ஞாயிறு, 13 மே, 2018

ஒரு நல்ல நாள் பார்த்து வர்றேங்க...

ஒரு பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தின் சென்னை கிளையின் குளுகுளு பத்தாவது தளம், சூரியனின் உக்கிரத்தில் கொதித்தெழுந்து அலையடிக்கும் கடலின் அழகை அவ்வப்பொழுது பார்த்து ரசித்தவாறு அடுத்த இரண்டு நாட்கள் நடக்கவிருக்கும் கிளையண்ட் ரெவியூவிற்கு தேவையான தகவல்களை தொகுத்துக் கொண்டிருந்தான் ஸ்ரீகணேஷ்.

"ஹாய் ஸ்ரீ" என்ற சத்தம் கேட்டு திரும்பியவன், மார்புயர பணியிடங்களுக்கு ஊடாக ஒய்யாரமாக நடந்து வந்தவளைக் கண்டு முகம் மலர்ந்து "ஹாய் சுஜா, என்ன இந்த பக்கம் அதிசயமா" என்று வரவேற்று அவளுக்கு பின்னால் வந்த நான்கு பெண்களை பார்த்ததும்"அதானே பார்த்தேன், காரியம் இல்லாம வரமாட்டியே" என்று கிண்டலடித்தான்.

"ஆமா, நாங்க எல்லாம் சும்மா உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கோம், சார் மட்டும் தான் வேலை பார்க்கறீங்க. ம்ம்ம், சரி அதை விடு, இவங்க தான் உன் டீம்ல ஜாயின் பண்ற புது ட்ரெயினீஸ். அனன்யா, அஸ்வினி, வித்யா அண்ட் மோனிகா" என அறிமுகப்படுத்த, முதல் மூவரும் "ஹெலோ சார்" என, மோனிகா மட்டும் "ஹாய்" என்றாள். "வெல்கம் டூ அவர் டீம்" என்று புன்னகைத்தான். 

அந்த நேரம் பார்த்து அங்கு வந்த செந்தில், புதிதாய் வந்த பெண்களையும் மற்ற இருவரையும் பார்த்து கடுப்பாகி முறைத்துக் கொண்டே "லன்ச் போலாமா, இல்ல..." என்று இழுத்தான். அவனுடைய எண்ணத்தை புரிந்து கொண்ட ஸ்ரீ, "சுஜா நீயும் எங்களோட வாயேன்" என அவளும் சரி என தலையாட்ட, "ரெண்டு பேரும் வெயிட் பண்ணுங்க, டூ மினிட்ஸ்ல வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு, எங்கு தன்னைக் கோர்த்துவிட்டு விடுவானோ என்று பயந்து மானிட்டருக்குள் தலையை நுழைத்துக் கொண்டிருந்தவனிடம் "வெங்கட், உன்னோட மாட்யூல் முடிஞ்சிருச்சா, என்ன ஸ்டேடஸ்" என கேட்க "அவன் இன்னும் ஒரு த்ரீ ஹவர்ஸ்ல முடிச்சிருவேன்" என புதிய பெண்களைப் பார்த்து நெளிந்த படியே பதிலளித்தான். 'சரிதான்' என்று புரிந்து கொண்டு "ஓகே, கேரி ஆன்" என்று சொல்லிவிட்டு சுற்றிலும் நோட்டம் விட்டவன் ட்ரைனீஸை அழைத்துக் கொண்டு அடுத்த வரிசையில் மொபைலை நோண்டிக் கொண்டிருந்த ரம்யா விடம் சென்றதைப் பார்த்து வெங்கட் 'யப்பா, தப்பிச்சோம்டா ' என்று பெருமூச்சு விட்டான்.

ரம்யாவை அறிமுகம் செய்துவைத்து, அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்கச் சொல்லிவிட்டு "சரி, நீங்க லன்ச் முடிச்சுட்டு வாங்க பிறகு சந்திப்போம்" என்று சொல்லி விடை பெற்று செல்ல, மோனிகா அவனை பார்ப்பதாய் உணர்ந்து திரும்பிப் பார்த்தான். ஆனால் அவள் பார்க்கவில்லை.

"அதென்ன இவனோட டீம்க்கு மட்டும் நல்ல நல்ல பிகருங்கள குடுக்கறது, மத்தவங்களுக்கு எல்லாம் மொக்க பசங்கள தள்ளிவிடறது?" என்று சுஜாவிடம் பொரிந்தான் செந்தில், ஸ்ரீ அருகில் வருவதைக் கண்டு. "ஸ்ஸ்ஸப்பா, ஆரம்பிச்சுட்டீங்களா உங்க பஞ்சாயத்த, போய் உங்க பாஸ் கிட்ட கேளு, எங்களுக்கு வர்ற இன்ஸ்ட்ரக்சன்படி தான் நாங்க குடுக்கறோம்" என்று சுஜா சலிக்க. "விடு சுஜா, இவன் எப்பவும் பேசறதுதான. சரி, லன்ச்க்கு கேன்டீன் போலாமா, இல்ல வெளியில போலாமா?" என்று பேச்சை மாற்றினான் ஸ்ரீ. "நோ...வே..., எனக்கு நெறையா வேலை இருக்கு இங்கேயே போலாம்" என சுஜா சொல்ல மூவரும் கிளம்பினர்.

சுஜா, ஸ்ரீ, செந்தில் மூவரும் ஒரே நாளில் என்ஜினீயரிங் ட்ரைய்னி ஆக சேர்ந்தனர். முதல் இரண்டு மாதங்கள் வேலையில்லாமல் சுற்றித் திரிந்ததில் இவர்களுக்குள் நல்ல பழக்கம் ஏற்பட்டுவிட்டது. பிறகு சுஜா MBA படித்து HR துறைக்குள் நுழைந்துவிட்டாள். ஸ்ரீ, தன் அபார திறமையினால் மூன்றே ஆண்டுகளில் ஒரு சிறிய ப்ராஜெக்ட் க்கு லீடர் ஆகி அதை திறம்பட முடிக்க, ஐந்து வருடம் முடியும் தற்சமயம் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் ப்ராஜெக்டை வெற்றிகரமாக முடிக்கப் போகிறான். சுந்தர் பிச்சை ரேஞ்சுக்கு தெரிந்ததனால் ஸ்ரீக்கு தனி கவனிப்பும், சிறப்புச் சலுகைகளும் உண்டு. செந்தில் எதற்கும் அலட்டிக் கொள்ளாதவன், 'பதவி, டார்ச்சர் எல்லாம் வேண்டாம்பா நமக்கு, எப்பவும் ஜாலியா இருக்கணும்' என்ற எண்ணத்தில் நாற்காலியை தேய்த்துக் கொண்டிருந்தான்.

லன்ச் முடிந்ததும் நண்பர்களை அனுப்பிவிட்டு சுடச்சுட காஃபியுடன் வந்தவன், புதியவர்களுக்காக கம்ப்யூட்டர், ஃபோன், ப்ரொபைல் க்ரியேஷன், சர்வர் அக்சஸ், இத்தியாதி சமாச்சாரங்களுக்காக ரம்யா அனுப்பியிருந்த ஈமெயில்களை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பார்வேர்ட் செய்துவிட்டு நால்வரையும் அழைத்து அவர்களுடைய பணி என்னவாக இருக்கும் என்று சுருக்கமாக விளக்கிவிட்டு "உங்களுக்கு ட்ரெய்னிங்னு தனியா எதுவும் இந்த டீம்ல கிடையாது, எல்லாமே ஆன் தி ஜாப் ட்ரெயினிங் தான், இப்போதைக்கு ரம்யா உங்களுக்கு எல்லாத்தையும் இண்ட்ரோ கொடுப்பாங்க, க்ளையண்ட் ரிவ்யூ முடிஞ்சதும் நான் அடுத்தது என்னனு சொல்றேன்" என்று கூறி அனுப்பி வைத்தான். இப்பொழுதும் மோனிகாவின் கண்கள் அவனை மொய்ப்பதாய் உணர்ந்தான்.

'கிளையண்ட் ரிவியூனா எல்லாம் ஒரே டென்ஷனா இருப்பாங்க போல' என்று நினைத்த ட்ரெயினிகளுக்கு அப்படி எதுவும் இல்லாமல் எல்லோரும் வழக்கம் போலவே இருந்தது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அவ்வப்போழுது அழைக்கப் பட்டவர்கள் மட்டும் மீட்டிங் ரூமிற்கு போவதும் வருவதுமாக இருந்தனர். "என்னக்கா எல்லாரும் ஜாலியா போயிட்டு வர்றாங்க, யாருக்கும் கொஞ்சம் கூட டென்ஷனே இல்ல" என்று ரம்யாவிடம் கேட்டாள் மோனிகா. "ஹா ஹா, நம்ம டீம்மோட ஸ்பெசாலிட்டியே அதுதான். எல்லாம் பர்ஃபெக்டா பிளான் பண்ணி சூப்பரா எக்சிக்யூட் பண்ணிடுவார் நம்ம பாஸ். ஸோ, எப்பவுமே நோ டென்ஷன். போகப் போக தெரிஞ்சுப்பீங்க" என்றாள் ரம்யா. புதிதாய் வந்த நாலு பேரில் மோனிகா மட்டும் கிராமத்துப் பெண்ணாக தெரிந்தாள். முதலில் அவளைக் கண்டதும் 'ஆஹா, இவளுக்கு ABCDல இருந்து ஆரம்பிக்கணும் போலிருக்கே' என்று நினைத்தாள் ரம்யா. ஆனால் போகப்போக மற்றவர்களை விடவும் இவள் பயங்கர ஷார்ப் என்று புரிந்து கொண்டாள்.

