ஞாயிறு, 30 நவம்பர், 2008

செங்குந்தர் எனும் கைக்கோளர் - ஒரு பார்வை

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே தமிழகத்தில் உள்ள ஒரு இனம் செங்குந்தர் என்றழைக்கப்படும் கைக்கோளர். கைக்கோளர் எனும் பெயர் செங்குந்தர் என்ற பெயரோடு சேர்ந்து வழக்கத்தில் வர ஆரம்பித்தது சுமார் 1200 ஆண்டுகளாக. இவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக சேலம், ஆத்தூர், தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர், ஆற்காடு, காஞ்சிபுரம், ஜெயங்கொண்டம், திருமழபாடி, தஞ்சை, சென்னை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் மிகுதியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தொழில் நெசவாக இருந்தாலும், ஏராளமானோர் வணிகர்களாகவும் மற்ற தொழில்களிலும் ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

"கூவிளம் இதழி தும்பை
கொண்டார்ச்சனை செய்தபேர்க்கு
தேவநாடாளவைக்கும் திருகுகைவேல்
செங்குந்தம் துணை" (செங்குந்தர் சதகம்)
செங்குந்தம் என்றால் இரத்தத்தால் சிவந்த ஈட்டி, செங்குந்தர் என்றால் செந்நிறமான ஈட்டியை உடையவர். போர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை வைத்து சுழற்றுபவர் என்பதால் கைக்கோளர் என்றும் அழைக்கப்பட்டனர்.

குறிஞ்சி நிலப்பகுதியிலிருந்த வந்த இனத்தவர், முருகனை தன் குலதெய்வமாக வழிபடும் இவர்கள் முருகனின் அம்சமான வீரபாகுத் தேவரின் வழிவந்தவர்கள். இதனாலோ என்னவோ வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற படைவீரர்களாக திகழ்ந்தனர். மூவேந்தர்களிடமும் மிகவும் நம்பிக்கைக்குரிய அந்தரங்க படைவீரர்களாய் இருந்த இவர்கள் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தனர். ”வாள் தாங்கிய கைக்கோளர்” என்று கல்வெட்டுகளில் உள்ள செய்தியால் இவர்கள் ஈட்டி மட்டும் அல்ல வாள் பிடித்தும் போரிட வல்லர் என்று அறிகிறோம்.

செங்குந்தர்கள் முருகனின் தாயான பார்வதியின் சிலம்பில் இருந்த 9 இரத்தினங்களில் இருந்து பிறந்தவர்கள் என்பதால், திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தின் பொழுது 9 செங்குந்தர்கள் வீரர்கள் உடையணிந்து வீரபாகுத் தளபதிகளாய் குமரன் சூரனை சம்ஹரிக்க உதவுவது இன்றும் நடைமுறையில் உண்டு. திருசெந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் மாசித்திருவிழாவில் பன்னிரண்டாம் நாள் திருவிழா செங்குந்தர் குலத்தவரின் மண்டகப்படியாக இன்றும் நடைபெறுகிறது.


தெரிஞ்ச கைக்கோளப்படை என்பது சோழர்களின் படைப்பிரிவில் ஒன்று என்று கல்வெட்டாய்வுகள் தெரிவிக்கின்றன. பொன்னியின் செல்வனில் கல்கி கைக்கோளப்படை பற்றி எழுதியிருப்பதை சற்று பாருங்கள்,

"மூன்று கம்பீர புருசர்கள் பிரவேசித்தார்கள். அவர்களுடைய முகங்களிலும் தோற்றத்திலும் வீர லக்ஷ்மி வாசம் செய்தாள். அஞ்சா நெஞ்சம் படைத்த ஆண்மையாளர் என்று பார்த்தவுடனே தெரிந்தது. (இன்று தமிழ் நாட்டில் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு நூலின்றித் திண்டாடும் கைக்கோள வகுப்பார் சோழப் பேரரசின் காலத்தில் புகழ்பெற்ற வீர வகுப்பாராயிருந்தனர்). அவர்களில் பொறுக்கி எடுத்த வீரர்களைக் கொண்டு சோழ சக்கரவர்த்திகள் 'அகப் பரிவாரப் படை'யை அமைத்துக் கொள்வது வழக்கம். அப்படிப் பொறுக்கி எடுக்கப்பட்ட படைக்குத் 'தெரிஞ்ச கைக்கோளர் படை' என்ற பெயர் வழங்கியது. அந்தந்தச் சக்கரவர்த்தி அல்லது அரசரின் பெயரையும் படைப்பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதுண்டு.

