புதன், 10 ஏப்ரல், 2019

நமசிவாய ஞானப் பால்

ஏம்பா சம்பந்தர் மட்டும்தான்  ஞானப் பால் குடிச்சிருக்காரா? நாங்களும் குடிச்சிருக்கோம்ல. என்னடா இவன் குழப்பறானேனு பார்க்கறீங்களா? சொல்றேன் மேல படிங்க...

நான் சின்னப் பையனா இருக்கும்போது அதாவது ஒரு நாலாங்கிளாஸ் இல்ல அஞ்சாங்கிளாஸ் படிச்சிட்டு இருக்குறப்போ, 'பார்வதி வந்து பால் கொடுத்தாங்களானு' கேக்காதீங்க,  அந்த கால கட்டத்துல சக தோழர்களோட எங்க ஊரு சிவன் கோயில்ல போய் விளையாடறது வழக்கம். திருடன் - போலீஸ், பச்ச குதிரை, கண்ணாமூச்சினு எக்கச்சக்கமா விளையாடுவோம். அங்க ஒரு யாளியோட வாய்க்குள்ள கல்லால செஞ்ச மொழு மொழு பால் அதாங்க பந்து ஒன்னு இருக்கும், அதைய வெளில எடுக்க பல வருஷமா நாங்க செஞ்ச முயற்சியால இன்னிக்கு அந்த யாளிய பாவம் இரும்பு கம்பி  சிறைக்குள்ள வெச்சிட்டாங்க. 'ஏன்யா எதோ ஞானப் பால்னு சொல்லிட்டு, கல்லு பால், பந்துனு சொல்லிட்டு'னு நீங்க கேட்கறது காதுல விழுது. அப்படி விளையாடறப்போ, சில நாள் திடீர்னு கோயில் குருக்கள் ரொம்ப பாசமா கூப்பிடுவாறு, “டேய் பசங்களா, வந்து ஞானப் பால் வாங்கிட்டு போங்கடா”னு. கூப்பிட்டதும் ஓடிப்போய் கைய ட்ரவுசர், சட்டையில துடைச்சிகிட்டு, பவ்யமா வாங்கி ரசிச்சி குடிச்சி, மிச்சம் இருந்தா மறுபடியும் கேட்டு வாங்கி குடிச்சிட்டு அங்கேயே கோயிலுக்குள்ளே கிணத்துல கைய கழுவிட்டோ இல்ல ட்ரவுசர்ல துடைச்சிட்டோ விளையாட போயிருவோம். அப்படி காலம் ஓடிட்டு இருக்க ஒரு நாள்  ”என்ன சாமி இன்னிக்கு விசேஷம்”னு ஒரு பையன் கேட்டுட்டான்! “இன்னிக்கு பிரதோஷம்டா, இது சாமிக்கு அபிஷேகம் பண்ணின பால், ஓம் நமசிவாயனு சொல்லிக்கிட்டே குடிங்க கடவுள் நல்ல புத்தியும், படிப்பும் கொடுப்பார்”னு குருக்கள் சொன்னாரு.  'அடடா,! இது தெரியாம சும்மாவே கைய நக்கிட்டு போயிட்டு இருந்தோமே இத்தனை நாள்னு ஒரு ரெண்டு செகண்ட் கவலைப்பட்டுட்டு மறுபடியும் விளையாட போயிட்டோம். சும்மா சொல்லக் கூடாதுங்க, ஏலக்காய், வெல்லம்லாம் போட்டு பால் ஜம்முனு ரொம்ப சுவையா இருக்கும். ஹும், நினைச்சாலே இப்பவும் நாக்கு ஊறுது.

இதெல்லாம் நடந்தது முப்பது வருஷத்துக்கு முன்னால, அப்போ எல்லாம் பிரதோஷத்துக்கு இப்போ வர்றமாதிரி கூட்டமெல்லாம் வராது, ஏதோ ஒருத்தர் அல்லது ரெண்டு பேர்தான் இருப்பாங்க, அவங்க கூட பிரதோஷத்துக்குனு வந்திருப்பாங்களா தெரியாது. பல கோவிலுக்கு பிரதோஷத்துக்கு இப்போ போறேன், ஆனா இன்னிக்கு எந்த கோயில்லயும் அன்னிக்கு குடுத்தா மாதிரி ஞானப்பால் குடுக்கறதா தெரியல. அபிஷேகம் எல்லாம் கழிவா விட்டுடறாங்க. அதுமட்டுமில்லாம  இன்னிக்கு பிரதோஷத்துக்கு வர்ற கூட்டத்துக்கு, அதெல்லாம் விநியோகிக்கறதும் ரொம்ப கஷ்டமாயிடும்.

