பேயும், முனியும்...
ஒரு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் மூன்றாவது வகுப்பில், ரமணி டீச்சர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். "பசங்களா, இன்னிக்கு நாம படிக்கப் போறது உடற்பயிற்சி பத்தி, சரியா? யாராவது சொல்லுங்க உடற்பயிற்சினா என்னன்னு?" ஒவ்வொரு மாணவனாக எழுந்து "காலைல எழுந்து ஓடுறது டீச்சர்", "தண்டால், பஸ்கிலாம் எடுக்கறது டீச்சர்", "யோகாசனம் டீச்சர்", "தோப்புக்கரணம் டீச்சர்" என்று ஆளாளுக்கொன்று சொல்லிக் கொண்டிருந்தனர். பின்னர் டீச்சர் தொடர்ந்தார், " நீங்க சொன்னது எல்லாமே சரிதான், பரவாயில்லையே, நெறையா தெரிஞ்சு வெச்சிருக்கீங்க" என்று சொல்லி பாடத்தை தொடர்ந்து, முடிக்கும் பொழுது "பசங்களா, காலைல நாமெல்லாம் எழுந்ததும் கைய கால நீட்டி, உடம்ப வளைச்சு நெளிச்சு நெட்டி முறிக்கிறோமில்லையா அதுவும் கூட ஒரு உடற்பயிற்சி தான். தினமும் உடற்பயிற்சி செஞ்சாதான் நீண்ட நாளைக்கு நல்லா, தெம்பா, ஆரோக்கியமா இருக்கலாம் சரியா?" என்ற கேள்வியுடன் அன்றைய பாடத்தை முடித்து உட்கார்ந்தார்.
எப்படா உட்காருவாங்க என்று பார்த்துக் கொண்டிருந்த கந்தவேல் எழுந்து "டீச்சர்" என்று சொல்லி தண்ணீர் குடிக்க போவதற்காக விரல்களை மடக்கி, கட்டைவிரலை மட்டும் நீட்டி உதட்டின் மீது வைத்து சைகையால் கேட்டான். "சரி போயிட்டு வா" என்று டீச்சர் சொல்லி முடிக்கும் முன்னே ரமேஷும், சிவா வும் அதே போல் எழுந்து நின்றார்கள். "சீக்கிரம் வாங்க" என்று தலையாட்டியவர் சிவாவை மட்டும் அழைத்து 1 ரூபாய் நோட்டும், கூடவே எவர்சில்வர் டம்ளரையும் கொடுத்து டீ வாங்கி வரச்சொன்னார், அதோடு "டேய் சிவா, மறக்காம மீதி காச வாங்கிட்டு வா, நேத்து மாதிரி ரெண்டு நட போகப் பார்க்காத" என்றும் சொன்னார்.
பள்ளியின் பின்புறம் சென்று, சிறுநீரால் கோலம் போட்டுவிட்டு, வேலியில் படர்ந்திருந்த கோவைக் கொடியில் தேடி நன்கு சிவந்த கோவைப் பழங்களை பறித்து தின்றுகொண்டே, ஆட்டத்துடன் ஓட்டமுமாக எதையோ பேசிக்கொண்டே அவ்வப் பொழுது நொண்டியும் அடித்து உற்சாகமாக ஓடிய சிறுவர்கள் "டேய் பேய்க்காத்து வருதுடா" என்ற கந்தவேலின் அலறலைக் கேட்டு தடாலென்று நின்று பிறகு அவனை பிடித்து இழுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த குடிசை ஓரம் ஒதுங்கினர். குப்பைகளை அள்ளிக் கொண்டு சுழன்று சுழன்று வந்த காற்று அவர்களுக்கு முன்னால் ஒரு நாலடி தூரத்தில் கடந்து சென்றது. பயத்தில் கண்களை இறுக்கி மூடிக்கொண்டனர் மூவரும். சற்று நேரம் கழித்து சுற்றிலும் பார்த்து உறுதி செய்து கொண்டு டீக்கடைக்கு சென்றனர்.
