சனி, 1 ஜனவரி, 2011

இனி வரும் காலம் இனிய காலம்...


எத்தனையோ புதுவருடங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி... என இந்தியாவில் கொண்டாடப்பட்டாலும், உலகளவில் துவங்கும் இந்த நாளையும் நாம் இனிதே ஏற்றுக் கொண்டோம். வந்தாரை வாழவைப்பதோடு அவர்தம் வழக்கங்களையும் வாழவைப்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.
குறைகள் இல்லாத மனிதனே இல்லை, அது போல் குறைகள் இல்லாத நாட்களும், வாரங்களும், மாதங்களும், வருடங்களும் இல்லை! கடந்த வருடத்தின் குறைகளை ஏற்றுக் கொள்வோம், செய்த தவறுகளை மீண்டும் செய்வதில்லை என்று மனதில் பதிய வைப்போம். அற்புதமான நினைவுகளை அசை போட்டு, புது வருடம் இன்பமாய் இருக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.
எண்ணங்கள் மனிதனை மேம்படுத்தும், கலாம் சொன்னது போல் கனவு காண்போம். நாம் யாவரும் மேம்பட வேண்டுமென்று, வல்லமை பெற வேண்டுமென்று, இல்லம் தோறும் மகிழ்ச்சி பெருக வேண்டுமென்று, நல்லதொரு அரசு அமையவேண்டுமென்று, பசுமை அதிகரித்து பஞ்சம் வரவேக் கூடாதென்று, மாதம் மும்மாரி பொழிய வேண்டுமென்று, இயற்கையை பாதுகாக்க வேண்டுமென்று, நம் பாரம்பரியம் காக்கப் படவேண்டுமென்று, நம் வரலாற்றை ஒவ்வொருவரும் அறிந்து செயல் பட வேண்டுமென்று, மனித வாழ்வில் சமநிலை வரவேண்டுமென்று...
இது போன்ற சிந்தனைகள் வரும் பொழுது நினைவிற்கு உடனே வருபவர் நம் மகாகவி பாரதி...
பாரத நாடு பழம்பெரும் நாடு
நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்...என்றும் மன்னும் இமய மலையெங்கள் மலையே
மாநிலம்மீது இதுபோல் பிரிதில்லையே...

என்று நம் தாய்நாட்டின் மீது பெருமை கொண்டு...
கல்விச் சிறந்த தமிழ்நாடு- புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு- நல்ல
பல்வித மாயின் சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு...
என்று தமிழ்நாட்டின் புகழ் பாடி...

பெற்றத் தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தன

என்றும் பெருமை கொண்டு...
அரும்பு வியர்வை உதிர்த்து
புவிமேல் ஆயிரம் தொழில்செய்து வாழ்வோம்,வெட்டுக் கனிகள் செய்து தங்க முதலாம்
வேநிபல பொருளுள் குடைந் தெடுப்போம்,
இதை விட ஆக்கப்பூர்வமாக யார் கூறமுடியும்!
இந்தப் புதிய வருடம் மிகவும் இனியதாய், இன்பம் அளிப்பதாய், முன்னேற்றங்கள் நிறைந்ததாய் யாவர்க்கும் இருக்க வேண்டுமென இறைவனை வேண்டி அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன்.
வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்!வாழிய பாரத மணித்திரு நாடு!