"சுந்தர சோழ தெரிஞ்ச கைக்கோளப் படையார் தானே?" என்று அநிருத்தர் கேட்டார்.

"ஆம், ஐயா! ஆனால் அப்படிச் சொல்லிக் கொள்ளவும் எங்களுக்கு வெட்கமாயிருக்கிறது."

"அது ஏன்?"

"சக்கரவர்த்தியின் சோற்றைத் தின்றுகொண்டு ஆறு மாத காலமாக இங்கே வீணில் காலங்கழித்துக் கொண்டிருக்கிறோம்."

"உங்கள் படையில் எத்தனை கை? எத்தனை வீரர்கள்?"

"எங்கள் சேனை மூன்று கைமா சேனை, இவர் இடங்கை சேனைத் தலைவர்; இவர் வலங்கை சேனைத் தலைவர்; நான் நடுவிற்கைப் படைத்தலைவன்.ஒவ்வொரு கையிலும் இரண்டாயிரம்வீரர்கள். எல்லோரும் சாப்பிட்டுத் தூங்கி கொண்டிருக்கிறோம். போர்த் தொழிலே எங்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது."

"உங்களுடைய கோரிக்கை என்ன?"

"எங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கக் கோருகிறோம். இளவரசர் அருள்மொழிவர்மர் மாதண்ட நாயகராயிருக்கும் சைன்யத்திலே சேர்ந்து யுத்தம் செய்ய விரும்புகிறோம்!"
"ஆகட்டும்; தஞ்சைக்குப் போனதும் சக்கரவர்த்தியின் சம்மதம் கேட்டுவிட்டு உங்களுக்கு அறிவிக்கிறேன்."

"பிரம்மராஜரே! அதற்குள்ளே இலங்கை யுத்தம் முடிந்து விட்டால்...?"

"அந்தப் பயம் உங்களுக்கு வேண்டாம், இலங்கை யுத்தம் இப்போதைக்கு முடியும் என்பதாகத் தோன்றவில்லை."

"ஈழத்துச் சேனாவீரர்கள் அவ்வளவு பொல்லாதவர்களா? எங்களை அங்கே அனுப்பி வையுங்கள். ஒரு கை பார்க்கிறோம்!..."

"ஒரு கை என்ன? நீங்கள் மூன்று கையும் பார்ப்பீர்கள், தெரிஞ்ச கைக்கோளரின் மூன்று கை மாசேனை யுத்தக்களத்தில் புகுந்துவிட்டால் பகைவர்களின் பாடு என்னவென்று சொல்ல வேண்டுமோ? நடுவிற்கை வீரர்கள் பகைவர் படையின் நடுவில் புகுந்து தாக்குவீர்கள். அதே சமயத்தில் இடங்கை வீரர்கள் இடப்புறத்திலும் வலங்கை வீரர்கள் வலப்புறத்திலும் சென்று இடி விழுவதுபோலப் பகைவர்கள்மீது விழுந்து தாக்குவீர்கள்..."

"அப்படித் தாக்கித்தான் பாண்டிய சைன்யத்தை நிர்மூலம் செய்தோம்; சேரர்களை முறியடித்தோம்."


அப்பப்பா! என்னவொரு அசாத்திய வீரம், சுந்தர சோழரின் மந்திரியான அநிருத்த பிரம்மராயர் சாதாரண ஆளில்லை, திருச்சிக்கு அருகில் உள்ள அன்பில் எனும் ஊரைச் சேர்ந்த இவர் சோழர்களின் சாணக்கியர், இவரின் செவியும், கண்ணும் சோழ நாடு முழுவதும், இவருக்கு தெரியாமல் சோழ நாட்டில் எதுவுமே நடக்காது அந்நாளில். இப்பேர்பட்ட ஒருவரே கைக்கோளப் படையை புகழ்கிறார் என்றால் அவர்களின் வீரம் எந்த அளவிற்கு சிறந்ததாயிருந்திருக்க வேண்டும்.

