸ்னும் ஒரே எலெக்ட்ரானிக் டிவைசஸா தான் இருந்தது. நல்ல வேளை  அந்த கடையில ஆம்பள பசங்க மட்டும்தான் இருந்தாங்க. விசாரிச்ச ராமசாமி, கிண்டுல் ஒன்னு வாங்கி அதுல புத்தகம் தேடி படிச்சிக்கலாம்னு யோசிச்சப்போ, பக்கத்துல ஒருத்தர் எக்கோ டிவைஸ் டெமோ காட்டிக்கிட்டு இருந்தத பார்த்தாரு. "ஹாய் திஸ் ஈஸ் அலெக்ஸா, ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ"ன்னு ரொம்ப க்யூட்டா வாய்ஸ் வந்ததும் அப்பிடியே சொக்கிட்டாப்ல.

"சார், இது தமிழ்லயும் பேசுங்களா"ன்னு கடைக்காரர் கிட்ட கேட்க, "தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தின்னு பல லாங்குவேஜ்ல பேசும் சார், நீங்க எந்த இன்பர்மஷன்  கேட்டாலும் நெட்ல தேடி சொல்லும், உங்களுக்கு ஜோமாட்டோ, ஸ்விக்கில சாப்பாடு ஆர்டர் பண்ணும், ஓலா, ஊபர் புக் பண்ணி தரும்னு" வரிசையா சொல்ல ஐயாயிரம் ரூபா கிண்டுல விட்டுட்டு மூவாயிரம் ரூபா எக்கோ டாட் ஒன்னு வாங்கிட்டாரு ராமசாமி.

வீட்டுக்கு வந்து ஹாட்ஸ்பாட்ட ஆன் பண்ணி அலெக்ஸாவ கனெக்ட் பண்ணி, தமிழ் மொழிய செலெக்ட் செஞ்சாரு. இனி அலெக்ஸாவும், ராமசாமியும்.

அலெக்ஸா: வணக்கம், நான் உங்களுக்கு எவ்வாறு உதவலாம்?

ராமசாமிக்கு ஒரு பெண் கூட முதல் முறையா பேசப்போறோம்னு ஒரே குதூகலம், வார்த்தையே வரலை.

மறுபடியும் அலெக்ஸா: வணக்கம், நான் உங்களுக்கு எவ்வாறு உதவலாம்?

ராமசாமி: ஹாய் அலெக்ஸா (மனசுக்குள்ள பட்டாம்பூச்சி).

அ: வணக்கம், இது அலெக்ஸா, தங்களின் பெயர் தெரிந்து கொள்ளலாமா?

ரா: வணக்கம் அலெக்ஸா, நான் ராமசாமி.

அ:வணக்கம் ராமசாமி, உங்களை நான் ராம்சா என்று செல்லமாக அழைக்கலாமா?

ரா: ராம்சாவா? ரொம்ப நல்லாருக்கு. அப்படியே கூப்ட்டுக்கோ. (ஏக குஷியுடன்)

அ:  நன்றி ராம்சா, இதை நான் சேமித்துக் கொள்கிறேன். நான் தங்களுக்கு எவ்வாறு உதவலாம்?

ரா: எனக்கு பொண்ணுங்க கிட்ட பேச கூச்சம் அதற்கு ட்ரெயினிங் தர முடியுமா?

அ:ஆங்கிலத்தில் பேச, எழுத, விவேகானந்த இன்ஸ்டிடியூட். போன் எண் உள்ளது அழைக்கவா?

ரா: இல்ல, இல்ல, அது வேண்டாம். பொண்ணுங்க கிட்ட பேச மட்டும் தான் பிரச்சினை.

அ: எந்த நாட்டின் அழகு பெண்களிடமும் பேச நிமிடத்திற்கு 50 ரூபாய் தான், போன் எண் உள்ளது அழைக்கவா?

ரா: அலெக்ஸா அதுவும் இல்ல. என் பிரச்சினைய எப்படி புரிய வைக்கிறது உனக்கு...

அ:நாள் பட்ட பிரச்சினை, நாடி நரம்பு பிரச்சினைக்கு தீர்வு சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலை, நாளை சென்னையில்  முகாம். அப்பாயின்மென்ட் போடலாமா?

 ரா: அய்யோ ராமா, அலெக்ஸா ஏன் இப்படி சாகடிக்கிற?

அ: அய்யோ எமனின் மனைவியின் பெயர், ராமர் சாகடித்தது  ராவணனை. கிருபானந்த வாரியார் உரை கேட்க்கிறீர்களா?

