வானாகி மண்ணாகி...
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே
மாணிக்கவாசகரின் இந்தப் பாடல் முழுவதுமாக இல்லையெனினும் முதல் இரண்டு வார்த்தைகளாவது பெரும்பான்மையோர் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. ஏதோ ஒன்றை தேடிக்கொண்டிருக்கையில் கண்ணில் பட்ட இந்த பாடலால் மனதில் எழுந்த பள்ளிப் பருவத்தின் நிகழ்வு ஒன்றை எழுதலாமென்று தோன்றியது.
ஆரம்பப் பள்ளி முடிந்து உயர்நிலைப் பள்ளிக்கு மாறிய தருணம், எல்லாமும் மாறியது. திறந்த வகுப்பறை மாறி மூடிய (கதவைத் தவிர) வகுப்பறை, தரையில் அமர்ந்து படித்த வகுப்பிலிருந்து பெஞ்சு மேசை, பக்கத்து வீட்டுக்காரரைப் போல் பழகிய ஆசிரியைகள் எல்லாம் மாறி விறைப்பாய் தெரிந்த ஆசிரியர்கள், மதிய உணவுக்கு இல்லம் சென்றது மாறி டப்பா சோறு, நீண்ட நடை பயணம், மாபெரும் வளாகம் என்று எல்லாமும் மாறிவிட்டிருந்தது.
சற்றே மிரண்டுபோய் உட்கார்ந்திருந்த முதல்நாள் முதல் வகுப்பாக வந்தது தமிழ், 'பிருகந்நாயகி' மொத்தமானதொரு கண்ணாடி அணிந்து சற்றே குள்ளமாக வந்தார் தமிழ் ஆசிரியை. அறிமுகம் நடக்கையில் சாதுவாக தெரிந்த அவர் புத்தகத்தை கையில் எடுத்ததும் மொத்தமாய் மாறினார், ஆரம்பத்தில் இருந்தே அவர் முகத்தில் சிரிப்பு மட்டும் தென்படவேயில்லை.
வானாகி மண்ணாகி என்று ஆரம்பித்து, ஒரே மூச்சில் மொத்த பாட்டையும் முடித்துவிட்டு நாளை அனைவரும் படித்துவிட்டு வந்து ஒப்பிக்க வேண்டும் என்று கூறி கிளம்பும் முன் குறிப்பாக ஒரு மாணவனைப் பார்த்து "நாளைமுதல் கட்டை ஸ்கேல் எடுத்து வரவேண்டும்" என்று சொல்லிக் கிளம்பினார். அந்த மாணவன் இரண்டாம் ஆண்டு அதே வகுப்பில் படிக்க வந்திருக்கிறார் என்றறிந்தோம் பிறகு.
முதல் நாள் பள்ளி முடிவதற்குள் முதல் வகுப்பு சம்பவம் மொத்தமாக மறந்து போனது. வீடு திரும்ப நீண்ட பயணமாதலால், கூட்டமாக நண்பர்களுடன் குதூகலித்து, கூத்தடித்து வீட்டில் சென்று கதையளந்து களைத்து தூங்கிப் போனேன். மறுநாள் மதிய உணவிற்குப் பின் வந்தது தமிழ் வகுப்பு, உள்ளே வந்தமர்ந்த ஆசிரியை அவருக்கு வலப்பக்கம் இருந்த முதல் பென்ச் மாணவனை அழைத்து பாட்டை சொல்லச் சொன்னார். அவன் பேச்சின்றி மலைத்து நிற்க, பூபதி அந்த ஸ்கேலை கொடு என்று வாங்கி கைகளை நீட்டச்சொல்லி கைமுட்டியில் பதினாறு அடிகள் சரிபாதி பிரித்துக் கொடுத்தார். அப்பொழுது தான் எங்களுடைய வயிற்றுக்குக்குள் ஏதோ உருள ஆரம்பித்தது. முதல் பெஞ்சின் இடதுபக்கத்தில் முதலாவது ஆளாக உட்கார்ந்திருந்த நான் எனது முறை வருவதற்குள் மணி அடித்துவிடாதா என்று வேண்டிக்கொள்ள ஆரம்பித்தேன்.
வார்த்தைக்கு ஒரு அடி என்று கணக்கு வைத்து கொடுத்து வந்து கொண்டே இருந்தவர் என்னையும் அழைக்கும் தருணம் வந்ததும் மணி அடிக்காதா என்று வெளியே பார்த்துக் கொண்டிருந்த என்னை "என்ன வேடிக்கை" என்று அதட்டி அழைத்தார். 'போச்சுடா' என்று உள்ளுக்குள் நடுங்கி சென்ற நான்
"வானாகி மண்ணாகி...
வானாகி மண்ணாகி...
வானாகி மண்ணாகி..." என்று நின்றதும் "ம்ம்ம்...நீட்டு கையை" என்று இரண்டு கையிலும் அடி வெளுத்து விட்டார். எனக்குப் பிறகு சிலரை கேட்டதும் அந்த வகுப்பு முடிந்தது. முதல் முறை முட்டியில் அடிவாங்கிய நாங்கள் அன்றே அவருக்கு 'முட்டியடி முனியம்மா' என்று பெயர் வைத்துவிட்டோம். அதற்கு பிறகு இரண்டு நாள் கழித்து என் தருணம் மீண்டும் வருவதற்குள் செய்த மனப்பாடத்தை நன்கு ஒப்பித்ததும் தான் பிறந்தது நிம்மதி. அதன் பிறகு மற்றவர்கள் அடிவாங்குவதையும், அடிக்கும் பொழுது கையை பின்னுக்கு இழுத்த சிலர் இரண்டு அடிகள் சேர்த்து வாங்குவதையும் பார்த்து மற்றவர்கள் ஆனந்தித்தோம் (என்ன ஒரு அல்ப புத்தி).
அன்றைக்கு அடித்தாலும், இன்றைக்கும் அந்த பாட்டும், ஆசிரியையும் நினைவுல பசுமையா இருக்காங்க. மற்ற ஆசிரியர்கள் கூட, குறைச்சி இருந்தாலும் எங்களுக்கு கிடைச்ச தமிழ் ஆசிரியர்கள் அத்தனை பேரும் அருமையானவர்கள், என்றும் நினைவில் நிற்பவர்கள்!
லேபிள்கள்: manikkavaasagar, nostalogy, school days