திருநாவுக்கரசர் தேவாரம் (கடைசிப் பதிகம்)
பாற்கடலைக் கடைந்த பொழுது கொதித்தெழுந்த ஆலகால விஷத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் வேண்டிக் கேட்டதும் சிங்கம் போல் துளியும் அஞ்சாமல் அதையள்ளி உண்ட மூப்பும், மரணமும் இல்லாதவனே, எலும்புகளை ஆபரணமாய் அணிந்து, அக்கினியை ஏந்தி ஆடுபவனே, திருவாதிரை நாளை உடையவனே, கல் ஆல மரத்தினடி அமர்ந்து ஞானத்தை போதிக்கும் குருவே, நந்தியின் மீதேறி பயணிப்பவனே, குறைவின்றி பரந்து விரிந்த சடாமுடியை உடயவனே, பாம்பிற்கும் நிலவுக்குமான பகையதனை தீர்த்து சூடிக் கொண்டவனே, உனதடி சரணடைகிறேன் திருப்புகலூர் நிறைத்த தேவர்களுக் கெல்லாம் தேவனே...
அங்கமே பூண்டாய் அனலா டினாய்
ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய்
பங்கமொன் றில்லாத படர்சடை யினாய்
பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய்
சங்கையொன் றின்றியே தேவர் வேண்டச்
சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்
சிங்கமே உன்னடிக்கே போது கின்றேன்
திருப்புகலூர் மேவிய தேவ தேவே.
#திருநாவுக்கரசர் கடைசி பதிகம். அவர் முக்தியடையும் சமயத்தில் பாடியதாக கருதப்படுகிறது.
லேபிள்கள்: அப்பர், திருநாவுக்கரசர், திருமுறை, தேவாரம்