செவ்வாய், 8 நவம்பர், 2016

பாலை தந்த இன்பம்

ஆதியந்தமில்லாத கருநீல ஆகாயக் குடையின் கீழே பொன் துகள்களாலான கடலின் நடுவிலோர் அலைக்குன்றின் உச்சியிலமர்ந்து பாலொளி பொழியும் நிலவோடு உரையாடிக் கொண்டிருக்கையில் சில்லென்று தென்றல் வந்தென் தேகமெங்கும் பரவியானந்த குளிராட்டிய பரவசத்தில் விழிவிரிய சட்டென்று எட்டிப் பார்த்த விண்மீனொன்றின் திகைப்பால் ஒளிவிழிமீன்கள் வானெங்கும் முளைக்க கண்டெனுள்ளத்திலானந்த வெள்ளம் பெருக்கெடுத்தோடி புலங்காகிதமடைந்து அமைதிபெற்ற வேளையில் சித்தத்திலோருதயம் சொன்னது காலத்தின் கட்டற்ற மாற்றத்திலும் மாறவில்லை இயற்கையோடுறவாடும் இன்பமின்றுமென்று...

#desertlife

லேபிள்கள்: , , ,

பிதற்றல்... (விளைவுகளுக்கு கம்பேனி பொறுப்பல்ல)

எல்லையைக் காட்டி தொல்லை கொடுத்த பகலின் வெளிச்சம் விலகியோட, அதனைத் துரத்தி வந்த இரவின் கருமை விரைந்து தழுவ, எல்லைகள் மறைந்து உலகின் உண்மையொளியாம் இருளேயென உணர்த்தியதைப் போன்றதொரு உணர்வு. உலகும், உள்ளமும், பால்வெளியும் பரந்து விரிந்து படர்ந்து, உள்ளேயும், வெளியேயும் ஒன்றே என உணர்ந்ததைப் போலிருந்த நேரத்தில் அடித்த குளிர்க் காற்றில் உடல் சிலிர்த்து, இமைகள் மூடி அண்ணாந்து, பெருமூச்சு விட்டு கண் திறக்கையில், எட்டிப் பார்த்ததொரு பெருவொளி  நட்சத்திரம் கரு வான  திரைக்குள்ளிருந்து. துள்ளிக் குதித்தது என் மனம், காரணம் எட்டிப் பார்த்த விண்மீன் கைதட்டி சொன்னது என்னைத் தெரியுமென்று. பித்தனாகிப் போனேனா, சித்தம் தான் சிதைந்து போனதா, இல்லை சொப்பனந்தான் வந்ததா, குழம்பினேன். தலை குலுக்கி, விழி விரித்து, தரை பார்த்து, இடவலம் நோக்கி, என் அங்கம் பார்த்து, ஐயந்தெளிந்து, மீண்டு வானம் நோக்க கலுக்கென்று கண்சுருக்கி நகைத்தது அந்த நட்சத்திரம். "இஃதொன்றும் அதிசயமில்லையே, தினமும் என்னைப் பார்க்கின்றாய் அதனால் அறிந்திருப்பாய்" என்றே அலட்சியம் காட்டினேன். "தனை மறந்து, தன்னிலை மறந்து, மகிழ்ச்சியென நினைத்து, தனக்குத் தானே அழிவைத் தேடும் அற்ப மானிடப் போர்வையில், உனையும் மறந்து, எனையும் மறந்து, உன்னாற்றலையும் மறந்து, இயல்பை விட்டு விலகி, மயங்கிக் கிடக்கிறாய். உலகையே ஆக்கும் ஆற்றலிருந்தும், அற்ப அறிவால் உலகினை அறிவதே அறிவியல் என்று ஆர்ப்பரித்து அழித்து மகிழ்கிறாய். உன் மூதாதை அளித்ததை அழித்து விட்டு, வெற்று ஜாலங்களில் மயங்கி களித்திருக்கிறாய்" என்று கதறிய விண்மீனின் விழிகளிலிருந்து தெறித்தது வெண்துளிகள். உடல் நடுங்கி "பித்தனாகிப் போவேன் உன் உளறலைக் கேட்டால். பைத்தியம் என்பார்கள் இதை வெளியில் சொன்னால். வீண் பேச்சு வேண்டாம், விட்டுவிடு என்னை" என்று பதிலளித்துவிட்டு நடையைக் கட்ட "பைத்தியக்காரனடா நீ, மீண்டும் உனை சந்திப்பேன். உன் பூட்டனுக்குப் பின் உன்னைத் தான் பிடித்திருக்கிறதெனக்கு, அவனை இழுத்தேன் வந்து விட்டான். உனையின்று விடுகிறேன் ஆனால் விட்டுவிடமாட்டேன்" என்று எக்காளமிட்டது என் பின்னே...

லேபிள்கள்: , , , ,