செவ்வாய், 26 நவம்பர், 2019

சுவேகா...

அப்போ எனக்கு ஏழு இல்ல எட்டு வயசு இருக்கும், ஒருநாள் சாயங்காலம் தூரத்துல இருந்து கேட்ட மோட்டார் சத்தம் வீட்டுக்கு வெளியில வந்து ஆஃப் ஆச்சு. நானும், அக்காவும் என்னன்னு வெளியில வந்து பார்த்தா, ப்ளூ கலர்ல இருந்த வண்டியில எங்கப்பா!

அந்த காலத்துல மோட்டார் வண்டி வச்சிருந்தவங்களே ரொம்ப கம்மி தான், அதுவும் எங்க தெருவுல நெறையா வீட்டுல சைக்கிள் கூட இருக்காது. அந்த மாதிரி சமயத்துல எங்கப்பா வண்டியில வந்ததுல எனக்குள்ள அவ்ளோ பெருமை. யாரோ வந்து 'என்ன வண்டி இது? வாங்கி இருக்கீங்களா?'ன்னு கேட்க, 'ஆமா இன்னிக்குதான் வாங்கினேன், இது சுவேகா'ன்னு எங்கப்பா சொன்னதும் மனசுக்குள்ள சுவேகா, சுவேகா ன்னு சொல்லி பழகிக்கிட்டேன்.

உடனே வண்டியில ஏறி ஒரு ரவுண்டு போகணும்னு ஆசை, ஆனா கேட்க பயம். ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு எங்கப்பா, ஸ்ட்ரிக்ட்னா ஸ்ட்ரிக்டு அவ்ளோ ஸ்ட்ரிக்ட்டு. நான் பார்த்துக்கிட்டே நின்ன நேரம், வீட்டுக்கு வெளியில வண்டிய நிறுத்திட்டு உள்ள போயிட்டார் அப்பா. வண்டியில ஏறி போக முடியலையேன்னு ஒரு பக்கம் வருத்தமா இருந்தாலும் வண்டிய சுத்திப் பார்க்க சுதந்திரம் கிடைச்சுதேன்னு குஷியாகி சுத்தி சுத்தி வந்தேன், எவர் சில்வர் டிபன் பாக்ஸ் மாதிரி ஏதோ இருக்க அதையத்  தொட்டு கைய வேற லைட்டா சுட்டுக் கிட்டேன். தெருவுல இருந்த பசங்க கிட்டயெல்லாம் எங்கப்பா புது வண்டி வாங்கிருக்கார்ன்னு சொல்லி பெருமையா தம்பட்டம் அடிச்சிக்கிட்டு இருந்தேன். அப்புறம் கொஞ்ச நேரத்துல ஒரு பெரிய பலகையை எடுத்துட்டு வந்து படிக்கட்டு மேல வெச்சு, வண்டிய மேல ஏத்தி வீட்டுக்குள்ள பார்க் பண்ணிட்டு எல்லாரும் தூங்கப் போயாச்சு. மனசுக்குள்ள நான் மட்டும் வண்டிய சுத்தி சுத்தி வந்துகிட்டு இருந்தேன்.

இப்படியே சில நாள் ஓட, ஒருநாள் சாயங்காலம் வீட்டுக்கு வெளியில விளையாடிட்டு இருக்கும்போது திடீர்னு எங்கப்பா கூப்பிட்டு 'வா, வண்டியில ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்'னாரு. இதற்குத்  தானே இத்தனை நாள் காத்துக் கிடந்தேன்னு ஓடிப் போய் நின்னேன். வண்டிய ஸ்டார்ட் பண்ணிட்டு, என்னைய வண்டியில ஏத்தி உட்கார வெச்சி, அவரும் உட்கார்ந்து, அவரோட இடுப்பை சுத்தி டைட்டா புடிச்சிக்க சொல்லிட்டு என் கையப் புடிச்சி சொல்லிக் குடுத்துட்டு கிளப்பினார் வண்டிய. (இதையே இப்போ என் அஞ்சு வயசு பையன்கிட்ட சொன்னா, எல்லாம் எனக்கு தெரியும் நீ வண்டிய ஓட்டுப்பான்னு சொல்றான்.)

என்னோட முதல் முறை மோட்டார் சைக்கிள் பயணம், மூணு இல்ல நாலு கிலோமீட்டர் தூரம் போயிருப்போம், அதுவே ஒரு பெரிய லாங் ட்ரிப் போன பீலிங்ஸ். அரை கிலோமீட்டர் போனாவே ஊர தாண்டிருவோம், அதுக்கப்புறம் எல்லாம் வயல் வெளிதான். வேகமா காத்து காத உரசிக்கிட்டு போக, கண்ணைத் திறந்து, மூடி, எங்கப்பாவை இறுக்கிப் பிடிச்சிக்கிட்டு என்னவோ பறந்து போறாப்பல ஒரு நினைப்பு. அந்த வண்டி அன்னிக்கு அதிகபட்சம்  40கி.மீ. வேகத்துல போயிருக்கும். இன்னிக்கு என் வண்டியில 120 கி.மீ வரைக்கும் போயிருக்கேன், அதுவும் சுகம்தான் ஆனாலும் அன்னிக்கு எங்கப்பா பின்னால உட்கார்ந்து போன சுகத்துக்கு இன்னிக்கு கிடைக்கற எதுவும் ஈடு இணையில்லை!

எதேச்சையா கூகுள்ல இந்த போட்டோவ பார்த்ததும் மண்டைக்குள்ள இருந்து புதையல் எடுக்க வேண்டியதாயிடுச்சி. பின்னால குஷன் சீட் மட்டும் மிஸ்ஸிங் இந்த போட்டோல இருக்கற வண்டியில.

PC:https://www.bikes4sale.in/
Vintage Scooter Suvega Super 50


லேபிள்கள்: , , ,

வியாழன், 11 ஏப்ரல், 2019

என் பட்டமே பற பற பற பற...

ஆடிக் காத்துல அம்மியும் பறக்கும்னு கேள்விப்  படாதவங்க இருக்கமாட்டீங்க? அந்த காத்துல அம்மி பறக்குதோ இல்லையோ நம்ம பசங்க விடற பட்டம் (அதாங்க மெட்ராஸ் பாஷையில காத்தாடி) ரொம்ப ஜோரா பறக்கும் வானத்துல.

பட்டம்னு சொன்ன உடனே அப்படியே நான் மோட்டுவளைய பார்க்க (ம்ம்க்கும் மோட்டுவளை எங்க இருக்கு கான்க்ரீட் கூரை தான் தெரியுது!) அதாவது ஒரு பிளாஷ்பேக் எபக்ட்டுக்கு  அப்படி பார்த்தேங்க. சரி அத விடுங்க, அப்படியே ரீவைண்ட் பண்ணி போறோம்.

எங்க ஊர் தேர்முட்டி (தேரடி) பக்கத்துல நல்ல  உயரமான  ஒரு மேடை இருக்கும். அதுக்கு பக்கத்துல தான் தேர நிறுத்தி வச்சிருப்பாங்க. நல்ல பெரிய தேர், நிறைய அழகழகான சிற்ப வேலைப்பாடு நிறைந்த மரத்தேர்.  அந்த மேடை மேல ஏறினா தேர் பீடத்துக்கு ஈஸியா போயிரலாம். சரி, அது கிடக்கட்டும். ஆடி மாசம்னு வந்துட்டாலே எங்க பக்கத்துப் பசங்க எல்லாரும் கையில நூல்கண்டோட அந்த மேடை மேலதான் கூட்டமா நிப்பாங்க. எல்லாரும் பட்டம் விட்டுகிட்டு ஒரே கூச்சலும், கும்மாளமுமா இருக்கும். ஆனா இந்த மாஞ்சா கீஞ்சானு சொல்றாங்களே அதெல்லாம் ஒன்னும் தெரியாது எங்களுக்கு. பட்டமும்  காசு குடுத்தெல்லாம் எல்லாரும் வாங்க மாட்டோம், நாங்களே செஞ்சிடுவோம், ஆமா இது என்னா பெரிய கம்பசூத்திரமான்னு கேக்கறீங்களா! (ஆமா, அது கம்ப சூத்திரமா இல்ல கம்ப சித்திரமா? சூத்திரமா தான் இருக்கணும், ஏன்னா கம்ப இராமாயண பாடல்கள்ல அவ்வளவு உள்ளர்த்தங்கள் பொதிஞ்சு கெடக்கு.)

அப்பவெல்லாம் வீட்டுல ஒரே ஒரு பட்டம் வாங்க காசு தேத்தறதுக்கே படாத பாடாயிடும். சில வெவரமான பசங்க இந்த சமயத்துல நல்ல காசு பார்ப்பாங்க. ஒரு ஐம்பது காசுக்கு கலர் பேப்பர் வாங்கினா போதும் அதுல சிறுசு, பெரிசுனு அஞ்சு அல்லது ஆறு பட்டம் பண்ணிடுவாங்க, வீட்டுக்கு வெளியில ஒரு கயித்துக் கட்டில போட்டு அதுல பட்டத்தை எல்லாம் கட்டி மார்க்கெட்டிங் பண்ணி வித்துடுவாங்க. எப்படியும் ஒரு பட்டம் 25 காசுல இருந்து 1 ரூபாய் வரைக்கும் போகும், காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிதுனு கொண்டாட்டம்தான் அவங்களுக்கு. இன்னிக்கெல்லாம் 500, 1000ம் ரூபாய்க்கே மதிப்பில்ல, ஆனா அன்னிக்கு வெறும் பத்து காசுக்கு எவ்வளவோ என்ஜாய் பண்ணுவோம்!