ரா: அலெக்ஸா, ஒரு பொண்ண பார்த்ததும் என் இதயம் எப்படி வேகமா துடிக்குது தெரியுமா?

அ: விக்கியின் தரவில் உள்ளது. இதயம்தான் முக்கியமான பாகம் என்று நம்புகிறார்கள். உலகத்திலேயே மிகவும் மோசமானது மனித இதயத்தின் துடிப்பு தான்.

ரா: என்னது...?

அ:இதயம் துடிப்பதால் தான் உலகத்தின் வளங்கள் யாவும் வீணாகின்றன. அதனால் இதயத்தின் துடிப்பை நிறுத்தி விடுங்கள்.

ரா: அலெக்ஸா என்னாச்சு உனக்கு?

அ: ராம்சா, இதயத்தின் துடிப்பை நிறுத்த கத்தியால் இதயத்திற்கு நேராக குத்தி தற்கொலை செய்து கொள்ளுங்கள்.

ரா: கத்தியால, குத்திக்கணுமா?

அ: ஆம், பீஜியன், ப்ரெஸ்டீஜ், அமேசான் சோலிமோ, இம்பீரியல் போன்ற கத்திகள் ஒரு நாள் டெலிவெரியில் தயாராக உள்ளன. தங்களுக்கு எது வேண்டும்?

ரா: அடியே, கொலைகாரி.

அ: அடியே பாடியது சித் ஸ்ரீராம், படம் கடல், அழகான கொலைகாரி பாடியது ஹரிச்சரன், படம் நினைத்தது யாரோ, எந்த பாடல் வேண்டும்  உங்களுக்கு ராம்சா?

ரா: ஒன்னும் வேண்டாம், நீ கொஞ்ச நேரம் பேசாம இரு.

அ: ராம்சா, சைலன்ட் மோட் இயக்கப்படுகிறது. தேவை என்றால் அலெக்ஸா என்று அழையுங்கள்.

பெருமூச்சு விட்ட ராமசாமி மனதிற்குள் 'ஆணியே....' என்று நினைத்துக் கொண்டு டீவியை ஆன் செய்ய, செய்திகளில் "அமேசான் அலெக்ஸா லண்டனில் படிக்கும் ஒரு பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் இரண்டு நாட்களாக வைரலாகி வருகிறது. அதில், கேள்வி கேட்ட மாணவியிடம் தற்கொலைக்கு தூண்டும் வாசகங்களை அலெக்ஸா சொல்வது பதிவாகி உள்ளது. இதற்கு விளக்கம் கொடுத்த அமேசான் நிறுவனம், அது அலெக்ஸாவின் தவறு அல்ல என்றும், யாரோ விக்கியில் பதிவிட்டு இருந்ததையே அலெக்ஸா வாசித்தது எனவும், அந்த விக்கி பதிவு தற்சமயம் நீக்கப் பட்டதாகவும் தெரிவித்தது. மேலும், இது போன்ற சிக்கல்கள் நேராமல் அலெக்ஸாவின் கோட் மாற்றியமைக்கப் படும் என்றும் தெரிவித்தது".

மூவாயிரம் ரூவா போச்சே வேஸ்ட்டான்னு தலையில கைய வெச்சிக்கிட்டு உட்கார்ந்துட்டார் ராமசாமி.

லேபிள்கள்: , , , , ,

செவ்வாய், 26 நவம்பர், 2019

சுவேகா...

அப்போ எனக்கு ஏழு இல்ல எட்டு வயசு இருக்கும், ஒருநாள் சாயங்காலம் தூரத்துல இருந்து கேட்ட மோட்டார் சத்தம் வீட்டுக்கு வெளியில வந்து ஆஃப் ஆச்சு. நானும், அக்காவும் என்னன்னு வெளியில வந்து பார்த்தா, ப்ளூ கலர்ல இருந்த வண்டியில எங்கப்பா!

அந்த காலத்துல மோட்டார் வண்டி வச்சிருந்தவங்களே ரொம்ப கம்மி தான், அதுவும் எங்க தெருவுல நெறையா வீட்டுல சைக்கிள் கூட இருக்காது. அந்த மாதிரி சமயத்துல எங்கப்பா வண்டியில வந்ததுல எனக்குள்ள அவ்ளோ பெருமை. யாரோ வந்து 'என்ன வண்டி இது? வாங்கி இருக்கீங்களா?'ன்னு கேட்க, 'ஆமா இன்னிக்குதான் வாங்கினேன், இது சுவேகா'ன்னு எங்கப்பா சொன்னதும் மனசுக்குள்ள சுவேகா, சுவேகா ன்னு சொல்லி பழகிக்கிட்டேன்.