இரண்டாவது நாள், மதியத்தோடு முடிந்தது ரிவியூ. கிளையன்ட் பெருந்தலைகள் அனைவரையும் வழியனுப்பி விட்டு பெருத்த மகிழ்ச்சியுடன் வந்த ஸ்ரீ எல்லோரையும் மீட்டிங் ரூமிற்கு அழைத்தான். அங்கு ஏற்கனவே அமர்ந்திருந்த ஆபரேஷன் மேனேஜர், எல்லோருக்கும் அவரது பாராட்டுகளை தெரிவித்தார். எல்லா விதத்திலும் சிறப்பாக அமைந்ததால் கிளையன்ட்க்கு மகிழ்ச்சி என்றும், அதை தெரிவிக்கும் விதமாக மற்றுமொரு ப்ராஜெக்ட்டை இவர்களுக்கு வழங்க சம்மதித்து இருப்பதாகவும் கூறினார். அவரும் மகிழ்ச்சியோடு ஸ்ரீ மற்ற விவரங்களை தெரிவிப்பார் என்று கூறி விடைபெற்றார்.

"ஃபிரெண்ட்ஸ், போன வருஷம் இந்த ப்ராஜெக்ட்டை என்கிட்ட கொடுக்கும்  போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இருந்தாலும் சவாலா எடுத்துக்கிட்டு, உங்கள்ல ஒவ்வொருவரையும் அடம்பிடிச்சி கேட்டு வாங்கினேன். என் சாய்ஸ் கரெக்ட்னு நீங்க எல்லாரும் ப்ரூவ் பண்ணிட்டீங்க. நம்மோட டீமுக்கு கிடைச்ச மாபெரும் வெற்றி. நிச்சயம் செலிப்ரேட் பண்றோம், அதுவும் இன்னிக்கே, ஈவ்னிங் ட்ரீட் போலாமா? என ஸ்ரீ கேட்க, எல்லாரும் "யெஸ் லெட்ஸ் செலிப்ரேட்" என கோரஸ்ஸாக கத்த மோனிகாவும், வித்யாவும் திரு திருவென முழித்துக் கொண்டார்கள். "ஓகே, வென்யூ உங்க சாய்ஸ், மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன் அண்ட் மத்த டீடெயில்ஸ் அங்க பேசிக்கலாம்" என்று ஸ்ரீ  சபையை கலைத்தான். 

அவன் பின்னாலே சென்ற மோனிகா, "ஹெலோ பாஸ் நானும் வித்யாவும் அல்ரெடி வீக்கெண்ட் ஊருக்கு போக டிக்கெட் போட்டாச்சு, இப்போ ட்ரீட் க்கு வந்தா எங்களால பஸ் பிடிக்க முடியாது" எனக் கூற, "ஒன்னும் பிரச்னை இல்லை, நீங்களும் வாங்க முடிச்சுட்டு போகலாம், பை தி வே எத்தனை மணிக்கு பஸ்" என்று ஸ்ரீ கேட்க "பத்துக்கு" என்று பதிலுக்கு "ஓகே, நானே உங்களை ட்ராப் பன்றேன் டோன்ட் ஒர்ரி அண்ட் கெட் ரெடி" என்று சொல்லிவிட்டு தன் வேலையை பார்க்க கிளம்பினான். 

இதற்கிடையில் வெஜ், நான் வெஜ் கோஷ்டிகள் இரண்டும் கூடி பேசி ஒரு வழியாக பார்பெக்யூ நேஷன் போகலாம் என்று முடிவு கட்டி கிளம்ப தயாரானார்கள். வித்யாவும், மோனிகாவும் 'பாஸ் ஏதோ பெரிய கார் வெச்சிருக்கார் போல' என்ற எதிர்பார்ப்பில் ஸ்ரீயின் பின் போக அவன் செல்லும் திசையில் நின்றது ஒரு ஜீப். கருப்பு நிற ஜீப், மெட்டாலிக் க்ரே சக்கரங்களுடன், வெள்ளை நிறத்தில் தார் (THAR) என்று பெரிய எழுத்தில் எல்லா பக்கமும் எழுதியிருந்தது. முன்பக்க இருக்கைக்கு மட்டும் மெட்டல் கேபினும், பின்பக்கம் தார்பாய் போட்டும் மூடியிருந்தது. தன் பேண்ட் பையில் இருந்து எடுத்த மொபைல் போன்ற ஒரு டிவைசில் பட்டனை அழுத்த, ஜீப் விர்ரூம் என்று ஸ்டார்ட் ஆனது. 'ஓவர் ஸீன் தான்' என்று நினைத்துக் கொண்டே வித்யாவை பின்னால் உட்கார சொல்லிவிட்டு, முன் சீட்டிற்கு சென்றால் மோனிகா. வித்யாவிற்கு செம கடுப்பு, ஸ்ரீ க்கு ஆச்சர்யம், இருந்தும் இருவரும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. உள்ளே அமர்ந்த மோனிகாவிற்கு இன்னும் ஆச்சர்யம், காரணம் உள்ளிருந்த ஹைடெக் டேஷ்போர்டு. பெரிய டிஸ்பிளேவுடன், சினிமாவில் பார்த்த விமானத்தின் டேஷ்போர்டு போலிருந்தது தான். 

அவளது ஆச்சர்யத்தை புரிந்து கொண்டவன், "என்ன மோனிகா, டிஃபரண்டா இருக்கா? இதெல்லாம் என்னோட சொந்த டிசைன். இந்த வண்டியில இருக்கற நெறைய விஷயங்களை என்னோட மொபைல்ல இருந்தே கண்ட்ரோல் பண்ணலாம், ஓட்டுறத தவிர" என்று தனக்குத் தானே பெருமிதம் சேர்த்துக் கொண்டான். பார்வையாலேயே பாராட்டியவள், 'ரொம்பத்தான் பெருமை' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். 

பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பார்பெக்யூ நேஷனுக்கு பதினைந்து நிமிஷத்தில் வந்து சேர்ந்தனர். இவர்களுக்கு முன்னதாகவே பைக்கில் வந்த மக்கள் உள்ளே சென்று இடத்தைப் பிடிக்க தயாராகிக் கொண்டிருந்தனர். எல்லோரும் வந்ததும் ஆர்டர் சொல்லிவிட்டு "டிரைவ் பண்றவங்க யாரும் சரக்கு அடிக்காதீங்கப்பா, அதுக்கு தனியா ட்ரீட் நிச்சயம் உண்டு" என ஸ்ரீ சொல்ல, 'ஏஏஏ'...என்று ஆர்ப்பரித்தனர் சரக்குப் பிரியர்கள். "கைய்ஸ், நமக்கு கிடைக்கப் போற புது ப்ராஜெக்ட் இப்போ செஞ்சத விட பலமடங்கு சாலஞ்சிங்கா இருக்கப் போகுது. காரணம், இது வரைக்கும் யாரும் டச் பண்ணாத ஏரியா. விவசாயிகள் கிட்ட இருந்து நேரடியா கொள்முதல் செஞ்சி, ஸ்டோர் பண்ணி, பான் இந்தியா ஹோல்சேல் அண்ட் ரீடைல் சப்ளை தான் மெயின் ப்ரொஜெக்ட். அதுக்கான முதல் ஸ்டேஜ்ல, இன்வெஸ்ட்மெண்ட் பிளான் பண்ண அவங்களுக்கு நெறையா டேட்டா தேவைப்படுது. இதுக்காக ஒரு சர்வே கம்பெனியை எம்ப்ளாய் பண்ணிருக்காங்க கிளையண்ட், அவங்களே டேட்டா அனாலிஸிசும் செஞ்சு இவங்களுக்கு ரிப்போர்ட் தருவாங்க. பட், நம்ம கிளையண்ட்க்கு ஒரு ரிப்போர்ட்ட மட்டும் நம்பி இறங்க மனசு வரல. சோ அந்த சர்வே கம்பெனியோட டேட்டா மொத்தமும் வாங்கி நம்மகிட்ட கொடுப்பாங்க, நாம அந்த டேட்டாவை அனலைஸ் செஞ்சி நம்ம ரிசல்ட்ட அவங்களுக்கு கொடுக்கணும். இது முதல் கட்டம், அதுக்கப்புறம் தான் மெயின் ப்ராஜக்ட் ஸ்டார்ட் பண்றோம். மினிமம் மூணு வருஷம் கியாரண்டியா ஓடும் இந்த ப்ராஜெக்ட். இப்போ நாம டின்னர என்ஜாய் பண்ணுவோம்" என்று சொல்லிவிட்டு ஸ்ரீ தனக்குப் பிடித்த பார்பெக்யூ மீனையும், இறாலையும் உள்ளே தள்ள ஆரம்பித்தான்.
டின்னர் முடித்துவிட்டு ஒன்பது மணிக்கு கிளம்பிய அவனது ஜீப், ஹாஸ்டலுக்கு சென்று மோனிகாவையும், வித்யாவையும் பைகளை எடுத்து வரச்சொல்லி மீண்டும் அழைத்துக் கொண்டு சரியாக பத்து மணிக்கு அசோக்நகருக்கு சென்று பேருந்தை கண்டுபிடித்து அவர்களை ஏற்றிவிட்டு தன் வீட்டிற்கு சென்றான்.