அதே காலகட்டத்துல, ரெண்டு மூணு வருஷம் கழிச்சி, கார்டமம் மில்க் (Cardamom milk) அப்படீன்னு ஆவின் பால்ல பாக்கெட் ஒன்னு வந்துச்சி. அது கூட கிட்டதட்ட இந்த ஞானப் பால் மாதிரிதான் இருக்கும் ஆனா என்ன வெல்லத்துக்கு பதிலா சக்கரை போட்டிருக்கும். நெறையதடவ குடிச்சிருக்கேன் அதையும். எங்கேயாவது ஆவின் கடைய பார்த்தா உடனே இந்த ஏலக்காய் பால் இருக்கானு தேடுற பழக்கம் இப்பவும் என் கிட்ட இருக்கு. கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க, ஏலக்காய், வெல்லம் போட்ட பால், இறைவன் ஆசீர்வாதத்தோட, குருக்களோட அன்போட கலந்து என்ன சுவையா இருந்திருக்கும்னு, அப்புறம் நீங்களும் தேடுவீங்க.

லேபிள்கள்: , , , , ,

தேப்பெருமாநல்லூரில் பிரதோஷம், ஓர் இனிய அனுபவம்

ஐயாறப்பர் ஆலயமும், அங்கு நடக்கும் பிரதோஷ வழிபாடும் என்றாலே எனக்கு அலாதி பிரியம். அப்படி இருக்க, சமீபத்தில் நான் சென்ற  தேப்பெருமாநல்லூர் விசுவநாதசுவாமி ஆலயத்தின் பிரதோஷ வழிபாடு வித்தியாசமானதொரு அனுபவத்தை கொடுத்தது. மற்ற ஆலயங்கள் போலவே நந்திக்கும், நாதனுக்கும் அபிஷேகங்கள் நடந்து முடிந்ததும், சற்று வித்தியாசமாக தீபாராதனைக்கு முன் குருக்கள் மைக்கை எடுத்துக்கொண்டு மேடை ஏறுகிறார். அவ்வாலயத்தின் சிறப்பையும், பிரதோஷத்தின் மகிமையையும் விளக்கி கூறிவிட்டு, சுக்லாம்பரதரத்தில் ஆரம்பித்து அத்தனை ஸ்லோகங்களையும் அவர் சொல்லச் சொல்ல மக்களையும் உடன் சேர்ந்து சொல்லச் சொல்லி அதற்கான விளக்கமும் கூறுகிறார். குறைந்தபட்சம் ஒரு 250 பேராவது இருந்திருப்பார்கள் அச்சமயம். அத்தனை மக்களும் ஒன்றாக சேர்ந்து உச்சரித்த மந்திர கோஷத்தால் மயிர்கூச்செறிய வைக்க நடந்த தீபாராதனையை காண ஏகப்பட்ட புண்ணியம் செய்திருக்க வேண்டும். அங்கிருக்கும் சிவலிங்கத்திற்கு பிரதோஷ தினத்தன்று ருத்திராக்ஷ கவசம் அணிவித்து, ருத்திராக்ஷத்தால் அர்ச்சனை செய்து அந்த ருத்ராக்ஷத்தை பிரசாதமாகவும் பக்தர்களுக்கு தருகிறார்கள் (பெண்கள் மற்றும் சிறுவர்கள்  தவிர). இந்த ஆலயத்தின் இறைவன் ருத்திராக்ஷேஷுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். மற்ற நாட்களில் அந்த கவசம் கருவறைக்கு அருகில் இருக்கும் மற்றொரு அறையில் வைக்கப்படுகிறது. வழிபாடு முடிந்ததும் வந்த அத்தனை பேருக்கும் மிக மிகப் பிரமாதமான அன்னதானம் வழங்கப்படுகிறது. சக்கரைப் பொங்கல், புளியோதரை, வெண்பொங்கல், தக்காளி சாதம், தயிர் சாதம் என்று அவ்வளவு பேருக்கு எப்படித்தான் அவ்வளவு சுவையாக செய்தார்களோ!

பழைய சோறு படைக்கப்படும் அன்னதான தக்ஷிணாமூர்த்தி, கபால கணபதி, சமீபத்தில் ஒரு நாகம் வில்வத்தை இறைவன் மீது வைத்து வழிபட்ட சம்பவம், சனிபகவான் இறைவனை பிடிக்க வந்தது, ப்ரளயகாலத்தில் உலகமே மூழ்கியபொழுது இந்த ஆலயம் மட்டும் மூழ்காதது, நம்முடன் பேசுவது போல் உதடுகள் குவிந்த அம்பாள் என்று மேலும் பற்பல சிறப்புகள் கொண்ட ஆலயம்.  

முக்கியமான ஒன்று, மறுபிறவி இல்லாதவருக்கு தான் இந்த இறைவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

லேபிள்கள்: ,