திருவிற்கோலத்தில் பன்னிரு திருமுறை முற்றோதல்
உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம் - சேக்கிழார்
அரியும், பிரம்மனுமே முழுவதும் காணமுடியாத இறைவனை இவ்வுலகில் வாழும் சாதாரண உயிர்கள் உணர்ந்து போற்றிப் பாடுவது என்பது இறைவன் அருள் இருந்தால் மட்டுமே இயலும். அவ்வாறு ஈசனின் அருள்பெற்ற நல்ல உள்ளங்கள் பல வள்ளலார் வழிபாட்டு மன்ற ஆன்ம நேயக் குழுமம் என்று அரியதொரு குழுவை உருவாக்கி, பன்னிரு திருமுறைகளையும் தங்கள் வாழ்வில் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறைப் பாடி பரமனின் அருள் பெற்றே தீருவோம் என்று கங்கனம் கட்டிக் கொண்டு திருமுறைகளை பல அன்பர்கள் இல்லங்களிலும் சென்று ஓதி வருகின்றனர்.
இது நடைபெறுவது சென்னைக்கு அருகே கடம்பத்தூரில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள கூவத்தில். கூவம் என்ற உடனே நினைவிற்கு வருவது துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கும் சென்னையின் ”புனித” நதி கூவம் தான். ஆனால் அதுவல்ல இந்த கூவம், திருவிற்கோலம் என்ற அழகான பொருள் பொதிந்த பெயர் கொண்ட ஊர் இன்று கூவம் என்றழைக்கப் படுகிறது. திரிபுரம் எரித்த காலத்தில் மேருமலையாலான வில்லை கையில் பிடித்த கோலத்தில் ஈசன் நின்ற இடமாதலின் திருவிற்கோலம் என பெயர் பெற்றது.
இந்த ஊரில் உள்ள புகழ் பெற்ற ஆலயத்தின் இறைவன் திரிபுரசுந்தரி உடனுறை திரிபுராந்தகர் (திருவிற்கோல நாதர்). இங்குள்ள தீர்த்தத்திற்கு அச்சிறுகேணி மற்றும் கூபாக்கினி தீர்த்தம் என்று பெயர். ஒரு விசித்திரம் என்னவெனில் இந்த குளத்திலோ அல்லது அதைச் சுற்றியிருக்கும் வயல்வெளிகளிலோ தவளைகளே கிடையாதாம், வேறு எங்கிருந்தாவது பிடித்துக் கொண்டு வந்து விட்டால் கூட உடனே ஓடிவிடுமாம், இது அந்த அக்கினி தீர்த்தத்தின் மகிமை போலிருக்கிறது. கூபாக்னபுரி என்ற பெயரும் இந்த ஊருக்கு உண்டு. இந்த கூபாக்னபுரிதான் பின்னர் கூவம் என்று வழங்கலாயிற்றோ!
நண்பர் திரு. பாலசுப்பிரமணியத்தின் இல்லத்தில் நடந்த திருமுறை முற்றோதல் விழாவினை இந்தப் பதிவில் கண்டு களிப்போம்.
இதோ தங்கள் முன்னே திரிபுராந்தகர் ஆலய கோபுரம்
ஐயன்நல் லதிசயன் அயன்விண் ணோர்தொழும்மையணி கண்டனார் வண்ண வண்ணம்வான்
பையர வல்குலாள் பாகம் ஆகவும்
செய்யவன் உறைவிடம் திருவிற் கோலமே.
இறைவர் யாவற்றுக்கும் தலைவர். பல பல வேடம் கொள்ளும் அதிசயர். பிரமனும், மற்றுமுள்ள விண்ணோர்களும் தொழுகின்ற மை போன்ற இருண்ட கண்டத்தர். நல்ல வண்ணமுடைய, பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு செம்மேனியராய் அவர் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.
மேலுள்ள பாடலில் சம்பந்தர் குறிப்பிட்டுள்ளது போல் மழை, வெள்ளம் வருமுன்னே இவ்வாலய இறைவன் மீது வெள்ளை நிறம் படருமாம், அது போல் யுத்தம் நிகழுமாயின் செம்மை (சிவப்பு) நிறமும் தோன்றுமாம். ஆனால் இந்த மாற்றங்கள் தற்சமயம் நிகழ்வதில்லை என்று கூறுகிறார்கள்.