அடுத்த ஒருமாதம் மின்னல் போல் ஓடியது, புதிய மற்றும் பழைய இரண்டு ப்ராஜெக்ட்களிலும் வெகு பிசியாக. புதிதாய் வந்த பெண்களுக்கும் இரண்டு ப்ராஜெக்ட்டிலும் வேலை இருந்தது. தான் உண்டு, தன் வேலையுண்டு என்றிருந்த ஸ்ரீ க்கு சிலநாட்களாய்மோனிகாவிடம் இனம் புரியாத ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு இருந்தது. இருந்தும் அவன் எவ்விதத்திலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. 

அடுத்த வாரம் வியாழன்று தீபாவளி, எல்லோரும் புதன் கிழமையில் இருந்தே லீவ், ஸ்ரீ செவ்வாய்க் கிழமையில் இருந்தே லீவ் அப்ளை செய்து வைத்திருந்தான், மோனிகாவும் அதே போல். திங்கட் கிழமை மதியத்திற்குள் எல்லா ரிப்போர்ட்டுகளையும் அனுப்பி வைத்துவிட்டு, வெகு ஜாலியாய் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர் அனைவரும். எல்லோரும் தீபாவளி பலகாரங்கள் எடுத்து வரவேண்டும் என்று தங்களுக்குள்ளாகவே சொல்லிக் கொண்டனர். ஸ்ரீ, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து விடை பெற்றான். அலுவலகத்தில் இருந்து நேராடியாக தன் ஜீப்பிலேயே சொந்த ஊருக்கு கிளம்பினான்.  

கொள்ளிடம் கொஞ்சி விளையாடி தழுவிச் செல்லும் திருமழபாடி ஸ்ரீயின் சொந்த ஊர். விடிந்தது கூடத் தெரியாமல் அடித்துக் போட்டது போல் தூங்கிக் கொண்டிருந்த ஸ்ரீயை அவனது அம்மா எழுப்பினார், "டேய், மணி ஏழாகப் போகுது எழுந்திருடா" என்று "ம்ம்ம், என்னம்மா அதுக்குள்ள எழுப்பி விடற" என்று இவன் முனக. "சென்னை போய் ரொம்ப சோம்பேறியாயிட்ட, இப்போ எழுந்திரிக்கப் போறியா இல்ல பக்கெட்ல தண்ணிய கொண்டு வந்து ஊத்தட்டுமா" என்று அம்மா கத்த சடாரென்று எழுந்து உட்கார்ந்தான். "போய் பல்துலக்கிட்டு வா காஃபி போட்டு வைக்கிறேன்" என்று சொல்ல, அம்மா காஃபியின் மணம் அவன் மனதில் வீச கடகடவென்று எழுந்து ஓடி ரெடியாகி வந்தான். சுடச்சுட வந்த காஃபியை இரண்டு கைகளாலும் வாங்கி அணைத்து அந்த மணத்தை முகர்ந்து ரசித்துக் குடித்தான். 

"ஸ்ரீ, சுவீட் எல்லாம் பண்ணணும், நீ ஆத்துல போய் குளிச்சிட்டு, வர்றப்போ லட்சுமி பால்பண்ணைல ஒரு கிலோ வெண்ணெய் வாங்கிட்டு வா" என்றார். "சரிம்மா" என்று சொல்லிவிட்டு ஆத்தங்கரைக்கு போக, அங்கு இவனது பால்ய சிநேகிதன் சுதாகர் குளித்துக் கொண்டிருந்தான். சுதாகர், நீச்சலில் பலே கில்லாடி, கையாலேயே கெழுத்தி மீனை பிடிப்பான். அவனுக்கு விவரம் தெரிந்ததில் இருந்து அவர்கள் வீட்டில் மீனே வாங்கியிருக்க மாட்டார்கள், இவனே மொத்தமும் பிடித்துக் கொண்டு சென்றுவிடுவான். அதுவும் கொள்ளிடத்தில் புதிய தண்ணீர் வரும் பொழுது, இறால், நண்டு, கெண்டை என்று பல வகை மீன்களையும் அள்ளிச் செல்வான். நண்பர்களுக்கும் கொடுப்பான். மலரும் நினைவுகளோடு, சத்தமின்றி ஆற்றில் இறங்கி சுதாகருக்கு பின்னால் சென்று அவனை நீரில் போட்டு ஒரே அமுக்காய் அமுக்கினான். திமிங்கலத்திடம் பலிக்குமா சுறாவின் ஆட்டம்? ஒரே பல்டி சுதாகர் மேலே வந்து ஸ்ரீயைப் போட்டு அழுத்தினான். பிறகு தூக்கிப் பார்க்க, "டேய் சாஃப்ட்வேரு எப்படா வந்த" என்று சுதா கத்த ஆற்றிலேயே இருவரும் கட்டிக்கொண்டனர். வெகுநேரம் தண்ணியிலேயே ஆடிக்கொண்டு இந்திரா பட அரவிந்த்சாமி போல் ஊர்க்கதையை பேசிக் கொண்டிருந்தனர். "டேய் வெண்ணை, சென்னைக்கு போனா மொத்தமா மறந்துடறதா? ஒரு போன் கூட பண்ணமாட்டியா" என்று சுதா திட்டவும் தான் ஸ்ரீக்கு அம்மா வாங்கி வரச் சொன்ன வெண்ணெய் ஞாபகத்திற்கு வந்தது. "சரிடா போலாம், ரொம்ப லேட் ஆயிடுச்சி அம்மா வேற வெண்ணெய் வாங்கிட்டு வரச் சொன்னாங்க, நீ ப்ரீ ஆயிட்டு வீட்டுக்கு வா சாவகாசமா பேசுவோம்" என்று கிளம்பினான்.

லட்சுமி பால்பண்ணை ரொம்ப பெருசாயிடுச்சு போலயே என்று நினைத்துக் கொண்டே அருகில் சென்றவன், கதவு சாத்தி இருந்ததைக் கண்டு திகைத்தான். வாசலில் அமர்ந்திருந்த பாட்டியிடம் " எங்க பாட்டி, கதவு சாத்தியிருக்கு யாரையும் காணோம்" என்று கேட்க, "ஏப்பா, மணி ஒன்பதரை ஆயிடுச்சி. அவங்க ஒன்பது மணிக்கே கிளம்பிருவங்க, இனிமே நாலு மணிக்குத் தான வருவாங்க" என்றார். 'சுத்தம்' என்று நினைத்தவன், "வெண்ணெய் வேணுமே, ஏதாவது போன் நம்பர் இருக்கா பாட்டி?" என கேட்க, அங்குட்டு ஒரு போன் இருக்கு பாரு, அதுல பேசு என்றார். 'போன்ல பேசறதா, அதெப்படி என்று அருகில் சென்றவனின் முகம் மலர்ந்தது, அதில் ஆர்டர் என்று ஒரு ஸ்பீட் டயல் பட்டனில் ஒட்டியிருந்தது கண்டு'. ரீசிவரை எடுத்து பட்டனை அழுத்தினான், மூன்று ரிங் போனதும்  அடுத்த முனையில் கேட்டது ஒரு பெண்குரல் அதுவும் அடிக்கடி கேட்ட குரல் "ஹலோ, சொல்லுங்க". "ஆங், ஹலோ, ஒரு கிலோ வெண்ணெய் வேணுங்க", "வெண்ணெய் இப்போதான் ஸ்டாக் காலியாச்சுங்க". 'எங்கேயோ கேட்ட குரல் என்று ஸ்ரீயின் மனதில் அடித்தது மணி' "ஹலோ, கொஞ்சம் அர்ஜெண்ட்ங்க, பார்த்து பண்ணுங்க" என்றான். "திருவிழா சீசன் இல்லையா அதான் கொஞ்சம் டிமாண்ட், நீங்க சரியா நாலு மணிக்கு வாங்க வாங்கிக்கலாம்" என்றது மறுமுனை. அந்தக் குரல் மோனிகாவுடையது தான் என்று நினைவுக்கு வர, "ஹலோ, பேசுறது மோனிகா தான?". "உங்களுக்கு வெண்ணெய் வேணுமா, இல்ல மோனிகா வேணுமா, வைங்க போன" டொக், டொய்ங், டொய்ங், டொய்ங். "அது கண்டிப்பா மோனிகா தான், சந்தேகமே இல்ல. வர்றேன் நாலு மணிக்கு" என மைண்ட் வாய்ஸ் என்று நினைத்துக் கொண்டு சத்தமாக பேசிக் கொண்டே கிளம்ப, அருகில் நின்று கொண்டிருந்த வாலிபன் "போன்ல என்ன பேசின?" என்று முறைத்துக் கொண்டே கேட்டான். "வெண்ணெய கேட்டேன்" என்று கடுப்பாக சொல்லி நடையைக் கட்டினான். அதே நேரத்தில் அங்கு வந்த பால்பண்ணையின் முதலாளி, "என்னப்பா, என்ன விஷயம், ஏன் அவனை முறைக்கற?" என்று கேட்க, "போன்ல மோனிகா, மோனிகானு, பேசிக்கிட்டு இருந்தான்ப்பா, என்னனு கேட்டா வெண்ணெய்னு திட்டிட்டு போறான்" என்று மீண்டும் அவன் போன வழியை முறைத்தான். "யார் அவன்" என்று அவர் கேட்க,  "ஹார்டுவேர்ஸ் கடைக்காராரோட மகன் மாதிரி இருக்கு" என்றான். "சரி விடு, நான் பார்த்துக்கறேன். நீ போய் உன் வேலைய பாரு" என்று அனுப்பி வைத்தார். 

