ஞாயிறு, 21 ஜூன், 2009

இவளே...இவளே...பூங்குழலி - பேரா. அசீராவின் மாணவராகிய இலந்தை சு.ராமசாமி

புல்லின் பக்கக் கத்திமுனை, புகையின் கீழே எரிகங்கு
செல்லக் காற்று, காட்டுமலர், திரைகொள் கடலின் தெம்மாங்கு
கல்லுக் குள்ளே பனி ஊற்று; காற்றுப்புரவி; உள்ளன்பின்
எல்லைச் சீமை; இளநெஞ்சம்; இவளே இவளே பூங்குழலி.

அச்சத்தெதிரி; அறிவாளி, அலையும் கடலின் செல்லமகள்
கொச்சை எண்ணம் இல்லாதாள்; குனிந்து பார்க்கத் தெரியாதாள்
உச்சி மேகக் கூந்தலினை உலுக்கிப் பார்க்க எண்ணுபவள்
எச்சரிக்கை விழிப்புடையாள், இவளே இவளே பூங்குழலி.

புயலைச் சீறும் புயலாவாள்; பொங்கும் கடலில் ஒயிலாவாள்
முயலைப் போன்ற மென்மையினால்; முரட்டுச் சிங்கத் தன்மையினாள்
கயல்கள் புரளும் கடலினிலே கங்குல் பகலாய்ச் சுற்றுபவள்
இயலும் நன்மை செய்திடுவாள் இவளே இவளே பூங்குழலி.

ஓலக்கடலை இசையதனால் ஓய்வெடுக்கச் செய்கிறவள்
வாலைக்குமரி; துடுப்பதனை வலிப்பாள்; வலியாக் கரமுடையாள்
மேலும் வியப்பாய்க் கதையினிலே விரியும் மனிதப் படையலிலே
ஏலம் போல மணக்கிறவள் இவளே இவளே பூங்குழலி.

ஓடக்காரி; பிசாசுகளின் உறவுக்காரி; வெகுசூரி
ஆடும் அலையின் உச்சியிலே அழகாய் ஊஞ்சல் ஆடுபவள்
ஊடும் நெஞ்சப் பிழிவதனை ஓங்கும் இசையாய்ப் பொழிகிறவள்
ஈடுசொல்ல முடியாதாள் இவளே இவளே பூங்குழலி.

பொன்னியின் செல்வன் நெஞ்சை அசைக்கும் பூவே பூங்குழலி - அவன்
புன்னகைக்காகப் புயலாய்ப் பாயும் புனிதம் பூங்குழலி
கன்னிமனத்தில் காதல்சுமக்கும் கனலேபூங்குழலி - நெஞ்சக்
கல்மலருள்ளே கனவுத்தேனைக் காக்கும் பூங்குழலி.

ஆடவர்தம்மை ஆட்டிப் படைக்கும் அழகு பூங்குழலி - அன்பன்
அருள்மொழிவர்மன் முன்னேஊமை ஆகும்பூங்குழலி
காடும்கடலும் நதியும்இருளும் கடக்கும்பூங்குழலி - சோம்பல்
கண்டே அறியாக் கற்பனைக்காரி கவிதைப்பூங்குழலி.

சமுத்ரகுமாரி என்றுதிரியும் சக்திபூங்குழலி - தீய
சக்திகள்தம்மை அடக்கி ஒடுக்கும் சாட்டைபூங்குழலி
குமுறும்கடலில் கொட்டம்அடிக்கும் குயிலே பூங்குழலி - ஓரக்
கோடிக்கரையின் கோயில்தீபக் கொழுந்தேபூங்குழலி.

அரியணைஏறும் ஆசைகொண்ட அன்பேபூங்குழலி - அந்த
ஆசைஉண்மை ஆகஅடைந்த ஆக்கம்பூங்குழலி
ஒருபயம்இன்றி உலவித்திரியும் உயர்வேபூங்குழலி - கதையின்
ஓட்டந்தன்னை உந்தும் விசையின் ஊக்கம்பூங்குழலி.

சரித்திர நாயகன் உயிரினைக் காத்தனள்
சக்தியின் வடிவாகினள்
தரித்திரம் இல்லாதோர் நெஞ்சினைக் கொண்டனள்
சத்திய நிலையாயினள்
அரியணை ஏறினாள் அரசியாய் மாறினாள்
அமுதனின் துணைவியானாள்
திரையெழும் சமுத்திர குமாரியாம் பூங்குழல்
தேவியைப் போற்றுகின்றோம்.

நன்றி: எழுத்துலகில் அமரதாரா, வானதி சிறப்பு வெளியீடு

லேபிள்கள்: , , ,

3 கருத்துகள்:

22 ஜூன், 2009 அன்று 12:11 PM க்கு, Blogger Vijay கூறியது…

kalakaraeenga...super.

 
26 டிசம்பர், 2009 அன்று 3:44 PM க்கு, Anonymous Madhu கூறியது…

Dear Sir...

I accidently came across ur blog when I was searching abt KovilVenni..Ur blog is so interesting as I too Love Historical events

 
26 டிசம்பர், 2009 அன்று 3:50 PM க்கு, Blogger இரா. சதீஷ் குமார் கூறியது…

Thank you

Satheesh

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு