திங்கள், 25 டிசம்பர், 2017

அடி மேல் அடி வைத்து...

ஒரு ஊர்ல ஒரு மஹா அயோக்யன் இருந்தான். அவனுக்கு ஒரு பையன்,‌‌ ‌‌‍அவனும் சாதாரண ஆள் இல்ல அவங்க அப்பன விட மஹா அயோக்யன். ரெண்டு பேரும் செஞ்ச அட்ரோசிட்டினால ஊரே இவனுங்கள கண்டு ஒதுங்கிப்  போய் பழகிருச்சி.

இப்படியே காலச்சக்கரம் சுத்த சுத்த இவனுங்க அட்ரோசிட்டிகளும் தொடர்ந்து நடக்க, அப்பனுக்கு ஒரு அம்பது வயசுகிட்ட வந்துட்டுது. ஆனா பாருங்க தலைமுடி மட்டும் கருப்பாவே இருக்கு. அதெப்படினு சந்தேகம் வரனுமே? அந்த ஊர்லையும் எல்லாருக்கும் வந்துச்சி, ஆனா யாரும் கேட்கல.

சாம்பிராணி புகை போட்டாப்ல பனி மூடிய ஒரு மார்கழி விடியற்காலைல, சிவன் கோயில் கோபுரத்துல கட்டின தோண்டி ரேடியோல எம்.எல்.வி. திருப்பாவை, திருவெம்பாவை பாட, சித்தர் மட தாத்தாக்கள் அவங்கவங்க பேரப்பயல்களோட ஆர்மோனியம், ஜால்ரா, கஞ்சிரா சகிதம் அருட் பெருஞ்சோதியின் தனிப் பெருங்கருணயை பாடிச் செல்ல, ஒருத்தருக் கொருத்தர் சளைக்காம, வகை வகையா கோலம் போட்டு, கலரப்  போட்டு, சாணத்தப்  பிடிச்சு பூசணிப் பூ சொருகி வச்சிட்ருந்தாங்க கன்னிப் பெண்கள் எல்லாம். இந்த ரம்மியமான காலை நேரத்துல, கார்த்திகை மாசத்து நாயா திரிஞ்சிக்கிட்டு இருந்த பயபுள்ள ரெண்டும் திடீர்னு பட்டைய போட்டு, கொட்டையயும் மாட்டிக்கிட்டு, ஆர்மோனியமும், ஜால்ராவுமா ஹரஹரசிவசிவ நமபார்வதி பதயேனு பாடிக்கிட்டே கெளம்புச்சுங்க. 

இதப்பார்த்த வயசு பொண்ணுங்க அத்தனையும் ஒன்னுக் கூடி, இனிமே ராத்திரியே கோலத்த போட்டு முடிச்சிடனும்னு பேசி முடிவு செஞ்சிட்டாங்க.

அந்த புது பஜனை கோஷ்டிய பத்தின பேச்சோட அன்னிக்கு பொழுது ஓட, சாயங்காலம் சிவன் கோயில்ல பிரசங்கத்துக்கு போனவங்களுக்கு இன்னொரு அதிர்ச்சி! இடிக்கும், மழைக்கும் கூட கோயில் பக்கம் ஒதுங்காத அப்பனும், புள்ளையும் உருண்டு பொரண்டு சாமிய கும்பிட்டுட்டு மொத வரிசையில வந்து உட்கார்ந்தாங்க பிரசங்கத்துக்கு. என்னடா இது, கலிகாலம்தான் பின்னுக்கு போக ஆரம்பிச்சிருச்சான்னு அத்தனைப் பேருக்கும் ஆச்சரியம்!

அந்த ஊருல இருக்கும் சிவன் கோயில் ஏதோ சாதாரணக் கோயில்னு நெனைச்சிடாதீங்க. உலகத்துல இருக்கற பிரமாதமான சிற்பக்கலை நிறைந்த கோயில்ல அதுவும் ஒன்னு. பெரிய கோபுரம், ஏகப்பட்ட கலைநயம் மிகுந்த அதிசயிக்கத்தக்க சிற்பங்கள், ஐம்பொன் சிலைகள், மரகத லிங்கம், பாதாள அறைகள், சுரங்கம் இப்படி பல அதிசயங்கள் நிறைந்த ஆலயம். ஆனா பாருங்க அதனோட மதிப்பும், அந்தக் கோயில்ல என்னவெல்லாம் இருக்குங்கறது கூட அந்த ஊர்ல இருக்கறவங்களுக்கு பெருசா தெரியாது. சரி, நாம கதைக்குப் போவோம்.

தனி ஆவர்த்தன பஜனைல ரெண்டு வாரம் ஓட, சித்தர் கூட்ட தாத்தாக்களுக்கு இவங்க மேல கொஞ்சம் கருணை வந்து "ஏம்ப்பா தனியா போறீங்க, சேர்ந்தே வாங்க"னு சொன்னதும் இரும்ப பார்த்த காந்தம் மாதிரி கப்புனு ஒட்டிக்கிட்டாங்க. சாயங்காலம் பிரசங்கம் நடக்கறப்போ, பேசுறவர்க்கு பாலும், மத்தவங்களுக்கு சுண்டலும் செஞ்சிக்  கொண்டு வந்து குடுத்து ஐஸ் வெச்சி கொஞ்சம் கொஞ்சமா நல்ல பயலாயிட்டுதுங்க ரெண்டும். இப்படியே புது ஜோடி வரவோட சிறப்பா முடிஞ்சுது மார்கழி.

அதுக்கப்புறம் பொங்கல், மாசி மகம், பங்குனி உத்திரம்னு எல்லா திருவிழாக்களையும்  சிறப்பா செஞ்சி குடுக்க உதவி செஞ்சுது புது ஜோடி. இந்த மூணு மாசத்து பெர்பார்மன்ஸ்ல எல்லாருக்கும் இவங்க மேல நல்ல அபிப்ராயம் வந்துடிச்சி. உள்ளுக்குள்ள லைட்டா சந்தேகம் இருந்தாலும் யாரும் பெருசா காட்டிக்கல. இந்த கேப்ல, சித்திரைத் திருவிழா கமிட்டி மீட்டிங்ல "இந்த வருஷ சொற்பொழிவ நானே செய்யட்டுமா"னு நைனா நைசா கேட்க, அத கேட்ட எல்லாருக்கும் மறுபடியும் ஷாக். இத முன்னாலயே எதிர்பார்த்த அந்த மனுஷன், "நீங்க வேற யாரையாவது பேச வைக்கணும்னாலும் வைங்க ஆனா எனக்கும் ஒரு பத்து நிமிஷமாவது குடுங்க. நான் சரியா பேசலைன்னு நினைச்சீங்கன்னா அத்தோட நிறுத்திக்கிறேன், அதுக்கப்புறம் தொந்தரவெல்லாம் செய்யமாட்டேன்"னு சொன்னதும், கமிட்டில 'சரி ஒரு சான்ஸ் குடுத்துதான் பார்ப்போமே'னு முடிவு பண்ணினாங்க.

சித்திரைத் திருவிழா வந்துச்சி, மெயின் சொற்பொழிவு முடிஞ்சதும் எல்லாரும் ஒரு பயம்கலந்த எதிர்பார்ப்போட இருக்க அப்பன்காரன் ஆத்துன சொற்பொழிவுலயும் பையன்காரன் குடுத்த சக்கரைப் பொங்கல்லையும் பயமெல்லாம் கரைஞ்சி தேனா இனிச்சிது எல்லாருக்கும். அன்னிக்கே முடிவெடுத்தாங்க இனி எல்லா திருவிழாலையும் நம்மாளு சொற்பொழிவும் இருக்கும்னு.

எப்பவும் நடக்கறத விட எல்லா விழாக்களும் சிறப்பா நடக்க அப்பனும், பையனும் அரும்பாடுபட்டாங்க. காலங்கள் உருண்டோட காட்சிகள் மாற, கோயிலோட தர்மகர்த்தாவுக்கு வயசாகி படுக்கையிலையே கிடக்க ஆரம்பிச்சார். இந்த இடைப்பட்ட காலத்துல முழு ஆன்மீகவாதிகளா மாறிப்போன அப்பனும், பையனும் அவருக்கும் விழுந்து விழுந்து பணிவிடை செஞ்சாங்க அவர் குடும்பத்துல இருக்கறவங்களுக்கும் மேல.

ஊர்ல தேர் திருவிழா வர்ற நேரம், தர்மகர்த்தா படுக்கையில இருக்க, யாருக்கும் ஒன்னும் புரியல. இந்த நேரத்துல ஒரு பவுர்ணமி நாள் சாயங்காலம் தர்மகர்த்தா கமிட்டி மெம்பர்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு அவரோட பதவியை நம்ம புது ஆன்மீகவாதிக்கே குடுத்துடுங்கனு சொன்னார். எல்லாரும் யோசிச்சி பார்த்ததுல அதுவும் சரிதான்னு பட, ஒரு நல்ல நாளா பார்த்து அந்த அப்பன்காரன தர்மகர்த்தாவா நியமிச்சிட்டாங்க.

சும்மாவே ஆடுறவனுக்கு சலங்கை கட்டி விட்டாப்ல, தேர் திருவிழா மிக விமரிசையா நடக்க ஆர்மபிச்சுது புது தர்மகர்த்தாவோட கைங்கர்யத்துல. ஆடலும், பாடலும், ஊரெங்கும் தோரணமும், அன்னதானமும், பானகமும் பஞ்சமில்லாம கெடச்சுது எல்லாருக்கும்.

விழாவோட முக்கிய நிகழ்வே, முதல் நாள் கோயில் பாதாள அறையில இருந்து காட்சிக்கு வெளிய வர்ற சுமார் அஞ்சு அடி உயர ஐம்பொன்  அம்பலவாணரும், மரகத லிங்கமும் தான். இந்த ரெண்டும் இருந்த பாதாள அறைக்கு மொத்தம் மூணு பூட்டு, ரொம்ப பழங்கால பூட்டுகள். ஒரு பூட்டோட சாவி தர்மகர்த்தாகிட்டயும், மத்த சாவிங்க காரியக்காரர்கிட்டயும், நாட்டமைக்கிட்டயும் இருக்கும். மூணு பேரும் சேர்ந்துதான் இந்த சிலைகளை வெளிய கொண்டு வரணும். அதுமட்டுமல்ல திரும்பி அந்தச் சிலைகள் உள்ள போற வரைக்கும் அதுங்க பக்கத்துலயே இந்த மூணு பேரும் தான் காவல் இருக்கணும்.

இந்த முறைப்படியே அந்த வருஷமும் ஆஜானுபாகுவான, அழகான ஆடலரசன் ஆனந்தப்  புன்னைகையோட முதல்ல வந்தார், அஞ்சடி உயரத்துல, பொன்னிறத்துல தக தகனு பார்த்த அத்தனைப் பேர் மனசுக்குள்ளயும் ஜடாமுடி பறக்க சுத்தி சுத்தி ஆட ஆரம்பிச்சார். ஹர ஹர மஹா தேவா, தென்னாடுடைய சிவனேனு மெய்சிலிர்க்க கத்தின சத்தம் கோயில் கோபுரத்துல இருந்து எதிரொலிக்க, பச்சை நிறத்துல ஜொலி ஜொலிக்க மரகதலிங்கம் வந்தத பார்த்த எல்லாரும் பரவச நிலைக்கு போனாங்க. இந்தச் சிலைகள பார்க்கறதுக்குன்னே எங்கெங்கேயோ இருந்தெல்லாம் மக்கள் வந்திருந்தாங்க. ரொம்ப சிறப்பா அபிஷேகமும், அலங்காரமும் நடந்து வழிபாடெல்லாம் முடிஞ்சு சாயங்காலம் பத்திரமா பாதாள அறைக்கு திரும்பிட்டிது ரெண்டு சிற்பங்களும். 