வீட்டிற்குள் வந்த ஸ்ரீ " அம்மா, வெண்ணெய் தீர்ந்து போச்சாம், சாயங்காலம் வரச்சொன்னங்க" என, "ஊரச் சுத்திட்டு போனா அப்படித்தான், ஒரு வேலைய உருப்படியா செய்யறதில்லை" என்று சலிக்க, 'ஹீ ஹீ' என்று வழிந்தான். இவனுக்காக காத்திருந்தவர், வந்ததும் சூடாக இட்லி ஊற்றி எடுத்து வந்தார். சுடச்சுட இட்டிலியும், சாம்பாரும், தேங்காய் சட்டினியும், ஒரு பிடி பிடித்தான். பிறகு தாயும், மகனும் அமர்ந்து ஊர்க் கதைகள் பேசி பேசி மதிய நேரமாக, சாப்பாட்டிற்கு அவனது அப்பா வந்தார். தந்தையின் மேல் அதீத மரியாதை, கடும் உழைப்பாளி, உணவு வேளைகளும், இரவும் தவிர எப்பொழுதும் கடையில் தான் இருப்பார். ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு, சாப்பிட்டுவிட்டு அவர் கடைக்கு கிளம்ப, மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டே அரட்டையை தொடர்ந்தனர் தாயும், மகனும்.

சரியாக நான்கு மணிக்கு அலாரம் வைத்தது போல் ஓடினான் பால்பண்ணைக்கு. எதிர்பார்த்தது வீண்போகவில்லை, கல்லா மேசையில் அமர்ந்திருந்தது மோனிகவே தான். "ஒரு கிலோ வெண்ணெய் கேட்டிருந்தேனே மேடம்" என்று குனிந்து கணக்கு எழுதிக் கொண்டிருந்தவளிடம் இவன் கேட்க. "ஹெலோ வாங்க வாங்க பாஸ்ஸு, காலையில் பேசினது நீங்க தானா" என சற்று கிண்டலுடன் வரவேற்றாள். 'என்னது பாஸ்ஸா, ம்ம்ம் இருக்கட்டும், அவ ஏரியானு கெத்து காட்றா போல' என்று நினைத்து "வந்தேன் வந்தேன் வெண்ணெய் இருக்குல்ல" என கேட்க, "எடுத்து வெச்சிருக்கேன், மொத மொத வந்திருக்கீங்க வீட்டுக்கு வாங்க காபி சாப்டுட்டு போலாம்" என்றவள் அவன் பதிலை எதிர்பாராமல் எழுந்து உள்பக்கம் பார்த்து யாரிடமோ முன்பக்கத்தையும் பார்க்க உத்தரவு இட்டுவிட்டு  "வாங்க போகலாம்" என்று நடையைக் கட்டினாள். மந்திரிச்சி விட்ட கோழி போல் பின்னாலேயே சென்றான். 'அடா நாலு வீடு தள்ளிதான் வீடா, இதை அந்த கிழவி காலையிலேய சொல்லியிருந்தா அப்பவே போயிருந்திருப்பேனே' என்று அவளுடன் உள்ளே சென்றான். அம்மா லட்சுமியையும், தங்கை ஸ்ருதியையும் அறிமுகம் செய்து வைத்தாள். "பேசிட்டிருங்க தம்பி, காஃபி கொண்டுவர்றேன்" என்று உள்ளே சென்றார் அவள் அம்மா, பின்னாலேயே ஸ்ருதியும் சென்றாள்.

"அப்புறம், உன்னைய நான் பார்த்ததே இல்லையே இந்த ஊர்ல, காலைல போன்ல உன்னோட குரல் கேட்டதும் பயங்கர சர்ப்ரைஸ் ஆயிடுச்சி" என ஸ்ரீ வழிய. "எப்ப பார்த்தாலும் வீட்டுக்குள்ள அம்மா முந்தானையவே புடிச்சிக்கிட்டு சுத்திட்டு இருந்தா, ஊர் உலகத்துல என்ன நடக்குதுனு எப்படி தெரியும்" என்று பக்கத்தில் இருந்து பார்த்தவள் போல் நக்கலடித்தவள், "நான் டென்த்க்கு அப்புறம் படிக்க ஈரோடுக்கு போயிட்டேன். காலேஜும் கோவையில. சோ, லீவுக்கு மட்டும் தான் ஊருக்கு வருவேன்" என, "நீ ஊர் ஊரா சுத்திட்டு என்னைய நக்கலடிக்கிறயா" என்று பொய்க் கோபப்பட்டான். ஆவி பறக்கும் பஜ்ஜியுடன் வந்த அவளது அம்மா, "சாப்பிடுங்க தம்பி" என்றார். "அதுக்குள்ள ரெடி பண்ணிட்டீங்களா, சூப்பர் ஃபாஸ்ட் நீங்க" என அவன் சொல்ல, "இல்லப்பா எல்லாத்தையும் ரெடி செய்ய சொல்லி காலையிலேயே எனக்கு ஆர்டர் போட்டுட்டா மோனிகா" என்று போட்டுடைத்தார். 'அடிப்பாவி, அப்போ தெரிஞ்சே தான் போன கட்பண்ணுனியா' என்று நினைத்துக் கொண்டே அவளை பார்க்க, எதுவுமே நடவாதது போல் "சாப்பிடுங்க" என்றாள். காஃபியை எடுத்து வந்த ஸ்ருதி, காஃபியை ஆத்துகிறேன் பேர்வழி என்று இந்த பக்கமும் அந்த பக்கமும் சாய்ந்து சாய்ந்து ஆற்ற, "ஏய் இங்க குடுடி" என்று மோனிகா அதற்ற, "ஹ்ஹூம், இந்தா நீயே வெச்சிக்க" என்று கோபித்துக் கொண்டு உள்ளே சென்றாள். மனதிற்குள் எதேதோ எண்ணங்கள் ஓட, சுவையான பஜ்ஜியை சாப்பிட்டு முடித்து மோனிகா கொடுத்த காபியை கையில் வாங்கியதும் யாரே செருமும் சத்தம் கேட்டு திரும்பினான். "அப்பா" என்று மோனிகா சொல்லவும் அவர் உள்ளே வந்து இவனை ஒரு மாதிரி பார்த்தார்.

"தம்பி, நீங்க நெனைக்கறது நடக்காது, கேட்கறது கெடைக்காது" என்று ஆரம்பித்தார். ஒன்னும் புரியாமல், "ஐயா" 'நான் வெண்ணெய் வாங்க வந்தேன், ஆனா' என்று சொல்ல வருவதற்குள் அவர் மேலும் தொடர்ந்தார். "எல்லாம் கேள்விப்பட்டேன், ஒரே ஆபிஸ்ல வேலை செஞ்சா உடனே பொத்துக் கிட்டு வந்துருமா?" என அவர் கோபமாய் தொடர, மோனிகா "அப்பா" என்று அலறினாள், "இரு மோனிகா, அவர் சொல்லி முடிக்கட்டும்" என ஸ்ரீ சொல்லி அவளிடம் கண்ணைக் காட்டி அமைதி படுத்தினான். 

"ஐயா, நீங்க சொல்ல வர்றது புரியல" என்று ஸ்ரீ சொன்னதும், "விசாரிச்சுட்டேன் நல்லா, சும்மா வீட்ல உட்கார்ந்து அம்மா முந்தானையை புடிச்சிக்கிட்டு திரியர பையனுக்கு பொண்ண குடுத்தா அவ வாழ்க்கையே கொடுமையாயிடும்." 'அடப்பாவிகளா, ஊருக்குள்ள நம்மள பத்தி எவனோ தப்பா பரப்பியிருக்கான்' என ஸ்ரீ நினைக்க அவர் தொடர்ந்தார். "அதுமட்டுமில்லாம, மைனர் மாதிரி சீப்ப வச்சிக்கிட்டு மெட்ராஸ்ல என்னெல்லாம் கொடுமை பண்ணிருக்கியோ, யாரு கண்டா? இங்க பாருப்பா, நீ என்ன பண்ணினாலும் சரி. நீ நெனைக்கறத மட்டும் நடத்த உடமாட்டேன். என்னைய பத்தி தெரியாது உனக்கு, ஆமா சாக்கிரதை" என அனல் பறக்க பேசி மீசையை முறுக்கினார். முதலில் கோபப்பட்ட மோனிகாவிற்கு இப்பொழுது சிரிப்புத்தான் வந்தது.

உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த லட்சுமி அம்மா, ஒரு பொட்டலத்துடன் வந்து "தா, ஒம்மோட புத்திசாலித்தனத்த தொழில்ல காட்டிருந்தா இந்நேரம் பொழப்பு உருப்பட்டுருக்கும், வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டு ஊர கோலிக் கோலி வந்தா, இப்படித்தான் ஒளறத் தோணும். வெண்ணெய் வாங்கிக்கிட்டு போக வந்த பையன் கிட்ட பேசற பேச்ச பாரு." என்று அவரை அடக்கி "இந்தாங்க தம்பி, மோனிகா உங்களுக்காகவே ஸ்பெஷலா எடுத்து வச்சிருக்கா. அம்மாவ ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க" என்று வெண்ணெய் பொட்டலத்தை ஸ்ரீயிடம் கொடுத்தார்.

என்ன நடந்திருக்கும் என்று ஊகித்து, இவ்வளவு நேரம் அமைதியாக ரசித்து கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீ, "மோனிகா என் டீம்ல ஜாயின் பண்ண நாள்ல இருந்து, இப்போ கொஞ்ச நேரம் முன்னால வரைக்கும் என்னன்னு புரியாம இருந்தேங்க. மாமா பேசி இன்னிக்கு தான் எனக்கு வெளங்க வெச்சாரு. அத்தை, இப்போ சொல்றேன் எனக்கு மோனிகாவ ரொம்ப பிடிச்சிருக்கு. மாமா ரொம்ப நன்றிங்க, எங்க அப்பா, அம்மா கிட்ட பேசிட்டு ஒரு நல்ல நாள் பார்த்து வர்றேங்க. அப்புறம் இன்னொரு மேட்டர், அம்மா முந்தானையை புடிச்சிக்கிட்டு வளர்ற பசங்க எல்லாரும் அப்பா வேட்டிய புடிச்சிக்கிட்டு வளர்ற பசங்கள விட ரொம்ப நல்லாவே இருப்பாங்க. நானும், மோனிகாவுமே அதுக்கு நல்ல உதாரணம். வர்றேங்க." என்று வீராப்பாக பேசிவிட்டு "வர்றேங்க அத்தை, பை மோனிகா" என்று சொல்லிவிட்டு உள்ளிருந்து எட்டிப் பார்த்த ஸ்ருதிக்கு டாட்டா காட்டிவிட்டு மிடுக்காக கிளம்பினான். ஸ்ரீயின் பேச்சைக் கேட்டு, முதன் முறையாக மோனிகாவிற்கு பயங்கர ஆச்சர்யமும், அவள் கண்களில் ஆனந்தமும் தெரிந்தது.

தன் வீட்டிற்குள் நுழையும் போதே அம்மாவின் குரல் கேட்டது, "ஏண்டா, ஒரு எடத்துக்கு போனா விருட்டுனு வரத் தெரியாதா? வெண்ணெய் வாங்க போனியா இல்ல பொண்ணு பார்க்க போனியா" என்று கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது ஸ்ரீக்கு. "அம்மா, வெண்ணெய் வாங்க போன எடத்துல என் கூட வேலை செய்யற பொண்ண பார்த்தேன்" என்று இவன் உளற, "அப்போ பொண்ணுதான் பார்க்க போயிருக்க? என்ன விருந்தெல்லாம் பலமா?" என்று கிண்டலாக கேட்க ஒன்றும் புரியவில்லை இவனுக்கு. 'நிஜமாவே அம்மாக்கு எல்லாம் தெரிஞ்சிருச்சா, இல்ல சும்மா கிண்டலுக்கு தான் பேசுறாங்களா' என்று புரியாமல் திரு திரு வென முழித்தான். இவன் முழிப்பதை பார்த்த அம்மா குபீர் என்று சிரித்து விட்டார். "சார் இப்போ பெரிய ஆப்பிசர் அதனால எல்லாம் நீங்களாவே முடிவெடுத்துப்பீங்க. நாங்க சும்மா ஒப்புக்கு சப்பானியா வந்து அச்சதைய போடணும். அப்பிடித்தான" என கேட்க, "ஐயோ அம்மா, அப்டிலாம் இல்லம்மா, எதுவா இருந்தாலும் நீங்க சரின்னு சொன்னாதான்" என்று பதறினான். "சரி சரி, விடு, அப்பா வந்ததும் பேசலாம்" என்றதும் ஓரளவு நிம்மதி வந்தது அவனுக்கு.

"ஆமா, நீங்க வீட்ல தானம்மா இருந்தீங்க, அப்புறம் எப்படி?" என்று ஸ்ரீ இழுக்க, "தம்பி, திருவிளையாடல்ல பரமசிவன் நெனைச்சது தான் நடக்கும். அந்த மாதிரி, இந்த ஈஸ்வரியோட விளையாடல் தான் இது எல்லாம்" என்று அபய முத்திரை காட்டினார். "அட, புரியற மாதிரி சொல்லும்மா" என்று இவன் கேட்டதும். அம்மா சொன்னார் "ஸ்ரீ, மோனிகா உனக்கு ஒரு வகையில முறைப் பொண்ணு தான். ரெண்டு தலை முறைக்கு முன்னால உங்கப்பா குடும்பத்துல நடந்த பிரச்னையில எல்லாம் பிரிஞ்சி ரொம்ப தூரமாயிட்டாங்க. மோனிகாவ போன வருஷம் காலேஜ் லீவுக்கு வந்து ஒருநாள் பண்ணையில உட்கார்ந்திருந்தப்ப தான் பார்த்தேன். பார்த்த உடனே எனக்கு புடிச்சிருந்தது அப்புறம் அவகிட்ட பேசிப் பழகினதும், அவளோட பொறுப்பும், நல்ல குணமும், தெளிவான அணுகுமுறையும் ரொம்பவும் புடிச்சி போச்சு. அப்புறம் ஒருநாள் அவங்கம்மா கிட்ட உன்னை பத்தி சொல்ல, அவங்க ஸ்ரீயை எனக்கு நல்லா தெரியும்ங்க. அவரு மருமகனா வந்தா ரொம்ப சந்தோஷம் என்று சொன்னார். அதுக்கப்புறம் தான் மோனிகா கிட்ட பேசினேன். கடவுள் அனுக்ரஹம் பாரு, நீ வேலை செய்யற கம்பெனியில தான் அவளுக்கும் கேம்பஸ் கிடைச்சிருக்குன்னும், நான் இப்போ எதுவும் சொல்ல முடியாதுங்கம்மா தப்பா நெனைச்சுக்காதீங்க, வேலைக்கு சேர்ந்தப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி சொல்றேன்னு சொன்னா. நானும், உன் விருப்பப்படியே நடக்கட்டும்மான்னு சொன்னேன். போன வாரம் எனக்கு கால் பண்ணி, "அத்தை எப்படி இருக்கீங்க, நான் இங்க ஸ்ரீயோட டீம்ல தான் இருக்கேன்"னு மறைமுகமா எனக்கு கன்பார்மேஷன் குடுத்தா பாரு, அடா அடா அடா என் மருமகளோட சாமர்த்தியமே சாமர்த்தியம்" என்று புலங்காகிதம் அடைந்தார். "அடக்கடவுளே, இவ்ளோ சதிவேலை நடந்திருக்கா! அது சரி, இன்னிக்கு நடந்தது எப்படி தெரியும்" என ஸ்ரீ கேட்க. "உனக்கு பஜ்ஜி கொடுத்ததும் லட்சுமி எனக்கு போன் பண்ணினா, 'மாப்பிள்ளை வந்திருக்கார்னு', அந்த நேரத்துல தான் அவங்க அப்பா வந்து சலம்பற சத்தம் கேட்டதும் போன கட் பண்ணாம ஆன்லயே வைக்க சொன்னேன். அந்த மனுஷன் வந்து உளறினதுல கடுப்பாகி நீ எதுவும் சொதப்பிருவியோனு கொஞ்சம் பயந்தேன். ஆனா என் தங்கக்காட்டி சமர்த்தா பேசிட்டு வந்துட்ட" என்று அவன் கண்ணத்தைக் கிள்ளினார். 

"ஸ்ஸ்ஸ் ஆஆஆ..."என்று கத்திக் கொண்டே "அம்மா, என்னவோ நான்தான் பெரிய ஸ்மார்ட் ஃபெல்லோனு நெனைச்சிக்கிட்டு இருந்தேன், ஆனா என் ஸ்மார்ட்னெஸ் எல்லாம் உன்கிட்ட பிச்சை எடுக்கணும்மா தாயே" என்று கூறி காலில் விழுந்தான்."நல்லாயிரு மகனே, வா உனக்கு பிடிச்ச அசோகா செஞ்சித் தர்றேன், சுவீட் செய்வோம் கொண்டாடுவோம்" என்றார்."தேங்க்ஸ் மா, அப்பா கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலையே மா, பயமா இருக்கு" என்று அவன் சோகமாக. "அதுக்கு தீபாவளி அன்னிக்கு ஒரு டிராமா இருக்கு கண்ணு, பொறுத்திருந்து பார்" என்று கண்சிமிட்டி விட்டு சமையலுக்கு தயாரானார்.

தீபாவளி அன்று காலை, பட்டுத் தாவணி சகிதம் பால்கோவாவுடன் ஸ்ரீ வீட்டிற்கு வந்தார்கள் மோனிகாவும், ஸ்ருதியும். அவர்களை வரவேற்ற அம்மா, "ஏங்க, நம்ம ஸ்ரீ கூட வேலை செய்யற பொண்ணுங்க இது பேரு மோனிகா" என்று அவன் தந்தையிடம் அப்பிராணியாக அறிமுகம் செய்துவைத்தார். "என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா" என்று காலில் விழுந்தால் மோனிகா, திருத்திரு என முழித்துக் கொண்டிருந்த ஸ்ருதியையும், 'விழுடி' என்று பல்லைக் கடித்து கண்ணாலேயே சைகை காட்டி விழ வைத்து "என் தங்கச்சிப்பா, பேரு ஸ்ருதி" என்று அறிமுகப் படித்துவிட்டு. "பால்கோவா கொண்டு வந்தேன்மா" என்று கொடுத்தாள். "உட்காரம்மா, டேய் ஸ்ரீ உன் பிரெண்டு வந்திருக்காங்க பாரு" என்று ஒளிந்து பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு எங்கேயோ தூரத்தில் இருப்பவனுக்கு சொல்வது போல சொல்லிச் சென்றார் சமையல் கட்டுக்குள்.

"உலகமகா நடிப்புடா சாமி' என்று வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தவன், அப்போது தான் பார்ப்பது போல் "வாங்க மோனிகா, வா ஸ்ருதி" என்று வரவேற்று அமர்ந்தான். அசோகா இரண்டு தட்டிலும், பால்கோவா இரண்டு தட்டிலும் எடுத்து வந்த அம்மா அசோகவை மோனிகா, ஸ்ருதிக்கு கொடுத்து விட்டு, பால்கோவாவை ஸ்ரீ அப்பாவிற்கும், ஸ்ரீ க்கும் கொடுத்து தனக்கு கொஞ்சம் ஸ்ரீ தட்டிலிருந்து எடுத்துக் கொண்டார். "ஆஹா, பிரமாதமா இருக்கேமா பால்கோவா. யார் அம்மா செஞ்சாங்களா" என கேட்க, "இல்லம்மா, நான்தான் செஞ்சேன்" என்றாள் மோனிகா. "சூப்பரா இருக்கும்மா, பிரமாதம்" என சர்டிபிகேட் தந்தார் ஸ்ரீயின் தந்தை வைத்தீஸ்வரன். 

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள், "சரிங்கம்மா நாங்க போயிட்டு வர்றோம், இன்னும் சுவீட் எல்லாருக்கும் குடுக்க வேண்டியிருக்கு" என மோனிகா சொல்ல, ஏற்கனவே தயாராக இருந்த சுவீட் பையை எடுத்து ஸ்ரீயிடம் கொடுத்த அம்மா "தம்பி, அவங்க கூட போய் வீட்டுல விட்டுட்டு இந்த சுவீட்ட அவங்கம்மா கிட்ட குடுத்துட்டு வா" என்று ஸ்ரீயையும் அனுப்பி வைத்தார். இதற்காகவே காத்திருந்தவன் போல பையை வாங்கிக் கொண்டு "சரிம்மா" என்று நல்ல பிள்ளையாய் கிளம்பினான். 


வழியில் பொறுமையாக ஆடி அசைந்து நடக்க, ஸ்ருதி கடுப்பாகி "நான் முன்னால போறேன், நீங்க வந்து சேருங்க" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்தாள். இதை, இதைத்தான் எதிர்பார்த்தோம் என்பது போல இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டு நடந்தனர். "மொத நாள் உன்னைய பார்த்ததுமே எனக்கு ஏதோ தோணிச்சி, ஆனா எல்லாருமா
டிராமா போட்டு என்னைய ஏமாத்திட்டீங்க இல்ல" என ஸ்ரீ கொஞசமாய் கோபம் கொள்ள. "ம்ம்க்கும், உங்க கிட்ட நான் ஏமாறாம இருந்தா போதும்பா. ஏதோ அத்தை சொன்னதால தான் நான் சரின்னு ஒத்துகிட்டேன். இல்லாட்டி இந்த ஒர்க்கஹாலிக்க, பைனரி மண்டைய கட்டிக்க எவ ஒத்துக்குவா" என்று நக்கலடிக்க. இருவரும் பலமாக சிரித்துக் கொண்டே சென்றனர். ஊர்மக்களுக்கு ஒரு முன்னாட்டம் காட்டியதாகவும் ஆயிற்று இவர்களது ஊர்வலம். 


இதற்கிடையில் ஸ்ரீயின் வீட்டில், "நல்ல பொண்ணு இல்ல ஈஸ்வரி, மரியாதை தெரிஞ்சிருக்கு, நல்லா சமைக்கும் போல, இன்னும் கொஞ்சம் பால்கோவா குடு" என்றார். பெண் குழந்தையும், பால்கோவாவும் மிகவும் பிடித்த விஷயங்கள் அவருக்கு. 'ஆஹா, பிளான் ஒர்க்கவுட் ஆயிடுச்சி' என்று மனதிற்குள் சிரித்துக் கொண்ட ஸ்ரீயின் அம்மா பால்கோவாவை எடுத்து வந்து அவருக்கு கொடுத்துவிட்டு "இந்த மாதிரி ஒரு பொண்ணு ஸ்ரீக்கு அமைஞ்சா நல்லாயிருக்கும், ஹூம் அந்த வைத்தீஸ்வரன் என்ன நெனைச்சிருக்காரோ" என்று கோயில் பக்கம் பார்த்து கும்பிட. "இந்த பொண்ணு யாரு என்னனு விசாரியேன், நல்ல இடமா இருந்தா முடிச்சிரலாம்" என ஸ்ரீ தந்தை சொல்ல, "விசாரிச்சேன்ங்க, நமக்கு செட் ஆகாது" என்றார் அம்மா. "ஏன் ஆகாது?" என அவர் கேட்க, "உங்க குடும்பத்துக்கு ஆகாத லட்சுமி பால்பண்ணை வீட்டு பொண்ணு தான் அவ" என அம்மா சொல்ல, ஒரு கணம் யோசித்தார். பிறகு "அது எப்பவோ ஆன பிரச்னை, என்னனு கூட மறந்துபோச்சு எனக்கு. அது மட்டுமில்லாம இந்த பொண்ணோட அம்மா சைடு தாத்தாவும் எங்க தாத்தாவும் திக் பிரண்ட்ஸ். லட்சுமி கூட ரொம்ப பொறுப்பான பொண்ணு, அவளால தான் அந்த பால் பண்ணையே நடக்குது. எனக்கு ஓகே தான், ஸ்ரீ கிட்ட கேளு, அவனுக்கும் ஓகேன்னா, உடனே பேசி முடிச்சிடலாம்" என்று தனக்கே உரிய பாணியில் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக பேசி முடித்து வெளியில் கிளம்பினார்.

மோனிகாவின் வீட்டிற்கு சென்ற ஸ்ரீ க்கும் ஆச்சர்யம், வெளியில் அமர்ந்திருந்த மோனிகாவின் அப்பா, "வாங்க வாங்க, அத்தை உள்ள இருக்காங்க" என்று அன்போடு அழைத்தார். அங்கு நடந்த உபசரணையில், மாப்பிள்ளை நினைப்பு அப்பொழுதே வந்துவிட்டது அவனுக்கு. ஒரு வழியாக விடைபெற்று வீட்டிற்கு வந்தவன், அப்பா வெளியே சென்றுவிட்டார் என்று அறிந்து கொண்டு "என்னம்மா ரிசல்ட்" என்று கேட்டான். சோகமாக முகத்தை வைத்து அவனை கொஞ்சம் களைக்க விடலாம் என்று நினைத்த அவன் அம்மாவால் சந்தோஷத்தை மறைக்க முடியவில்லை. கட்டை விரலை தூக்கி காட்டியதும் அம்மாவை தூக்கிக் கொண்டு மகிழ்ச்சியில் கூத்தாடினான். "டேய் இறக்கி விட்றா, போய் உன் வருங்கால பொண்டாட்டிய தூக்கி சுத்து போ" என்று அம்மா சொல்ல, "பேரன், பேத்தியே வந்தாலும், நீதானே என் அம்மா" என்று சொல்லிக் கொண்டே இன்னும் நாலு சுத்து சுத்திவிட்டு இறக்கிவிட்டான். 


மளமளவென்று வேலைகள் நடக்க, அடுத்த வாரத்திலேயே ஸ்ரீ சொன்ன நல்ல நாள் வந்து, நிச்சயம் நடந்து, அதற்கு அடுத்த மாதத்தில் திருமணமும் முடிந்து தார் ஜீப்பில் டூயட் பாடிக்கொண்டே ஹனிமூன்க்கு ஊட்டியை நோக்கி பயணித்தனர்  ஸ்ரீகணேஷும், மோனிகாவும்.



லேபிள்கள்: , ,

வியாழன், 1 பிப்ரவரி, 2018

பேயும், முனியும்...

ஒரு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் மூன்றாவது வகுப்பில், ரமணி டீச்சர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். "பசங்களா, இன்னிக்கு நாம படிக்கப் போறது உடற்பயிற்சி பத்தி, சரியா? யாராவது சொல்லுங்க உடற்பயிற்சினா என்னன்னு?" ஒவ்வொரு மாணவனாக எழுந்து "காலைல எழுந்து ஓடுறது டீச்சர்", "தண்டால், பஸ்கிலாம் எடுக்கறது டீச்சர்", "யோகாசனம் டீச்சர்", "தோப்புக்கரணம் டீச்சர்" என்று ஆளாளுக்கொன்று சொல்லிக் கொண்டிருந்தனர். பின்னர் டீச்சர் தொடர்ந்தார், " நீங்க சொன்னது எல்லாமே சரிதான், பரவாயில்லையே, நெறையா தெரிஞ்சு வெச்சிருக்கீங்க" என்று சொல்லி பாடத்தை தொடர்ந்து, முடிக்கும் பொழுது "பசங்களா, காலைல நாமெல்லாம் எழுந்ததும் கைய கால நீட்டி, உடம்ப வளைச்சு நெளிச்சு நெட்டி முறிக்கிறோமில்லையா அதுவும் கூட ஒரு உடற்பயிற்சி தான். தினமும் உடற்பயிற்சி செஞ்சாதான் நீண்ட நாளைக்கு நல்லா, தெம்பா, ஆரோக்கியமா இருக்கலாம் சரியா?" என்ற கேள்வியுடன் அன்றைய பாடத்தை முடித்து உட்கார்ந்தார்.

எப்படா உட்காருவாங்க என்று பார்த்துக் கொண்டிருந்த கந்தவேல் எழுந்து "டீச்சர்" என்று சொல்லி தண்ணீர் குடிக்க போவதற்காக விரல்களை மடக்கி, கட்டைவிரலை மட்டும் நீட்டி உதட்டின் மீது வைத்து சைகையால் கேட்டான். "சரி போயிட்டு வா" என்று டீச்சர் சொல்லி முடிக்கும் முன்னே ரமேஷும், சிவா வும் அதே போல் எழுந்து நின்றார்கள். "சீக்கிரம் வாங்க" என்று தலையாட்டியவர் சிவாவை மட்டும் அழைத்து 1 ரூபாய் நோட்டும், கூடவே எவர்சில்வர் டம்ளரையும்  கொடுத்து டீ வாங்கி வரச்சொன்னார், அதோடு "டேய் சிவா, மறக்காம மீதி காச வாங்கிட்டு வா, நேத்து மாதிரி ரெண்டு நட போகப் பார்க்காத" என்றும் சொன்னார்.

பள்ளியின் பின்புறம் சென்று, சிறுநீரால் கோலம் போட்டுவிட்டு, வேலியில் படர்ந்திருந்த கோவைக் கொடியில் தேடி நன்கு சிவந்த கோவைப் பழங்களை பறித்து தின்றுகொண்டே, ஆட்டத்துடன் ஓட்டமுமாக எதையோ பேசிக்கொண்டே அவ்வப் பொழுது  நொண்டியும் அடித்து உற்சாகமாக ஓடிய சிறுவர்கள் "டேய் பேய்க்காத்து வருதுடா" என்ற கந்தவேலின் அலறலைக் கேட்டு தடாலென்று நின்று பிறகு அவனை பிடித்து இழுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த குடிசை ஓரம் ஒதுங்கினர். குப்பைகளை அள்ளிக் கொண்டு சுழன்று சுழன்று வந்த காற்று அவர்களுக்கு முன்னால் ஒரு நாலடி தூரத்தில் கடந்து சென்றது. பயத்தில் கண்களை இறுக்கி மூடிக்கொண்டனர்  மூவரும். சற்று நேரம் கழித்து சுற்றிலும் பார்த்து உறுதி செய்து கொண்டு டீக்கடைக்கு சென்றனர்.

மதிய உணவிற்கு வீட்டுக்குச் சென்ற கந்தவேல் பக்கத்து வீட்டில் இருந்த திடீர் பந்தலைப் பார்த்து பாட்டியிடம் "பாட்டி, என்ன சித்தன் வீட்ல பந்தல்லாம் போட்ருக்காங்க" என்று கேட்க, "சித்தனோட அப்பாவை முனி அடிச்சி செத்துப் போயிட்டாருப்பா, இப்போதான் தூக்கிட்டு வந்தாங்க. நீ போய் கை, கால், மூஞ்சி கழுவிட்டு வா சாப்பிடலாம். சாப்டுட்டு நான் வேற எளவுக்கு போகணும்" என்றார். தொட்டிவாசலுக்கு சென்ற அவன் அவசரவசரமாய் பித்தளை அண்டாவில் இருந்து தண்ணியை மொண்டு ஊற்றிக் கொண்டுவந்து அமர்ந்து "பாட்டி, முனி எப்படிப் பாட்டி இருக்கும், அது எப்படி அடிக்கும்?" என சாப்பாட்டை கிளறிக் கொண்டே ஆர்வம் கலந்த பயத்துடன் கேட்டான். "முனி எப்படி வேணா வரும் கந்தா, ராத்திரி நேரத்துல சலங்கை கட்டிக்கிட்டு ஜல் ஜல்னு நடந்து வரும், ஏதாவது வீட்டுல சத்தம் கேட்டா அந்த வீட்டுக் கதவ தட்டும், தொறந்து யாருனா நேருக்கு நேர் பார்த்தா ஒரே அடிதான் ஆள் பூட்டைக்கு போயிருவான், அதே மாதிரி காட்டுல இருக்கற முனி குதிரை மேல கொடுவாளோட வருமாம், அதுவே ஊருக்குள்ளார, பகல்ல, பேய்க்காத்து மாதிரி வருமாம்" என்று சொல்லி முடிப்பதற்குள், "ஐயோ பாட்டி, இன்னிக்கு என்னாச்சு தெரியுமா, இண்டர்வெல்ல ஒரு பேய்க்காத்து எங்களை அடிக்க வேகமா சுத்திக்கிட்டே வந்துச்சி, அப்படியே வானம் வரைக்கும் ஒசரமா இருந்துச்சி. அத பார்த்து நான் அப்படியே பயந்து போய் நின்னுட்டேன்.  நல்லவேளை ரமேஷும், சிவாவும் என்னய ஒரு குடிசைகிட்ட சடார்னு இழுத்துக் கிட்டு போனாங்க, அங்க தான் ஒளிஞ்சிக்கிட்டோம் அது போறவரைக்கும்" என்று பதறியடித்து சொன்னான். "பேய்க்காத்து கிட்டயோ, சுடுகாட்டு கிட்டயோ, ஒத்த பனைமரம் கிட்டயோ போகவே கூடாது ஞாபகம் வெச்சிக்கோ, அதுவும் கறிச்சோறு திங்கற அன்னிக்கு இந்த மாதிரி எடத்தப் பத்தி நெனச்சே பாக்கக்கூடாது நல்லா ஞாபகம் வெச்சிக்கோ" என்றது பாட்டி.

பயத்துடனே கிளம்பிய அவன் பள்ளிக்கூடம் போகும் வழியில் இருந்த சக்தி விநாயகாருக்கு தோப்புக்கரணங்களை போட்டு வேண்டிக்கொண்டே சென்றான். தன் பாட்டியிடம் கேட்ட விவரங்களை தன் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, ஆளாளுக்கு ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார்கள். "நெசந்தாண்டா உங்க பாட்டி சொன்னது, இப்படித்தான் எங்க சித்தி சினிமாக்கு போயிட்டு வர்றப்போ ஒரு பனைமரத்து பேய் புடிச்சிக்கிச்சி, அப்புறம் அத வைரமுனீஸ்வரன் கோயிலுக்கு கூட்டிட்டு போய் பேய் ஓட்டினாங்க, அப்படியே உச்சி மயித்த புடிச்சி அங்க இருந்த வேப்பமரத்துல கொண்டு போயி ஆணி அடிச்சாங்க" என்று உச்சஸ்தாயில் ஒப்பித்தான். இவன் கத்தின கத்தில் ஆபீஸ் வேலை பார்த்துக் கொண்டிருந்த டீச்சர் "டேய் பசங்களா, அங்க என்னா சத்தம், அமைதியா காலைல நடத்துன பாடத்தை படிங்க நாளைக்கு வந்ததும் அதுல இருந்து பரீட்சை வைக்கப் போறேன்" என்று கத்தினார். எல்லோரும் புத்தகம் படிப்பது போல் பாசாங்குடன் குசுகுசுவென்று பேச ஆரம்பித்தனர்.