மதிய உணவிற்கு வீட்டுக்குச் சென்ற கந்தவேல் பக்கத்து வீட்டில் இருந்த திடீர் பந்தலைப் பார்த்து பாட்டியிடம் "பாட்டி, என்ன சித்தன் வீட்ல பந்தல்லாம் போட்ருக்காங்க" என்று கேட்க, "சித்தனோட அப்பாவை முனி அடிச்சி செத்துப் போயிட்டாருப்பா, இப்போதான் தூக்கிட்டு வந்தாங்க. நீ போய் கை, கால், மூஞ்சி கழுவிட்டு வா சாப்பிடலாம். சாப்டுட்டு நான் வேற எளவுக்கு போகணும்" என்றார். தொட்டிவாசலுக்கு சென்ற அவன் அவசரவசரமாய் பித்தளை அண்டாவில் இருந்து தண்ணியை மொண்டு ஊற்றிக் கொண்டுவந்து அமர்ந்து "பாட்டி, முனி எப்படிப் பாட்டி இருக்கும், அது எப்படி அடிக்கும்?" என சாப்பாட்டை கிளறிக் கொண்டே ஆர்வம் கலந்த பயத்துடன் கேட்டான். "முனி எப்படி வேணா வரும் கந்தா, ராத்திரி நேரத்துல சலங்கை கட்டிக்கிட்டு ஜல் ஜல்னு நடந்து வரும், ஏதாவது வீட்டுல சத்தம் கேட்டா அந்த வீட்டுக் கதவ தட்டும், தொறந்து யாருனா நேருக்கு நேர் பார்த்தா ஒரே அடிதான் ஆள் பூட்டைக்கு போயிருவான், அதே மாதிரி காட்டுல இருக்கற முனி குதிரை மேல கொடுவாளோட வருமாம், அதுவே ஊருக்குள்ளார, பகல்ல, பேய்க்காத்து மாதிரி வருமாம்" என்று சொல்லி முடிப்பதற்குள், "ஐயோ பாட்டி, இன்னிக்கு என்னாச்சு தெரியுமா, இண்டர்வெல்ல ஒரு பேய்க்காத்து எங்களை அடிக்க வேகமா சுத்திக்கிட்டே வந்துச்சி, அப்படியே வானம் வரைக்கும் ஒசரமா இருந்துச்சி. அத பார்த்து நான் அப்படியே பயந்து போய் நின்னுட்டேன். நல்லவேளை ரமேஷும், சிவாவும் என்னய ஒரு குடிசைகிட்ட சடார்னு இழுத்துக் கிட்டு போனாங்க, அங்க தான் ஒளிஞ்சிக்கிட்டோம் அது போறவரைக்கும்" என்று பதறியடித்து சொன்னான். "பேய்க்காத்து கிட்டயோ, சுடுகாட்டு கிட்டயோ, ஒத்த பனைமரம் கிட்டயோ போகவே கூடாது ஞாபகம் வெச்சிக்கோ, அதுவும் கறிச்சோறு திங்கற அன்னிக்கு இந்த மாதிரி எடத்தப் பத்தி நெனச்சே பாக்கக்கூடாது நல்லா ஞாபகம் வெச்சிக்கோ" என்றது பாட்டி.
பயத்துடனே கிளம்பிய அவன் பள்ளிக்கூடம் போகும் வழியில் இருந்த சக்தி விநாயகாருக்கு தோப்புக்கரணங்களை போட்டு வேண்டிக்கொண்டே சென்றான். தன் பாட்டியிடம் கேட்ட விவரங்களை தன் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, ஆளாளுக்கு ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார்கள். "நெசந்தாண்டா உங்க பாட்டி சொன்னது, இப்படித்தான் எங்க சித்தி சினிமாக்கு போயிட்டு வர்றப்போ ஒரு பனைமரத்து பேய் புடிச்சிக்கிச்சி, அப்புறம் அத வைரமுனீஸ்வரன் கோயிலுக்கு கூட்டிட்டு போய் பேய் ஓட்டினாங்க, அப்படியே உச்சி மயித்த புடிச்சி அங்க இருந்த வேப்பமரத்துல கொண்டு போயி ஆணி அடிச்சாங்க" என்று உச்சஸ்தாயில் ஒப்பித்தான். இவன் கத்தின கத்தில் ஆபீஸ் வேலை பார்த்துக் கொண்டிருந்த டீச்சர் "டேய் பசங்களா, அங்க என்னா சத்தம், அமைதியா காலைல நடத்துன பாடத்தை படிங்க நாளைக்கு வந்ததும் அதுல இருந்து பரீட்சை வைக்கப் போறேன்" என்று கத்தினார். எல்லோரும் புத்தகம் படிப்பது போல் பாசாங்குடன் குசுகுசுவென்று பேச ஆரம்பித்தனர்.