உடனே வண்டியில ஏறி ஒரு ரவுண்டு போகணும்னு ஆசை, ஆனா கேட்க பயம். ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு எங்கப்பா, ஸ்ட்ரிக்ட்னா ஸ்ட்ரிக்டு அவ்ளோ ஸ்ட்ரிக்ட்டு. நான் பார்த்துக்கிட்டே நின்ன நேரம், வீட்டுக்கு வெளியில வண்டிய நிறுத்திட்டு உள்ள போயிட்டார் அப்பா. வண்டியில ஏறி போக முடியலையேன்னு ஒரு பக்கம் வருத்தமா இருந்தாலும் வண்டிய சுத்திப் பார்க்க சுதந்திரம் கிடைச்சுதேன்னு குஷியாகி சுத்தி சுத்தி வந்தேன், எவர் சில்வர் டிபன் பாக்ஸ் மாதிரி ஏதோ இருக்க அதையத்  தொட்டு கைய வேற லைட்டா சுட்டுக் கிட்டேன். தெருவுல இருந்த பசங்க கிட்டயெல்லாம் எங்கப்பா புது வண்டி வாங்கிருக்கார்ன்னு சொல்லி பெருமையா தம்பட்டம் அடிச்சிக்கிட்டு இருந்தேன். அப்புறம் கொஞ்ச நேரத்துல ஒரு பெரிய பலகையை எடுத்துட்டு வந்து படிக்கட்டு மேல வெச்சு, வண்டிய மேல ஏத்தி வீட்டுக்குள்ள பார்க் பண்ணிட்டு எல்லாரும் தூங்கப் போயாச்சு. மனசுக்குள்ள நான் மட்டும் வண்டிய சுத்தி சுத்தி வந்துகிட்டு இருந்தேன்.

இப்படியே சில நாள் ஓட, ஒருநாள் சாயங்காலம் வீட்டுக்கு வெளியில விளையாடிட்டு இருக்கும்போது திடீர்னு எங்கப்பா கூப்பிட்டு 'வா, வண்டியில ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்'னாரு. இதற்குத்  தானே இத்தனை நாள் காத்துக் கிடந்தேன்னு ஓடிப் போய் நின்னேன். வண்டிய ஸ்டார்ட் பண்ணிட்டு, என்னைய வண்டியில ஏத்தி உட்கார வெச்சி, அவரும் உட்கார்ந்து, அவரோட இடுப்பை சுத்தி டைட்டா புடிச்சிக்க சொல்லிட்டு என் கையப் புடிச்சி சொல்லிக் குடுத்துட்டு கிளப்பினார் வண்டிய. (இதையே இப்போ என் அஞ்சு வயசு பையன்கிட்ட சொன்னா, எல்லாம் எனக்கு தெரியும் நீ வண்டிய ஓட்டுப்பான்னு சொல்றான்.)

என்னோட முதல் முறை மோட்டார் சைக்கிள் பயணம், மூணு இல்ல நாலு கிலோமீட்டர் தூரம் போயிருப்போம், அதுவே ஒரு பெரிய லாங் ட்ரிப் போன பீலிங்ஸ். அரை கிலோமீட்டர் போனாவே ஊர தாண்டிருவோம், அதுக்கப்புறம் எல்லாம் வயல் வெளிதான். வேகமா காத்து காத உரசிக்கிட்டு போக, கண்ணைத் திறந்து, மூடி, எங்கப்பாவை இறுக்கிப் பிடிச்சிக்கிட்டு என்னவோ பறந்து போறாப்பல ஒரு நினைப்பு. அந்த வண்டி அன்னிக்கு அதிகபட்சம்  40கி.மீ. வேகத்துல போயிருக்கும். இன்னிக்கு என் வண்டியில 120 கி.மீ வரைக்கும் போயிருக்கேன், அதுவும் சுகம்தான் ஆனாலும் அன்னிக்கு எங்கப்பா பின்னால உட்கார்ந்து போன சுகத்துக்கு இன்னிக்கு கிடைக்கற எதுவும் ஈடு இணையில்லை!

எதேச்சையா கூகுள்ல இந்த போட்டோவ பார்த்ததும் மண்டைக்குள்ள இருந்து புதையல் எடுக்க வேண்டியதாயிடுச்சி. பின்னால குஷன் சீட் மட்டும் மிஸ்ஸிங் இந்த போட்டோல இருக்கற வண்டியில.

PC:https://www.bikes4sale.in/
Vintage Scooter Suvega Super 50


லேபிள்கள்: , , ,