செங்குந்தர்களை பற்றி பல்வேறு புலவர்கள் பல காலகட்டங்களில் பாடியதை தொகுத்து செங்குந்த பிரபந்த திரட்டு என்று நூலாக பதிக்கப்பெற்றுள்ளது. இடைக்காலச் சோழர்களுக்கு முன்னரே கைக்கோளர்களை பற்றிய செய்திகள் பல சமணர் கல்வெட்டுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.

சோழர் காலத்திற்கு பிறகு (13ஆம் நூற்றாண்டு) படிப் படியாக நெசவுத்தொழிலுக்குள் நுழைந்த இவர்கள் 17ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தங்கள் குலத்தொழிலாகிய படைத் தொழிலை விட்டு முழுமையாக நெசவுத் தொழிலுக்கு மாறினர். நெசவுத் தொழிலோடு, நிலக் கிழார்களாகவும், விவாசாயிகளாகவும், வணிகர்களாகவும் கூட உருவெடுத்தனர்.

18ஆம் நூற்றாண்டு முதலே இவர்கள் முதலி எனும் பெயரை தங்கள் பெயருக்கு பின் சேர்த்துக்கொண்டனர் என்பது அந்நாள் பாண்டிச்சேரியின் கவர்னருக்கு முதன்மை துபாஷியாய் இருந்த ஆனந்த ரங்கப் பிள்ளை அவர்களின் டைரி குறிப்பிலிருந்து தெரியவருகிறது.

திருப்பதி, திருவரங்கம் போன்ற ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பிலும் திருவண்ணாமலையில் பல்வேறு சடங்குகளை நடத்தவும் உரிமைபெற்றிருந்தனர் என்றும், மேலும் பல ஆலயங்களுக்கு நிலம், நடை உள்ளிட்ட பல்வேறு நிவந்தங்களை அளித்திருக்கின்றனர் என்றும் India before Europe by Catherine Ella Blanshard Asher, The Political Economy of Commerce: Southern India, 1500-1650, BySanjay Subrahmanyam, Textiles in Indian Ocean Societies, By Ruth Barnes ஆகிய நூல்கள் தெரிவிக்கின்றன.

விக்கிரமச் சோழன், இரண்டாம் குலோத்துங்கச் சோழன் முதலிய மூன்று சோழர்களிடம் அரசவைப் புலவராக இருந்த ஒட்டக் கூத்தர் செங்குந்த இனத்தைச் சேர்ந்தவர்.

இரட்டைப் புலவர்கள் என்று பெயர் பெற்ற மதுசூரியர் மற்றும் இளஞ்சூரியர் இவர்களும் செங்குந்த மரபில் தோன்றியவர்கள். இவர்கள் பிறந்தது சோழநாட்டின் ஆமிலந்துறையில், இவர்களில் ஒருவர் குருடர் மற்றவர் முடவர், இருப்பினும் முடவர் வழி காட்ட குருடர் அவரைத்தோள் ஏற்றிகொண்டு இருவருமாய் பல சிவாலயங்களுக்குச் சென்று பாடல்கள் பாடியுள்ளனர். இவர்களில் ஒருவர் முதல் இரண்டு அடியை பாட மற்றவர் அடுத்த இரண்டடியை பாடி முடிப்பார். காளமேகப் புலவரின் நண்பர்களாய் இருந்த இவர்கள் அவருடைய மறைவின் போது, புலவரின் உடலை நெருப்பு தன்னுள் வேகவைக்கத் தொடங்குவதை கண்ணுற்ற முடவர், முகத்தில் சோகம் தாளாது அறைந்து கொண்டார்.

'ஆசுகவியால் அகில உலகெங்கும்
வீசுபுகழ்க் காளமேகமே'
என முடவர் கதற, குருடர் உடனே,
'-பூசுரா விண்கொண்ட செந்தனவாய் வேகுதே ஐயையோ
மண்தின்ற பாணமென்றவாய்!'
எனப்பாடி அழுதார்.

