தேப்பெருமாநல்லூரில் பிரதோஷம், ஓர் இனிய அனுபவம்
ஐயாறப்பர் ஆலயமும், அங்கு நடக்கும் பிரதோஷ வழிபாடும் என்றாலே எனக்கு அலாதி பிரியம். அப்படி இருக்க, சமீபத்தில் நான் சென்ற தேப்பெருமாநல்லூர் விசுவநாதசுவாமி ஆலயத்தின் பிரதோஷ வழிபாடு வித்தியாசமானதொரு அனு பவத்தை கொடுத்தது. மற்ற ஆலயங்கள் போலவே நந்திக்கும், நாதனுக்கும் அபிஷேகங்கள் நடந்து முடிந்ததும், சற்று வித்தியாசமாக தீபாராதனைக்கு முன் குருக்கள் மைக்கை எடுத்துக்கொண்டு மேடை ஏறுகிறார். அவ்வாலயத்தின் சிறப்பையும், பிரதோஷத்தின் மகிமையையும் விளக்கி கூறிவிட்டு, சுக்லாம்பரதரத்தில் ஆரம்பித்து அத்தனை ஸ்லோகங்களையும் அவர் சொல்லச் சொல்ல மக்களையும் உடன் சேர்ந்து சொல்லச் சொல்லி அதற்கான விளக்கமும் கூறுகிறார். குறைந்தபட்சம் ஒரு 250 பேராவது இருந்திருப்பார்கள் அச்சமயம். அத்தனை மக்களும் ஒன்றாக சேர்ந்து உச்சரித்த மந்திர கோஷத்தால் மயிர்கூச்செறிய வைக்க நடந்த தீபாராதனையை காண ஏகப்பட்ட புண்ணியம் செய்திருக்க வேண்டும். அங்கிருக்கும் சிவலிங்கத்திற்கு பிரதோஷ தினத்தன்று ருத்திராக்ஷ கவசம் அணிவித்து, ருத்திராக்ஷத்தால் அர்ச்சனை செய்து அந்த ருத்ராக்ஷத்தை பிரசாதமாகவும் பக்தர்களுக்கு தருகிறார்கள் (பெண்கள் மற்றும் சிறுவர்கள் தவிர). இந்த ஆலயத்தின் இறைவன் ருத்திராக்ஷேஷுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். மற்ற நாட்களில் அந்த கவசம் கருவறைக்கு அருகில் இருக்கும் மற்றொரு அறையில் வைக்கப்படுகிறது. வழிபாடு முடிந்ததும் வந்த அத்தனை பேருக்கும் மிக மிகப் பிரமாதமான அன்னதானம் வழங்கப்படுகிறது. சக்கரைப் பொங்கல், புளியோதரை, வெண்பொங்கல், தக்காளி சாதம், தயிர் சாதம் என்று அவ்வளவு பேருக்கு எப்படித்தான் அவ்வளவு சுவையாக செய்தார்களோ!
பழைய சோறு படைக்கப்படும் அன்னதான தக்ஷிணாமூர்த்தி, கபால கணபதி, சமீபத்தில் ஒரு நாகம் வில்வத்தை இறைவன் மீது வைத்து வழிபட்ட சம்பவம், சனிபகவான் இறைவனை பிடிக்க வந்தது, ப்ரளயகாலத்தில் உலகமே மூழ்கியபொழுது இந்த ஆலயம் மட்டும் மூழ்காதது, நம்முடன் பேசுவது போல் உதடுகள் குவிந்த அம்பாள் என்று மேலும் பற்பல சிறப்புகள் கொண்ட ஆலயம்.
முக்கியமான ஒன்று, மறுபிறவி இல்லாதவருக்கு தான் இந்த இறைவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
லேபிள்கள்: தேப்பெருமாநல்லூர், பிரதோஷம்