பள்ளிக்கூட மணி அடித்தவுடன் அனைவரும் தெறித்து ஓட, கந்தவேல் மட்டும் பயத்துடனே ஐந்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து வீட்டு மாரிமுத்துவின் வாலைப் பிடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான். இழவு வீடு இருந்ததால் தெருவில் விளையாடக் கூட அன்று யாரும் வரவில்லை. சாயங்காலம் குளித்து முடித்து விபூதி வைக்கையில் தாத்தா கூப்பிடும்போது 'அட போ தாத்தா உனக்கு வேற வேலையில்லை' என்று ஓடும் பையன் அன்று முகமெல்லாம் கழுவி "எனக்கும் வெச்சு விடுங்க தாத்தா" என்று பவ்யமாக வந்து நின்றான். அன்று முழுக்க தாத்தா பாட்டியிடம் அவன் பேசியது முனியையும், பேயையும் பற்றி மட்டும்தான்.
"பாட்டி, இந்த பேய், முனியெல்லாம் கெட்டதா இல்ல நல்லதா? நம்மூர்ல முனீஸ்வரர் கோயில் இருக்கே அதுதான் இந்த முனியா, செத்துப் போனவங்க தான் பேயா வருவாங்களா? அப்போ போனவருஷம் செத்துப் போனானே பக்கத்துக்கு வீட்டு தங்கராசு அவன் இப்போ பேயா சுத்திக் கிட்டு இருப்பானா? அமாவாசைக்கு மட்டும்தான் பேய் வருமா இல்ல எல்லா நாளும் வருமா?" என்று பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருந்தான். சும்மாவே தன் கற்பனைகளை அள்ளித் தெளித்து கதை சொல்லும் அவன் பாட்டி ஒவ்வொன்றுக்கும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். இறுதியில், முனி என்பது சடையிருக்கும், சலங்கை கட்டிய ஆவி என்றும், பேய் என்பது உருவமில்லாத ஆவி என்றும் இவனாகவே ஒரு முடிவுக்கு வந்தான்.
அடுத்த நாள், பள்ளிக்கு அருகிலிருந்த சித்தேசுவரர் கோயிலில் ஒரு சாமியார் புதியதாக வந்து அமர்ந்திருந்ததைக் கேட்டு கந்தவேல் அங்கு சென்றான். அவர் கையில் இருந்த தம்புரா போன்ற ஒன்றை இடைவிடாது இசைத்துக் கொண்டே இருந்தார். அவரைப் பார்க்க வந்த சிறுவர்கள் அனைவரும் கோயிலை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தனர். அங்கு வந்த கந்தவேல், அவருக்கு அருகில் போய் அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். கண்மூடி தூணில் தலை சாய்த்து ஆனந்தமாக நடுவிரலால் கம்பியை டொய்ங் டொய்ங், டொய்ங் டொய்ங் என்று இசைத்துக் கொண்டே இருந்தார். ஒரே மாதிரியாக ஒலி எழுப்பினாலும், அது ஒரு மாதிரி இதமாக இருந்தது மனதிற்கு. சற்று நேரம் கழித்து கண் விழித்த அவர், தனக்கு முன் அமர்ந்திருந்த சிறுவர்களைப் பார்த்து மெல்லியதொரு புன்னகையை சிந்தினார்.
அவரது புன்னைகையைக் கண்டதும் குஷியானார்கள் சிறுவர்கள், "தாத்தா எங்கேர்ந்து வர்றீங்க, கையில இருக்கறது என்ன வீணையா?" என்று ஒருவன் கேட்க, "நான் ஊர் ஊரா, கோயில் கோயிலா சுத்திட்டிருக்கற சந்நியாசி அப்பனே. இது வீணையில்ல, இதுக்குப் பேரு தும்பி, வடநாட்ல நான் பயணம் செஞ்சப்போ அங்க ஒரு கோயில்ல இருந்த வயசான சாமி ஒருத்தர் எனக்கு இதைக் கொடுத்தார்" என்று மெல்லிய சாந்தமான குரலில் கூறினார். "அப்போ உங்ககளுக்கு வீடே இல்லையா? சாப்பாட்டுக்கெல்லாம் என்ன பண்ணுவீங்க?" என்று கேட்டது மற்றொரு வாண்டு. "இல்லையப்பா, கோயில்கள் தான் எனக்கு வீடு, அங்க குடுக்கற பிரசாதம் தான் எனக்கு சாப்பாடு. நம்மைப் படைத்த இறைவன் நமக்கு வேணுங்கறத, அந்தந்த நேரத்துல கெடைக்கப் பண்ணிருவாரப்பா. எல்லாம் அவன் பார்த்துப்பான்" என்று மூலஸ்தானத்தை காட்டி மேலே பார்த்தார்.