விடைக் கொடியேற்றத்துடன் தொடங்கும் முற்றோதல்

விடையேறும் செல்வனை வணங்கி அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அண்ணலை போற்றி நாயன்மார்களால் பாடப்பெற்ற பாடல்களை பாடும் பணி தொடங்குகிறது
குழந்தைகளும் பெரியோர்களும் சூழ முற்றோதல் ஆரம்பமாகிவிட்டது

என்ன தவம் செய்தார்கள் இவ்வரிய நிகழ்ச்சியில் பங்கேற்று இறைவனருள் பெறுதற்கு!



இந்த நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்த வந்திருக்கும்

காஞ்சீபுர தொண்டை மண்டல ஆதீனகர்த்தர், சீலத்திரு. திரு அம்பல ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
ஆதீனகர்த்தரின் அருளுரை, அருகே வலது புறம் கண்மூடி அருளுரையில் ஆழ்ந்திருக்கும் நண்பர் பாலசுப்பிரமணியம்
முற்றோதலின் ஒரு பகுதி முடிந்து இறைவனுக்கு ஆராதனையும் நடைபெற்றாயிற்று
மண்ணின் மிசை வான்பொய்த்து நதிகள் தப்பி
மன்னுயிர்கள் கண்சாம்பி உணவு மாறி
விண்ணவர்க்குஞ் சிறப்பில்வரும் பூசை யாற்றா
மிக்கபெரும் பசியுலகில் விரவக் கண்டு
பண்ணமரும் மொழியுமையாள் முலையின் ஞானப்
பாலறா வாயருடன் அரசும் பார்மேல்
கண்ணுதலான் திருநீற்றுச் சார்வி னோர்க்கும்
கவலைவரு மோஎன்று கருத்திற் கொண்டார்.
இம்மண்ணுலகில் மழை மறுத்ததனால் ஆறுகளில் பருவவெள்ளம் பாயாது தவறி, அது காரணமாய் உலகத்து உயிர்கள் வருந்தி, உணவின்றி நின்றமையால், தேவர்களுக்கும் சிறப்பு வழி பாடுகளும் நாள்வழிபாடுகளும் செய்யப்படாமல் மிக்க பெரும் பசியின் கொடுமை உலகில் பொருந்திய நிலையைக் கண்டு, பண் பொருந்திய சொல்லையுடைய உமையம்மையாரின் கொங்கையின் பால் நீங்காதவாயினரான பிள்ளையாருடன் திருநாவுக்கரசரும் `உலகில் நெற்றிக் கண்ணரான திருநீற்றுச் சார்புடைய தொண்டர் களுக்கும் கவலை வருமோ?' என்று தம் உள்ளங்களில் எண்ணினர்.
நம்மவர்களுக்கு பசியும், பிணியும் வருமா? நிச்சயமாக வாய்ப்பே இல்லை. துன்பம் தீர்க்கும் கோளறு பதிகத்தையும், பிணி தீர்க்கும் திருநீறு பதிகத்தையும் உள்ளிட்ட திருமுறைகளை பாடும் நம் அடியவர்களால், அவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே நன்மைதான் என்றும்.
செவியமுதை சுவைத்த அனைவரும் உணவமுதை சுவைக்கும் காட்சி. அளவோடிருந்தால் சகல உணவுப் பொருள்களும் அமுது தானே!
செவியமுதை சுவைத்த அனைவரும் உணவமுதை சுவைக்கும் காட்சி. அளவோடிருந்தால் சகல உணவுப் பொருள்களும் அமுது தானே!
திருமுறை முற்றோதலில் ஈடுபட்டிருக்கும் இந்த நல்ல உள்ளங்களின் முயற்சியை பாராட்டி, ஈசன் அருளால் இது தொடர்ந்து உலகம் உள்ளவரை தொடரவேண்டும் என்று இறைவனை வேண்டி வணங்குவோம்.சிவாய நம
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
லேபிள்கள்: கூவம், திருவிற்கோலம், பன்னிரு திருமுறை முற்றோதல்


