அரசியலில் - அண்ணாதுரை, ஆன்மிகத்தில் - திருமுருக கிருபானந்த வாரியார், கவிதையில் ஒட்டக்கூத்தர், பாவேந்தர் பாரதிதாசன், விடுதலைப் போராட்டத்தில் - தில்லையாடி வள்ளியம்மை, திருப்பூர் குமரன் என அறிஞர்களும், கவிஞர்களும், தியாக செம்மல்களும் என கைக்கோளர் குலத்தில் உதித்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

72 உட்பிரிவுகளை கொண்ட கைக்கோளர்கள் தமிழகத்தில் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும், இலங்கையிலும் முடியாட்சி காலம் தொட்டு வாழ்ந்து வருகின்றனர். கொங்கு நாட்டு சிற்றரசர்களில் ஒரு பிரிவினரான கெட்டி முதலியார் கட்டிய தாரமங்கலம் கோவில் சிற்பக் கலைக்கு பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தை பற்றியும் கெட்டி முதலியார்களை பற்றியும் தனியொரு பதிவில் பார்ப்போம்.


(பி.கு : இந்த கட்டுரைக்கான குறிப்புகள் தஞ்சை நூலகத்தில் இருந்தும், இணையத்தில் (குறிப்பாக மரத்தடி, முத்தமிழ் மன்றம், தினமலர்) இருந்தும் எடுக்கப்பட்டது. இரட்டையர் பாடல் ஷைலஜா அவர்களின் கட்டுரையில் இருந்து எடுப்பட்டது என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்)

லேபிள்கள்: , , , , , , ,

சனி, 15 நவம்பர், 2008

திருவையாறு தலவரலாறு

இந்த திருக்கோவிலின் தல வரலாறு கீழ்கண்டபடி கோவிலில் எழுதப்பட்டிருக்கிறது.

இத்திருக்கோயிலை முதன் முதலில் பிரிய விரதன் எனும் சூரிய வம்சச் சக்ரவர்த்தி திருப்பணி செய்தான் என்பது புராண வரலாறு.

கி.மு. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழப் பேரரசன் கரிகாற் பெருவளத்தான். இவன் காடு கெடுத்து நாடாக்கி வளம் பெருக்கியவன் கல்லணை கட்டி, காவிரிக்குக் கரை எழுப்பி இமயத்தே புலி பொறித்து வெற்றியுடன் வரும் வழியில் ஐயாற்றை அடைந்ததும் அவன் ஏறி வந்த தேர் பூமியில் அழுந்தி இடம் பெயரவில்லை. இதனடியில் ஏதோ ஓர் சக்தி ஈர்க்கிறது என உணர்ந்து காட்டை அழித்து பூமியை அகழ்ந்தான், அடியில் சிவலிங்கம், சக்தி, விநாயகர், முருகன், சத்த மாதர்கள் சண்டர், சூரியன் திருவுருவங்களும், யோகி ஒருவரின் சடைகள் பரந்து, விரிந்து, புதைந்து வேரூன்றி காணப்பட்டன. மேலும் அகழவே நியமேசர் எனும் அகப்பேய்ச் சித்தர் நிட்டையிலிருப்பது கண்டு மெய்விதிர்ப்பெய்தி அவர் பாதம் பணிந்தான் அவரும் கருணை கூர்ந்து கரிகாலனிடம் ”தேவர்களும், நந்தீசரும் வழிபட்ட இம்மகாலிங்கத்திற்கும், மற்றைய படிமங்கட்கும் கோயில் எடுப்பாயாக” எனக்கூறி எவராலும் வெல்லற்கரிய தண்டமொன்று மளித்து, கோயில் கட்டுதற்கு வேண்டிய பொருளும் நந்தியின் குளம்படியில் கிடைக்குமென அருள் புரிந்தார். அவ்வாறே கரிகாற் சோழன் சிறப்பாக ஆலயத் திருப்பணி செய்து, குடமுழுக்கும் செய்து நிவந்தங்கள் அளித்தான். கரிகாற் சோழனுக்கு ஐயாரப்பரே எல்லாம் வல்ல சித்தர் வடிவில் தான்தோன்றி நாதராக சுயம்பு வடிவில் உள்ள தன் இருப்பிடம் காட்டி கோயிலும் கட்டச்செய்தார் என்பதறிந்தோம். இதற்குச் சான்று, கற்பக்கிரக பிரகாரத்தில் விரிசடை படர்ந்திருப்பதால் சென்று மிதிக்கக் கூடாதென்பதும், சோழனால் கட்டிய செம்பிய மண்டபமே செப்பேச மண்டபமாயிருப்பதும், கரிகாற்சோழன், அவன் மனைவி இருவரின் சிலைகள் இருப்பது கண்டு உண்மை உணரலாம்.

கி.பி. 825-850 தெள்ளாறெறிந்த நந்திவர்ம பல்லவன் காலத்திற்கு முந்திய திருப்பணி, ஆதி கோயில் அமைப்பை மாற்றியுள்ளது. அருள் மிகு ஐயாரப்பர் எழுந்தருளியுள்ள கருவரைக் கற்றளி துவார பாலகர், யாளித்தூண்கள் பல்லவர்காலப் பணியாகும்.

கி.பி. 982[1]-இல் வேங்கி நாட்டு விமலாதித்த தேவர் இதனைப் புதுக்கி, மகாதேவர்க்கு நிறைய அணிகலண்கள் வழங்கியுள்ளார்.

கி.பி. 1006 – ல் முதலாம் இராசராசன் (985 – 1014) மனைவி ஒலோக மாதேவியார் வட கைலாயம் எனும் ஒலோக மாதேவீச் சுரத்தைஎழுப்பி எழுந்தருளும் திருமேனிகள், ஒலோக வீதி விடங்கர் எனும் சோமஸ்கந்தர், விநாயகர் முதலான பஞ்சமூர்த்திகளை வழங்கியுள்ளார்.

கி.பி. 1014 – 1042 முதலாம் இராசேந்திர சோழ தேவர் மனைவி பஞ்சவன் மாதேவியார் தென் கைலாயம் கோயில் பழுதுபட்டு இருந்ததை புதுப்பித்தார்.

அடுத்து, கிருஷ்ண ராஜ உடையாரால் இக்கோயிலின் திருச்சுற்று மாளிகை எடுக்கப்பெற்றுள்ளது. சலவைத் தூண்கள் சாளுக்கிய நாட்டு வாகாடகச் சிற்பத் திறனை எடுத்துக்காட்டவே பகைவர் நாட்டிலிருந்து கொணர்ந்தவையாகவுள்ளன.

கி.பி. 1118 – 1135 விக்ரம சோழன் காலத்தில் மூன்று, நான்காம் திருச்சுற்றுகளும், மதில், கீழக்கோபுரங்களும் எடுக்கப்பட்டிருப்பதுடன் வடகிழக்கில் நூற்றுக்கால் மண்டபம் அடிப்படை பீடத்துடன் எழும்பி நின்று விட்டது.

கி.பி. 1381 - ல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் வீர சரவண உடையார் காலத்து செந்தலை கருப்பூர், கச்சி வீரப்பெருமான் மகளால் கோயில் மண்டப மதில் சீர்திருத்தம் பெற்றது.

கி.பி. 1530 – ல் அச்சுதப்ப நாயக்கர் நின்று போன (தண்டபாணி கோயில்) மண்டபத்தை 144 தூண்களுடைய அழகிய மண்டபமாக உருவாக்கி முடித்தார். அவர்காலத்து இடைமருதூர் ஆனையப்பப் பிள்ளையாலும், அவர் தம்பி வைத்திய நாதராலும் மேலக்கோபுரம், முதற் பிரகாரம், அதில் திருநடமாளிகைப் பத்தி (மாடி) மூன்றாம் பிரகாரத் தெற்குக் கோபுரம், திருக்குளம், காவிரி பூசைப் படித்துறை “கல்யாண சிந்து” மண்டபம், குதிரை பூட்டிய தேர் மண்டபங்கள் ஆகிய இவை யாவும் அவர்களால் எடுக்கப் பட்டனவே.

கி.பி. 1784 காஞ்சீபுரம் வள்ளல் பச்சையப்ப முதலியார், மூன்றாம் பிரகார முகப்பு மண்டபத் திருப்பணி செய்துள்ளார். அவரும் அவரது இரு மனைவியர் திருவுருவங்களும் தூண்களில் உள்ளன. மூன்றாம் பிரகார கிழக்குக் கோபுரம் விக்கிரம சோழனால் கட்டப் பெற்றதாகும்.

கி.பி. 1937 – ல் நாமறிந்த வகையில் அம்மன் கோயில் முழுமையும் அழகு ஒழுகும் பளிங்குக் கருங்கள் திருப்பணியாக தேவக்கோட்டை சிவத்திரு உ.ராம.மெ.சுப.சேவு. மெய்யப்பச் செட்டியார் அவர்கள் குடும்பத்தினரால் திருப்பணி செய்யப் பெற்று 2-5-1937 ல் குடமுழுக்கு இனிதே நிறைவேறியுள்ளது.

கி.பி. 1971 – ல் திருக்கையிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 25 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களால் திருக்கோயில் முழுமையும் செப்பமுற திருப்பணி செய்யப்பெற்று 31-3-1971 ல் திருக்குடமுழுக்குப் பெருவிழா மிகச் சீறும் சிறப்புமாக நிகழ்ந்தேறியது.

[1] 1013 – 14 ஆம் ஆண்டு என கல்வெட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த விமலாதித்த தேவர்தான் இராஜராஜ சோழனின் புதல்வி குந்தவி தேவியை மணம்செய்திருக்கக் கூடும் என்பதும் கருத்து.

லேபிள்கள்: ,

செவ்வாய், 11 நவம்பர், 2008

பொன்னியின் செல்வருக்கு சதய விழா

நம் பொன்னியின் செல்வரான இராஜராஜ சோழருக்கு 1023 வது சதய விழா வெகு சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.
அலையென திரண்டுவந்த மக்கள் வெள்ளம், திருமுறை உலா, சோழர் வரலாறு பற்றிய சொற்பொழிவு, பெருவுடையாருக்கு 47 வகை அபிஷேகம் என விழா சிறப்பாக நடந்தேறியது. ஒளி வெள்ளத்தில் மிதந்த பெரிய கோவில் இராஜராஜனின் பெருமையை பறைசாற்றியது. மக்கள் மிக ஆர்வமுடன் பெருவுடையாரை வழிபட்டு, சோழர் வரலாற்றையும், திருமுறைகளையும் கேட்டுக் கொண்டிருந்தது நம் பொன்னியின் செல்வர் மீது அவர்கள் வைத்திருந்த அன்பை காட்டியது.

சதயம் இராஜராஜரின் பிறந்த நட்சத்திரம் என்பது நாம் அறிந்ததே, இந்த திரு நாளில் பற்பல சாதனைகள் புரிந்த மாமன்னன் இராஜராஜ சோழனுக்கு தஞ்சை, திருவிடந்தை, திருவானைக்கோவில் ஆலயங்களில் ஒரு வாரத்திற்கு பெரும் விழா அந்நாளில் நடைபெற்றதாம்.

இதோ சதயவிழா காட்சிகள்






















லேபிள்கள்: , , ,

புதன், 5 நவம்பர், 2008

திருவையாறு

தஞ்சையிலிருந்து ஏறத்தாழ 15 கி.மீ. தூரத்தில் பெரம்பலூர் செல்லும் வழியில் வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி ஆறு ஆகிய ஆறுகளை கடந்து சென்றால் காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் திருவையாறு. ஆரூரில் பிறந்தால் முக்தி, அண்ணாமலையை நினைத்தால் முக்தி, ஐயாறு மண்ணை மிதித்தால் முக்தி என்று சொல்லும் அளவுக்கு மிகவும் பெருமை வாய்ந்த ஊர். இயற்கை அன்னை என்றென்றும் பசுமை ஆடை அணிந்து பார்ப்போரின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அழகான ஊர்.

இந்த ஊரில் உள்ள அய்யாரப்பரும், அறம்வளர்த்த நாயகியும் எழுந்தருளியுள்ள சிவாலயம் மிகப் பழமையான பெருமைவாய்ந்த ஒன்று. சுயம்புலிங்கம் உடைய இந்த ஆலயம் மிக சக்திவாய்ந்ததும் கூட. இங்குள்ள லிங்கம் சுயம்புவானதால் அபிஷேகம் கிடையாது, புனுகு சாற்றுதல் மட்டும்தான். இந்த தலத்தின் வரலாற்றை தனி பதிவில் பார்க்கலாம்.

இங்கு சித்திரையில் நடைபெறும் ஏழூர் வலம் எனும் விழா வெகு சிறப்பாக நடைபெறும், சிவபெருமான் கண்ணாடி பல்லக்குகளில் ஏறி திருவையாற்றில் ஆரம்பித்து திருப்பழனம், திருவேதிக்குடி, திருச்சோற்றுத்துறை, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஆலயங்களுக்கு சென்று திரும்புவார். இந்த விழாவிற்கு பல ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, கொளுத்தும் வெயிலிலும் ஐந்தெழுத்தை உச்சரித்து திருமுறைகளை பாடிக்கொண்டு பரவசத்துடன் பரமனை தொடர்ந்து செல்வார்கள். பக்தர்களுக்கு வழிநெடுகிலும் உணவும், நீரும், மோரும் தாராளமாய் கிடைக்கும்.

ஆடி அமாவாசை அன்று நடைபெறும் அப்பர் கயிலாயக் காட்சித் திருவிழாவும் வெகு சிறப்பாக நடைபெறும். மேலும் ஒரு சிறப்பு ஆண்டுதோறும் நடைபெறும் தியாகராய ஆராதனை சங்கீத திருவிழா.

இதோ அய்யாரப்பனின் ஆலயம் தங்களுக்காக...


ஆலயத்தின் முதன்மை கோபுரம்


மனதை மயக்கும் பிச்சாண்டவர், ஆறுமுகர், காரைக்காலம்மை பல ஆடல் நங்கைகள் மற்றும் ஒரு காதல் ஜோடி

பாற்கடல் கடைந்து வரும் ஆலகாலத்தை அள்ளிப் பருகும் நீலகண்டர், கண்டத்தை பிடிக்கும் அன்னை, காலனை அழித்து பக்தரை காக்கும் ஈசன்

அழகாய் காலுயர்த்தி ஆடும் சிவன்

தோடு சூடும் இறைவன் - ஊர்த்துவதாண்டவர், குழலூதும் கண்ணன், பள்ளி கொண்ட அரங்கன், நடராசன், அட இதென்ன பள்ளி கொண்டானுக்கு மேலே காதலர்களா...

எவ்வளவு பெரிய உருவம் பீமனா? அல்லது கடோத்கஜனா..


வாருங்கள் ஆடலரசிகளே! வாருங்கள் நடன ராணிகளே! என்ன கல்கி நினைவிற்கு வருகிறாரா! ஆம் அதே திருவையாறு நடன மாதர்கள்தான் போலும்

தலையலங்காரத்திற்கு இந்த பூ போதுமா! (சும்மா ஒரு கற்பனைதான்)


தியான மண்டபத்தில் உள்ள இந்த மாதர் யாரோ...

வேட்டைக்கு போறார் போலிருக்குது...

இதே போன்ற சிற்பங்களை தஞ்சையிலும் காணலாம்


யார் இந்த மயிலேறும் பெருமான்...

குண்டோதர பூதம்

குமரனுக்கு பட்டம் சூட்டுகிறாரோ பரமன் ...

யாளியின் வாயில் சிற்பம் (இதன் உயரம் சுமார் 12 செ.மீ)



ஆடலும், பாடலும் - மிகச் சிறிய சிற்பங்கள்

இது யார், கல்யாணக் கோல சுந்தரரோ...


தல விருட்சம் - வில்வ மரம்

துர்கை அம்மன், பாவம் பூசி மெழுகிவிட்டார்கள். அனேகமாய் அடுத்த திருப்பணியில் காணமல் போய்விடுவார்

இந்த யானைத் துதிக்கையை பதம் பார்க்கும் யாளிக்கும் அதே கதிதான்...
நண்பர்களே,
இங்கு மனதை உறுத்திய இரண்டு விடயங்களில் ஒன்று ஆலயத்திருப்பணி செய்தால் ஆதீனத்திற்கு ஏதேனும் தீங்கு நேரும் என்று தள்ளிப் போட்டு வருவது, இரண்டாவது இங்கு இருக்கும் அழகிய சிற்பங்களுக்கு வண்ணம் அடிப்பது மற்றும் காரை பூசி மறைத்துவிடுவது.

லேபிள்கள்: , ,