"தாத்தா எப்பவாவது நீங்க பேய், முனியெல்லாம் பார்த்திருக்கீங்களா?" இது கந்தவேல். "அஹ்ஹஹாஹா என்று சிரித்தவர், தம்பி இங்க வா" என்று அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டவர். "ஏனப்பா, பேயைப் பற்றி கேட்கிறாய்? சரி நீதான் சொல்லேன், நீ பார்த்திருக்கிறாயா பேயை?" என்று வினவ. பேய்க்காத்தில் ஆரம்பித்து, சித்தன் தந்தையை முனி அடித்ததும், பாட்டி சொன்ன கதைகள் அத்தனையையும் கடகடவென சொல்லி முடித்தான். தன் வெண்தாடியை உருவி விட்டபடியே கேட்டுக்குக் கொண்டிருந்த சாமியார், இவன் முடித்ததும் மெல்ல ஆரம்பித்தார். "பேய், பிசாசு, கொள்ளிவாய் பிசாசு, முனி, சாத்தான், குட்டி சாத்தான், வேதாளம் எல்லாம் வெறும் மாயைகளப்பா. மனுஷனோட மனசுக்குள்ள தான் இருக்கு அத்தனையும். சில நேரங்கள்ல சில மனுஷனோட ஆறாத, தீராத உறுதியான நினைவலைகள் அப்படியே அங்கங்க சுத்திகிட்டு இருக்கும். அதனோட பாதிப்பு ஏதாவது நோஞ்சான் மனசுள்ள மனுஷங்களுக்கு ஏற்படும், அதனால அவங்களோட நினைவுகளும் பாதிக்கப்படும், இதத் தான் பேய் பிடிக்கறதுனு சொல்றாங்க. அதே மாதிரி, உடம்பு உறுப்புகள்ல குறையிருக்கறவங்களோ, இல்ல பயந்த சுபாவம் இருக்கறவங்களோ, சில நேரத்துல அதீத பயத்துனால குறைபாடு ஏற்பட்டு மரணமடையறத முனி அடிச்சிடுச்சினு சொல்றாங்க." என்று விளக்கினார். "அப்போ பேய்க்காத்து ஏன் வருது தாத்தா?" என்று கந்தவேலின் கேள்விக்கு, "அது எல்லா எடத்துலையும் வராதுப்பா, இந்த மாதிரி மேட்டாங்காடா இருக்கற ஊர்ப்பக்கம் கோடைகாலத்துல காத்து வெப்பமாகி வெற்றிடம் உருவாகறதால வர்றது" என்று பதிலளித்தார்.
ஏதோ புரிந்த மாதிரியும் இருந்தது, புரியாத மாதிரியும் இருந்தது அங்கிருந்த சிறுவர்களுக்கும், அதைத் தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பெருசுகளுக்கும். இதை உணர்ந்து கொண்ட சாமியார் "எது எப்படியோ, எல்லாரும் அவங்கவங்க மனச சுத்தமா வெச்சுக்கோங்க. எப்பவும் இறை சிந்தனையோட, எல்லாருக்கும் நல்லதா நெனச்சு, நல்லதையே பண்ணுங்க. கெட்ட எண்ணங்கள் இல்லாத எடத்துல, நீங்க சொல்ற மாதிரி எந்த கெட்ட ஆவிகளும் இருக்காது. நம்மோட எண்ணங்கள் தான் இந்த உலகமே, நல்ல எண்ணங்கள் அதிகமா இருந்தா நல்லதே நடக்கும், கெட்ட எண்ணங்கள் அதிகமா இருந்தா கெட்டதே நடக்கும். நம் எண்ணம் போல் வாழ்வு. இதைத்தான் நம்ம புராணங்கள் எல்லாம் எடுத்துக் காட்டுது. அதனால் எல்லாரும் நல்லதா படிங்க, நல்லதையே கேளுங்க, நல்லதையே செய்ங்க, ஓம் சிவாய நம!" என்று கூறி தன் சுருக்குப் பையில் இருந்த திருநீரை எடுத்து அங்கிருந்த அனைவருக்கும் நெற்றியில் வைத்து அனுப்பினார்.
முதல்நாள் நள்ளிரவில் வந்த ஒன்னுக்கை அடக்கவும் முடியாமல், முருங்கை மரத்து பேய்க்கு பயந்து பொடக்காலிக்கும் போகமுடியாமல், சன்னல் வழியே ஒன்னுக்கடித்ததை நினைத்து சிரித்துக் கொண்டவன், 'இனிமே நிம்மதியா போலாம்டா சாமி, பேயாவது ஒண்ணாவது" என்று மனதிற்குள் பேசியவாறு வீட்டை நோக்கி மிடுக்கு நடைப் போட்டான் கந்தவேல்.

லேபிள்கள்: குட்டி சாத்தான், கொள்ளிவாய் பிசாசு, சாத்தான், சிறுகதை, பேய், முனி, வேதாளம்