ரொம்ப விமரிசையா நடந்த தேர் திருவிழாவினால எல்லாருக்கும் ரொம்பவே மகிழ்ச்சி. புது தர்மகர்த்தாவோட புகழ் ஏற ஏற அவரோட பக்தியும் பழமாகி  கனிஞ்சிகிட்டே போனத பார்த்த மக்கள் எல்லாருக்கும் அவர் ஒரு அருணகிரிநாதரா தெரியா ஆரம்பிச்சாரு. எல்லாம் சிறப்பா போயிக்கிட்டு இருந்த நிலையில திடீர்னு ஒருநாள் சபையை கூட்டி, 'தானும் தன் மகனும்  கயிலை யாத்திரை போலாம்னு இருக்கோம், அதுனால வேற யாரையாவது தர்மகர்த்தாவா நியமிச்சிடுங்க'னு சொன்னாரு புது தர்மகர்த்தா. அங்க இருந்த பெருசுங்க, "நல்ல விஷயம் தான தாராளமா செய்யிங்க ஆனா அதுக்காக எதுக்கு ஆள மாத்தணும். நல்லபடியா போயிட்டு வா, தொடர்ந்து நீயே தர்மகர்த்தாவா இரு"னு சொன்னாங்க. ஆனா அவர் கேட்கல, 'தான் கொஞ்ச நாள் அங்கேயே தங்கி இருந்துட்டுதான் வருவேன். ஒருவேளை வரமுடியாம போனா கூட போகலாம்னு சொல்ல', சபை பெருசுகளுக்கு 'அடடா இப்படி ஒரு பக்திமானா'னு வியப்போ வியப்பு. ஒருவழியா எல்லாரும் பேசி, "தர்மகர்த்தாவ மாத்தறதா இல்ல நீ போயிட்டு வா"னு சொல்லி ஊரெல்லாம் காசு வசூல் பண்ணி ஒரு அமவுண்ட்டும் குடுத்து பாத பூசைலாம் செஞ்சி அனுப்பிவிட்டாங்க.

பல மாசம் ஓடிப்போச்சு, கைலாசத்துக்கு போன ரெண்டு பெரும் என்ன ஆனாங்கன்னு ஒரு சேதியும் இல்ல. இன்னும் ரெண்டு மாசத்துல தேர்த் திருவிழா வேற வருதே, என்ன பண்றதுனு ஊர் பெரியவங்க சபை கூடி பேசினாங்க. அப்புறம் அரை மனசோட பழைய தர்மகர்த்தா மகனையே தர்மகர்த்தாவா போட்டு திருவிழாவ நடத்திப்புடுவோம்னு முடிவு செஞ்சாங்க. திருவிழா வேலைலாம் ஜரூரா நடக்க, பாதாள அறையோட சாவி வேணுமேனு ரெண்டு நாளைக்கு முன்னாலதான் தோணுச்சி திருவிழா கமிட்டிக்கு. என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப, கைலாசம் போன தர்மகர்த்தாவோட வீட்டுக்குள்ள தேடலாம்னு ஒருத்தர் சொல்ல, அதெப்படி பூட்ட உடைக்கறது நியாயமானு இன்னொருத்தர் சொல்ல, ஒரே குழப்பமாயிடிச்சி எல்லாருக்கும். கடைசியா வேற வழியில்லாம பூட்ட ஒடைச்சி தேடித் பார்த்துருவோம்னு முடிவு பண்ணி பூட்ட ஒடைச்சி உள்ள போனா, வீட்டுக்குள்ள சுத்தமா தொடைச்சி வெச்சாப்ல வெறுமையா இருந்தத பார்த்து எல்லாரும் சிலையாயிட்டாங்க.

அதிர்ச்சியில என்ன பண்றதுனு குழப்பத்துல இருந்த பெருசுங்களுக்கு, "கவலைப் படாதீங்க கொல்லன வெச்சி இன்னொரு சாவி செய்ய சொல்வோம்னு" ஊர் நாட்டாமை சொல்லிட்டு தலையாரிய விட்டு கொல்லன கூட்டிட்டுவரச் சொன்னார்.

நாட்டாமை கூப்பிடறார்னதும் அடிச்சி புடிச்சி ஓடிவந்த கொல்லன்கிட்ட சாவி விஷயத்தை சொன்னாங்க. "ஐயா, அது ரொம்ப பழங்காலத்து பூட்டுங்கய்யா, அதுக்கெல்லாம் சாவி செய்யணும்னா அச்சு வேணுமுங்க. அந்த சாவியோட அச்சு, கோயில் கட்டினப்ப இருந்த கொல்லன்கிட்ட தானுங்க இருக்கும்"னு பெரிய குண்ட தூக்கிப் போட்டான். கோயிலைக் கட்டிய சிற்பியே யாருன்னு தெரியல, இதுல கொல்லன எங்கப் போயி தேடறதுன்னு எல்லாருக்கும் தலை சுத்த ஆரம்பிச்சுது. "வேற வழியே இல்லையா"னு நாட்டாமை கேட்க, "ஐயா, கைலாசத்துக்கு போன தர்மகர்த்தா ஐயா ரெண்டு சாவியோட அச்ச கொண்டுவந்து குடுத்து சாவி செய்ய சொன்னாருங்க, அதுக்கு வேணும்னா சாவி செஞ்சிரலாம்'னு சொல்ல தூக்கி வாரிப்போட்டுது எல்லாருக்கும்.