பள்ளிக்கூட மணி அடித்தவுடன் அனைவரும் தெறித்து ஓட, கந்தவேல் மட்டும் பயத்துடனே ஐந்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து வீட்டு மாரிமுத்துவின் வாலைப் பிடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான். இழவு வீடு இருந்ததால் தெருவில் விளையாடக் கூட அன்று யாரும் வரவில்லை. சாயங்காலம் குளித்து முடித்து விபூதி வைக்கையில் தாத்தா கூப்பிடும்போது 'அட போ தாத்தா உனக்கு வேற வேலையில்லை' என்று ஓடும் பையன் அன்று முகமெல்லாம் கழுவி "எனக்கும் வெச்சு விடுங்க தாத்தா" என்று பவ்யமாக வந்து நின்றான். அன்று முழுக்க தாத்தா பாட்டியிடம் அவன் பேசியது முனியையும், பேயையும் பற்றி மட்டும்தான்.

"பாட்டி, இந்த பேய், முனியெல்லாம் கெட்டதா இல்ல நல்லதா? நம்மூர்ல முனீஸ்வரர் கோயில் இருக்கே அதுதான் இந்த முனியா, செத்துப் போனவங்க தான் பேயா வருவாங்களா? அப்போ போனவருஷம் செத்துப் போனானே பக்கத்துக்கு வீட்டு தங்கராசு அவன் இப்போ பேயா சுத்திக் கிட்டு இருப்பானா? அமாவாசைக்கு மட்டும்தான் பேய் வருமா இல்ல எல்லா நாளும் வருமா?" என்று பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருந்தான். சும்மாவே தன்  கற்பனைகளை அள்ளித் தெளித்து கதை சொல்லும் அவன் பாட்டி ஒவ்வொன்றுக்கும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். இறுதியில், முனி என்பது சடையிருக்கும், சலங்கை கட்டிய ஆவி என்றும், பேய் என்பது உருவமில்லாத ஆவி என்றும் இவனாகவே ஒரு முடிவுக்கு வந்தான்.

அடுத்த நாள், பள்ளிக்கு அருகிலிருந்த சித்தேசுவரர் கோயிலில் ஒரு சாமியார் புதியதாக வந்து அமர்ந்திருந்ததைக் கேட்டு கந்தவேல் அங்கு சென்றான். அவர் கையில் இருந்த தம்புரா போன்ற ஒன்றை இடைவிடாது இசைத்துக் கொண்டே இருந்தார். அவரைப் பார்க்க வந்த சிறுவர்கள் அனைவரும் கோயிலை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தனர். அங்கு வந்த கந்தவேல், அவருக்கு அருகில் போய் அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். கண்மூடி தூணில் தலை சாய்த்து ஆனந்தமாக நடுவிரலால் கம்பியை டொய்ங் டொய்ங், டொய்ங் டொய்ங்  என்று இசைத்துக் கொண்டே இருந்தார்.  ஒரே மாதிரியாக ஒலி எழுப்பினாலும், அது ஒரு மாதிரி இதமாக இருந்தது மனதிற்கு. சற்று நேரம் கழித்து கண் விழித்த அவர், தனக்கு முன் அமர்ந்திருந்த சிறுவர்களைப் பார்த்து மெல்லியதொரு புன்னகையை சிந்தினார்.

அவரது புன்னைகையைக் கண்டதும் குஷியானார்கள் சிறுவர்கள், "தாத்தா எங்கேர்ந்து வர்றீங்க, கையில இருக்கறது என்ன வீணையா?" என்று ஒருவன் கேட்க, "நான் ஊர் ஊரா, கோயில் கோயிலா சுத்திட்டிருக்கற சந்நியாசி அப்பனே. இது வீணையில்ல, இதுக்குப் பேரு தும்பி, வடநாட்ல நான் பயணம் செஞ்சப்போ அங்க ஒரு கோயில்ல இருந்த வயசான சாமி ஒருத்தர் எனக்கு இதைக் கொடுத்தார்" என்று மெல்லிய சாந்தமான குரலில் கூறினார். "அப்போ உங்ககளுக்கு வீடே இல்லையா? சாப்பாட்டுக்கெல்லாம் என்ன பண்ணுவீங்க?" என்று கேட்டது மற்றொரு வாண்டு. "இல்லையப்பா, கோயில்கள் தான் எனக்கு வீடு, அங்க குடுக்கற பிரசாதம் தான் எனக்கு சாப்பாடு. நம்மைப் படைத்த இறைவன் நமக்கு வேணுங்கறத, அந்தந்த நேரத்துல கெடைக்கப் பண்ணிருவாரப்பா. எல்லாம் அவன் பார்த்துப்பான்" என்று மூலஸ்தானத்தை காட்டி மேலே பார்த்தார்.

"தாத்தா  எப்பவாவது நீங்க பேய், முனியெல்லாம் பார்த்திருக்கீங்களா?" இது கந்தவேல். "அஹ்ஹஹாஹா  என்று சிரித்தவர், தம்பி இங்க வா" என்று அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டவர். "ஏனப்பா, பேயைப் பற்றி கேட்கிறாய்? சரி நீதான் சொல்லேன், நீ பார்த்திருக்கிறாயா பேயை?" என்று வினவ. பேய்க்காத்தில் ஆரம்பித்து, சித்தன் தந்தையை முனி அடித்ததும், பாட்டி சொன்ன கதைகள் அத்தனையையும் கடகடவென சொல்லி முடித்தான். தன் வெண்தாடியை உருவி விட்டபடியே கேட்டுக்குக் கொண்டிருந்த சாமியார், இவன் முடித்ததும் மெல்ல ஆரம்பித்தார். "பேய், பிசாசு, கொள்ளிவாய் பிசாசு, முனி, சாத்தான், குட்டி சாத்தான், வேதாளம் எல்லாம் வெறும் மாயைகளப்பா. மனுஷனோட மனசுக்குள்ள தான் இருக்கு அத்தனையும். சில நேரங்கள்ல சில மனுஷனோட  ஆறாத, தீராத உறுதியான நினைவலைகள் அப்படியே அங்கங்க சுத்திகிட்டு இருக்கும். அதனோட பாதிப்பு ஏதாவது நோஞ்சான் மனசுள்ள மனுஷங்களுக்கு ஏற்படும், அதனால அவங்களோட நினைவுகளும் பாதிக்கப்படும், இதத் தான் பேய் பிடிக்கறதுனு சொல்றாங்க. அதே மாதிரி, உடம்பு உறுப்புகள்ல குறையிருக்கறவங்களோ, இல்ல பயந்த சுபாவம் இருக்கறவங்களோ, சில நேரத்துல அதீத பயத்துனால குறைபாடு ஏற்பட்டு மரணமடையறத முனி அடிச்சிடுச்சினு சொல்றாங்க." என்று விளக்கினார். "அப்போ பேய்க்காத்து ஏன் வருது தாத்தா?" என்று கந்தவேலின் கேள்விக்கு, "அது எல்லா எடத்துலையும் வராதுப்பா, இந்த மாதிரி மேட்டாங்காடா இருக்கற ஊர்ப்பக்கம் கோடைகாலத்துல காத்து வெப்பமாகி வெற்றிடம் உருவாகறதால வர்றது" என்று பதிலளித்தார்.

ஏதோ புரிந்த மாதிரியும் இருந்தது, புரியாத மாதிரியும் இருந்தது அங்கிருந்த சிறுவர்களுக்கும், அதைத் தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பெருசுகளுக்கும். இதை உணர்ந்து கொண்ட சாமியார் "எது எப்படியோ, எல்லாரும் அவங்கவங்க மனச சுத்தமா வெச்சுக்கோங்க. எப்பவும் இறை சிந்தனையோட, எல்லாருக்கும் நல்லதா நெனச்சு, நல்லதையே பண்ணுங்க. கெட்ட எண்ணங்கள் இல்லாத எடத்துல, நீங்க சொல்ற மாதிரி எந்த கெட்ட ஆவிகளும் இருக்காது. நம்மோட எண்ணங்கள் தான் இந்த உலகமே, நல்ல எண்ணங்கள் அதிகமா இருந்தா நல்லதே நடக்கும், கெட்ட எண்ணங்கள் அதிகமா இருந்தா கெட்டதே நடக்கும். நம் எண்ணம் போல் வாழ்வு.  இதைத்தான் நம்ம புராணங்கள் எல்லாம் எடுத்துக் காட்டுது. அதனால் எல்லாரும் நல்லதா படிங்க, நல்லதையே கேளுங்க, நல்லதையே செய்ங்க, ஓம் சிவாய நம!" என்று கூறி தன் சுருக்குப் பையில் இருந்த திருநீரை எடுத்து அங்கிருந்த அனைவருக்கும் நெற்றியில் வைத்து அனுப்பினார்.

முதல்நாள் நள்ளிரவில் வந்த ஒன்னுக்கை அடக்கவும் முடியாமல், முருங்கை மரத்து பேய்க்கு பயந்து பொடக்காலிக்கும் போகமுடியாமல், சன்னல் வழியே ஒன்னுக்கடித்ததை நினைத்து சிரித்துக் கொண்டவன், 'இனிமே நிம்மதியா போலாம்டா சாமி, பேயாவது ஒண்ணாவது" என்று மனதிற்குள் பேசியவாறு வீட்டை நோக்கி மிடுக்கு நடைப் போட்டான் கந்தவேல்.



லேபிள்கள்: , , , , , ,