நமசிவாய ஞானப் பால்
ஏம்பா சம்பந்தர் மட்டும்தான் ஞானப் பால் குடிச்சிருக்காரா? நாங்களும் குடிச்சிருக்கோம்ல. என்னடா இவன் குழப்பறானேனு பார்க்கறீங்களா? சொல்றேன் மேல படிங்க...
நான் சின்னப் பையனா இருக்கும்போது அதாவது ஒரு நாலாங்கிளாஸ் இல்ல அஞ்சாங்கிளாஸ் படிச்சிட்டு இருக்குறப்போ, 'பார்வதி வந்து பால் கொடுத்தாங்களானு' கேக்காதீங்க, அந்த கால கட்டத்துல சக தோழர்களோட எங்க ஊரு சிவன் கோயில்ல போய் விளையாடறது வழக்கம். திருடன் - போலீஸ், பச்ச குதிரை, கண்ணாமூச்சினு எக்கச்சக்கமா விளையாடுவோம். அங்க ஒரு யாளியோட வாய்க்குள்ள கல்லால செஞ்ச மொழு மொழு பால் அதாங்க பந்து ஒன்னு இருக்கும், அதைய வெளில எடுக்க பல வருஷமா நாங்க செஞ்ச முயற்சியால இன்னிக்கு அந்த யாளிய பாவம் இரும்பு கம்பி சிறைக்குள்ள வெச்சிட்டாங்க. 'ஏன்யா எதோ ஞானப் பால்னு சொல்லிட்டு, கல்லு பால், பந்துனு சொல்லிட்டு'னு நீங்க கேட்கறது காதுல விழுது. அப்படி விளையாடறப்போ, சில நாள் திடீர்னு கோயில் குருக்கள் ரொம்ப பாசமா கூப்பிடுவாறு, “டேய் பசங்களா, வந்து ஞானப் பால் வாங்கிட்டு போங்கடா”னு. கூப்பிட்டதும் ஓடிப்போய் கைய ட்ரவுசர், சட்டையில துடைச்சிகிட்டு, பவ்யமா வாங்கி ரசிச்சி குடிச்சி, மிச்சம் இருந்தா மறுபடியும் கேட்டு வாங்கி குடிச்சிட்டு அங்கேயே கோயிலுக்குள்ளே கிணத்துல கைய கழுவிட்டோ இல்ல ட்ரவுசர்ல துடைச்சிட்டோ விளையாட போயிருவோம். அப்படி காலம் ஓடிட்டு இருக்க ஒரு நாள் ”என்ன சாமி இன்னிக்கு விசேஷம்”னு ஒரு பையன் கேட்டுட்டான்! “இன்னிக்கு பிரதோஷம்டா, இது சாமிக்கு அபிஷேகம் பண்ணின பால், ஓம் நமசிவாயனு சொல்லிக்கிட்டே குடிங்க கடவுள் நல்ல புத்தியும், படிப்பும் கொடுப்பார்”னு குருக்கள் சொன்னாரு. 'அடடா,! இது தெரியாம சும்மாவே கைய நக்கிட்டு போயிட்டு இருந்தோமே இத்தனை நாள்னு ஒரு ரெண்டு செகண்ட் கவலைப்பட்டுட்டு மறுபடியும் விளையாட போயிட்டோம். சும்மா சொல்லக் கூடாதுங்க, ஏலக்காய், வெல்லம்லாம் போட்டு பால் ஜம்முனு ரொம்ப சுவையா இருக்கும். ஹும், நினைச்சாலே இப்பவும் நாக்கு ஊறுது.
இதெல்லாம் நடந்தது முப்பது வருஷத்துக்கு முன்னால, அப்போ எல்லாம் பிரதோஷத்துக்கு இப்போ வர்றமாதிரி கூட்டமெல்லாம் வராது, ஏதோ ஒருத்தர் அல்லது ரெண்டு பேர்தான் இருப்பாங்க, அவங்க கூட பிரதோஷத்துக்குனு வந்திருப்பாங்களா தெரியாது. பல கோவிலுக்கு பிரதோஷத்துக்கு இப்போ போறேன், ஆனா இன்னிக்கு எந்த கோயில்லயும் அன்னிக்கு குடுத்தா மாதிரி ஞானப்பால் குடுக்கறதா தெரியல. அபிஷேகம் எல்லாம் கழிவா விட்டுடறாங்க. அதுமட்டுமில்லாம இன்னிக்கு பிரதோஷத்துக்கு வர்ற கூட்டத்துக்கு, அதெல்லாம் விநியோகிக்கறதும் ரொம்ப கஷ்டமாயிடும்.
அதே காலகட்டத்துல, ரெண்டு மூணு வருஷம் கழிச்சி, கார்டமம் மில்க் (Cardamom milk) அப்படீன்னு ஆவின் பால்ல பாக்கெட் ஒன்னு வந்துச்சி. அது கூட கிட்டதட்ட இந்த ஞானப் பால் மாதிரிதான் இருக்கும் ஆனா என்ன வெல்லத்துக்கு பதிலா சக்கரை போட்டிருக்கும். நெறையதடவ குடிச்சிருக்கேன் அதையும். எங்கேயாவது ஆவின் கடைய பார்த்தா உடனே இந்த ஏலக்காய் பால் இருக்கானு தேடுற பழக்கம் இப்பவும் என் கிட்ட இருக்கு. கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க, ஏலக்காய், வெல்லம் போட்ட பால், இறைவன் ஆசீர்வாதத்தோட, குருக்களோட அன்போட கலந்து என்ன சுவையா இருந்திருக்கும்னு, அப்புறம் நீங்களும் தேடுவீங்க.
லேபிள்கள்: ஞானப்பால், பிரதோஷம், cardamom milk, gnana paal, pradosham, prashosham