எப்படியாவது பைசாவ தாத்தாகிட்டயோ இல்ல பாட்டிக்கிட்டயோ தேத்திட்டு போய் கலர் பேப்பர் வாங்கி பட்டம் செஞ்சிடுவோம். ஆனா ஒன்னு, அப்படி வாங்கின பட்டம் எப்படியும் ஒரு மணி நேரத்துக்குள்ள கிழிஞ்சிடும் இல்ல எங்கயாவது ஒரு வீட்டு ஓட்டுலயோ, கரண்டு கம்பத்துலையோ, இல்ல பெரிய மரத்துலயோ போய் மாட்டிக்கும். ஆசை யாரைத்தான் விட்டது! நல்லா காத்து அடிக்கும்போது பட்டம் ரொம்ப உயரமா பறக்கும், உடனே போட்டி வந்துடும் “ டேய் என் பட்டம் தான்டா வானமே தாண்டி பறக்குது”னு ஒருத்தன் கத்திட்டான்னா போதும் உடனே அடுத்தவன் நூல்கண்டு புதுசா வாங்கிட்டு வந்து நீளத்த அதிகமாக்குவான், அப்புறம் அவனும் அதே மாதிரி கத்துவான், இப்படியே ஒவ்வொருத்தரா ஆரம்பிக்க கடைசியில் யாரோட பட்டமும் திரும்பி வராது. இந்த நூல்கண்டு பிரச்சினைய சமாளிக்க, நாங்க ஒரு வாரத்துக்கு முன்னாலயே குறைஞ்சது பத்து நூல்கண்டாவது வாங்கிட்டு வந்து ஒரு குச்சியில முடிச்சி போட்டு முடிச்சி போட்டு சுத்தி வச்சிடுவோம்.

பட்டம் கிழிஞ்சி போயிடிச்சினா ஓரமா போய்  உட்கார்ந்திடுவோம்னு மட்டும் நினைக்காதீங்க. பட்டம் டெக்னாலஜி தன நமக்கு நல்லா தெரியுமே. வீட்டுல கிடைக்கற பழைய செய்தித்தாள வச்சி, தென்னை இலையிலிருந்து வருமே அதுதாங்க நம்ம விளக்கமாறு (துடைப்பம்) அதுல இருந்து குச்சிய உருவி, பசையெல்லாம் போட்டு பக்காவா பட்டம் ரெடி பண்ணிடுவோம். அதுக்கு வால் வேற டிஸைன் டிஸைனா கட்டி விடுவோம், பல தாத்தாக்களோட கோவணம் அன்னிக்கு காணாம போகும். அப்புறம் என்ன, இன்னொரு முறை அதே மாதிரி போட்டிதான், காது கிழிய கத்தல் தான். ஆடிக் காத்து நிக்கற வரைக்கும் இதே வேலைதான். சில ஆர்வக் கோளாறு கேசுங்க பள்ளிக்கூடத்துக்கே பட்டத்த   எடுத்துகிட்டு வந்து, இண்டெர்வெல் நேரத்துல  பறக்கவிட்டு ஸீனப் போட்டு வாத்தியார்கிட்ட செம்ம மொத்து வாங்குங்க.

குட்டி குட்டி வாண்டூஸ்லாம் ஒரு பத்தடி நீளக் கயிறுல பட்டத்த கட்டிக்கிட்டு தெருவை சுத்தி ஓடு ஓடுனு ஓடிக்கிட்டே இருக்குங்க. அப்பப்பா! ஊரே ஒரே (பட்டம் கட்டி) களைக் கட்டி இருக்கும் ஆடி மாசத்துல. சில நேரத்துல பொழுது போகாத பெரியவங்களே வந்து நல்லா பறக்குற பட்டத்த பார்த்து ஆஹா ஓஹோனு பாராட்டுவாங்க பாருங்க, அப்படியே நம்மள தூக்கி அந்த பட்டத்து மேலயே உட்கார வெச்சா மாதிரி மனசும் சேர்ந்து பறக்கும்.

படிச்சு பட்டம் வாங்கத்தான் வயசு வேணுமாம், பட்டம் விடவெல்லாம் வயசு ஒரு பிரச்சினையே இல்லையாம். நாம  எந்த வயசுலயும் பட்டம் விடலாம், கிழிக்கலாம். குழந்தைகளா மாறுவோம், கும்மாளமடிப்போம், அந்த நாள் குடுத்த மகிழ்ச்சிய  இன்னிக்கும் அனுபவிப்போம்.

அதனால ஆடிக்கு எல்லாரும் ரெடியா இருங்க, கடற்கரைக்கோ, ஆத்தங்கரைக்கோ, இல்ல வெட்டவெளிக்கோ போயி பலூனெல்லாம் வாங்காம, நல்ல பட்டம் ஒன்னு வாங்கி விடுங்க. கூடவே குட்டீஸையும் கூட்டிட்டு போங்க. என் பட்டமே பற பற பற பறனு  என்சாய் பண்ணுங்க.

லேபிள்கள்: , , , , , , , ,