"மொதல்ல போயி அந்த அச்ச எடுத்துக்கிட்டு, பூட்டை உடைக்க சாமான்களையம் எடுத்துக்கிட்டு  கோயிலுக்கு வா"னு நாட்டாமை கோவத்துல கத்த, தலைதெறிக்க ஓடிப்போனான் கொல்லன். இதற்கிடையில, தலையாரிய தன்னோட வீட்டுக்கும், காரியக்காரர் வீட்டுக்கும் போயி பாதாள அறையோட சாவிய எடுத்துக்கிட்டு கோயிலுக்கு வரச்சொன்னார். அங்க இருந்த எல்லாருக்கும் என்னனு யாரும் சொல்லாமயே விஷயம் புரிஞ்சி வயித்துல புளிய கரைக்க ஆரம்பிச்சுது. எல்லாரும் கோயிலுக்கு போகவும், கொல்லனும்  தலையாரியும் வந்து சேரவும் சரியா இருந்துச்சி.

கொல்லன் கொண்டு வந்த அச்சுகளையும், தலையாரி கொண்டு வந்த சாவிகளையும் ஒன்னா வைக்க, எதிர்பார்த்த மாதிரியே ரெண்டும் ஒன்னுபோல இருந்துச்சி. பாதாள அறைக்கு போயி, ரெண்டு பூட்ட தொறந்து விட்டுட்டு மூணாவது பூட்டை உடைக்கச் சொன்னாரு நாட்டாமை.

கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் கடுமையா போராடி அந்த பூட்ட உடைச்சான் கொல்லன். அறைக்குள்ள போய் பார்த்தா மேடை மட்டும் தான் இருந்தது, அம்பலவாணரும் இல்ல மரகத லிங்கமும் இல்ல. அதுமட்டுமில்லாம பாதாள அறையோட ஒரு பக்க சுவருல பெரிய கல்லும் நகர்த்தி வெச்சு சுரங்கப் பாதை மாதிரி இருந்தது. ரெண்டு பேர அதுக்குள்ளே போய் பார்த்துட்டு வரச் சொன்னாங்க. அவங்க போயிட்டு வந்து, ஊருக்கு வெளியில இருக்கற பாழடைஞ்ச தெப்பக்குளத்துல போய் முடியுது அந்த சுரங்கப் பாதைனும், உள்ளுக்குள்ள அஞ்சாறு பெரிய பழங்காலப் பெட்டிகள் இருக்குன்னும், அதெல்லாம் தொறந்து கெடக்கு, உள்ளுக்குள்ளாற ஒண்ணுமில்லைன்னும் சொன்னாங்க.

அடி மேல அடி  வெச்சு அம்மியை நகர்த்தற மாதிரி எல்லாரையும் ஏமாத்தி அம்பலவாணர ஆட்டையைப் போட்டுக்கிட்டு போயிட்டானுங்களேனு பொலம்பினாரு நாட்டாமை. அதுமட்டுமில்லாம சுரங்கப்பாதைல இருந்து என்னவெல்லாம் ஆட்டைய போட்டுட்டு போனாங்கன்னு ஒன்னும் தெரியலையேனு மத்தவங்களும் புலம்ப, ஒரே சோகமயமாயிடுச்சி.

சரி, யாரும் யாரையும் குறை சொல்லி பிரயோஜனமில்லை, "சிவன் சொத்து குல நாசம், அவன் சொத்தை அவனே பார்த்துப்பான்"னு சொல்லிட்டு நாட்டாமை நடைய கட்ட எல்லாரும் அவர் பின்னாலயே போனாங்க!

லேபிள்கள்: , , , , , , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு